போட்டி – செம்புலப் பெயனீர் போல!

வணக்கம்! இன்று #dosa365 – 50ஆம் பதிவு;
ஒரு சிறு போட்டி!:)

கீழ்க் கண்ட பாட்டுக்குப் பொருள் சொல்லுக:
சிறந்த நயம் பாராட்டலுக்குப் புத்தகப் பரிசு உண்டு:))

நூல்: குறுந்தொகை
கவிஞர்: செம்புலப் பெயனீரார்
திணை: குறிஞ்சி
புணர்ச்சிக்குப் பின் அவன் பிரிவானோ? -ன்னு ஐயம் கொண்ட தலைவிக்கு, அவன் சொல்லியது

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம்  தாம் கலந்தனவே!


காபி உறிஞ்சல்” -ன்னு அடிக்கடி இங்கிட்டுப் பாத்திருப்பீங்க:)

சங்கத் தமிழ்க் கவிதைகளை…
* நேரடியா வாசிக்கும் பழக்கம் வரணும்
* உரை இன்றித், தானே படிச்சிப் பார்க்கும் பழக்கம் வரணும்
…அப்படீங்கிறது, இந்தத் தளத்தின் முக்கிய நோக்கம்!

ஏன்???
பாட்டை, நேரடியா வாசிச்சாத் தான், அந்த “உணர்ச்சி” உணர முடியும்!
முத்தம் என்ன தான் செல்போன் வழியாக் குடுத்தாலும்…
நேரடியாக் குடுக்க ஏங்குவீங்க-ல்ல?:) அப்பறம் என்னவாம்?:))

பாட்டை நேரடியா வாசித்தால்…
* தமிழ்ச் சொல்லாட்சி – சொல்லடர்த்தி உணர முடியும்

* உரையாசிரியர்கள் சிலர், தங்கள் சமய-அரசியலை ஒட்டி, உரை எழுதிய பழக்கமும் உண்டு;
= தமிழ்த் திரிப்பு:((
= அதை மீறி, மூலமான கவிதையை நேரடியா வாசிக்கும் போது, உண்மை உணரலாம்!

* மேற்கோள் – தரவு தரும் பழக்கம் வளரும்
பாடல் வரிகளை, பொருள் சார்ந்த விவாதங்களில், சான்று காட்ட முடியும்
* இதெல்லாம் கூட அப்பறம் தான்!
முதலில் சொன்னபடி = “இன்ப உணர்ச்சி”; அது நேரடியா முத்தம் குடுக்கும் போதே கிடைக்கும்:)


போட்டிப் பாட்டுக்கு வருவோம்!
பிரபலமான பாட்டு தான்;
நறுமுகையே நறுமுகையே -ன்னு வைரமுத்து-ரஹ்மான் பிரபலம் ஆக்கிய சினிமாக் கவிதையும் கூட!

சங்கத் தமிழ் கடினமே அல்ல!
சங்கத் தமிழானாலும், அது ஒங்கத் தமிழ்-யா!

* பதம் பிரிச்சி எழுதினாலே, பாதிப் பொருள் புரிஞ்சீரும்!
* மீதி, அருஞ் சொற் பொருள் குடுத்தாப் போதும், முழுக்க விளங்கீரும்!
வாசகர்கள், மிக்க திறமை உள்ளவர்கள்! என்ன சொல்றீங்க?:)

அருஞ்சொற்பொருள்:
* ஆயி (தாய்); யாய் = யான் ஆய் = என் அம்மா;
* எந்தை = என் தந்தை
* கேளிர் = உறவினர்
* பெயல் = மழை (வினைச் சொல்லால் அமைந்த காரணப் பெயர்)

எ/ய = தன்மை;  யாய், எந்தை, எம்பி
ஞ/நு = முன்னிலை; ஞாய், நுந்தை, நும்பி

அவ்ளோ தாங்க! காபி உறிஞ்சிப் பொருள் சொல்லுங்க பார்ப்போம்:)
பரிசு பரிசு: பரிசை வாங்கிக் கொண்டு பிறகு வருகிறேன், அதற்குள் என்னய்யா அவசரம்?:))

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம்  தாம் கலந்தனவே!

dosa 50/365

Advertisements
Comments
52 Responses to “போட்டி – செம்புலப் பெயனீர் போல!”
 1. இன்னைக்கு என்ன எளிய தொகையா..!!

  …ஆகியரோ?
  …எம்முறைக் கேளிர்?
  …எவ்வழி அறிதும்?
  ன்னு கேள்வியிலே ஏன் முடித்திருக்கிறாள் …??

  #பதம் பாத்து பிரிப்பதில் நம் ஆட்களை மிஞ்ச முடியுமா..!! ஆனால் தேவை இல்லாததில் “பதம்” பார்த்து வெட்டிக்கொண்டிருப்பார்கள்…!

  Like

  • எளிய தொகை-ன்னாலும்…
   குறுந்தொகை-ல்லயே பெருந்தொகை-ண்ணே:)

   sooperu! those 3 questions form the prelude of this handsome kavithai
   interlude is = செம்புலப் பெயல் நீர் போல
   finale is = அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே:)

   Like

 2. குருவே சரணம்!

  காபி உறிஞ்ஜிங் :-)

  என்ன மாதிரயொரு நம்பிக்கைக்குரிய காதலன் இவன்! என்ன அழகாகக் காதலிக்கு அவர்கள் காதலின் மேன்மையை எடுத்துரைக்கிறான்!

  //யாயும் ஞாயும் யார் ஆகியரோ?//
  என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் வேறு வேறு வழியில் வந்தவர்கள்.

  //எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?//
  என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் உறவினர்களா என்ன? இல்லை.

  //யானும் நீயும் எவ்வழி அறிதும்?//
  ஆனால் நீயும் நானும் ஒருவரை ஒருவர் எவ்வாறோ புரிந்து கொண்டோம்.

  //செம்புலப் பெயனீர் போல,//
  மழை பெய்து நிலத்தில் பெறுகி ஓடும் நீர் நிலத்தின் தன்மையான செம்மண்ணுடன் இரண்டற கலந்து சிவப்பு நீராக ஓடுகிறது. அந்த நீரிலிருந்து சிவப்பு நிறத்தை இனி பிரிக்க முடியாது.

  //அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!//
  அன்பால நம்முடைய நெஞ்சங்கள் கலந்து விட்டன. அதை யாராலும் இனி பிரிக்க முடியாது. விரும்பி இணைந்த நம் உள்ளங்கள் இனி பிரியாது.

  amas32

  Like

  • கலக்கல்-ம்மா!
   இப்பிடி அம்மாவும், நண்பரும் (சங்கரும்) போட்டி போட்டா, பரிசை யாருக்குக் குடுப்பது?:)

   //அந்த நீரிலிருந்து சிவப்பு நிறத்தை இனி பிரிக்க முடியாது//
   U got the whole crux of it!

   //என்ன மாதிரயொரு நம்பிக்கைக்குரிய காதலன் இவன்!//
   yes he is!
   and a great male! i like him personally! he equates him to impure மண் & her to pure மழை!

   Like

 3. psankar says:

  அது ஒரு அழகான பின்னிரவு நேரம். அடுத்த (அதே ?) நாள் காலை நேரத்தில், வண்டியைப் பிடிக்க வேண்டிய கணவன், “இப்போது உறங்கினால் நேரத்திற்கு எழுந்திருக்க முடியுமோ !? “, என்று எண்ணி, தூங்காமலே பொழுதைக் கழித்து விடலாம் என்று முடிவெடுத்து விழித்துக் கொண்டிருந்தான். மனைவியை விட்டு விட்டு ஊருக்குச் செல்கிறானே இவன், என்று இயற்கை கூட அன்று காலையிலிருந்து மழையாக அழுது கொண்டிருந்தது. தன்னிடம் இருக்கும் ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்த மழை கொஞ்சம் ஓய்வெடுக்கத் தொடங்கியது. மேகக்கூட்டங்கள் கலைந்து நிலாப்பெண் தன்னுடைய முகத்தை கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே காட்டினாள்.

  மேகங்களில் மறைந்து மறைந்து வந்த நிலவைக் கண்ட அவனுக்கு முதலிரவில் கொஞ்சம் கொஞ்சமாய், கொஞ்சிடவாய், சிணுங்கிக் கொண்டே, நாணத்துடன் அரை இருளில் அறையில் நுழைந்த மனைவியின் முகம் நினைவுக்கு வந்தது. தன கைகளை தலைக்குப் பின் வைத்து வானம் பார்த்து படித்திருந்த அவனுக்கு, உடனே தன் மனைவியின் முக அழகைக் காணும் ஆசை வந்தது.

  அருகில் குப்புறப் படித்திருந்த அவளுடைய தோளைத் தொட்டு, தூக்கம் கலையாதவாறு, தூங்கும் கைக்குழந்தையைத் தாங்கும் சிறுமியைப் போல், மிகவும் கவனமாக மனைவியைத் திருப்ப முயன்றான். ஆனால் அவன் எதிர்பாரா வண்ணம், அவளும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள். அது மட்டுமா ? அவள் கண்களிலும் கண்ணீர். “ஏன் அழுகிறாய் ?” என்று வார்த்தைகளின்றி கேட்டன அவன் கண்களும், புருவங்களும்.

  “பொன்தேடும் நினைவினில் பெண்தாண்டிச் செல்வீரே கண்தாண்டிப் போகுமோ காதல் ?” என்று ஒரு அரைகுறைத்தனமான வெண்பாவாய் ஒரு கேள்வி கேட்டாள். தொண்டையைக் கனைத்துக் கொண்ட கணவன் சொல்ல ஆரம்பித்தான், “சுந்தரியே, சொக்கும் ருசிப் பேச்சினிலே முந்திரியே, குடும்பத்தை வழிநடத்தும் மந்திரியே ! கொள்ளலாமோ நீ சந்தேகம், தாங்குமோ அத்தீயை என்தேகம் ? இதற்காக இழந்தாயோ உறக்கம் !? என்றும் தீராது உன்மேல் நான் கொண்ட கிறக்கம். உயிரை உன்னிடமிட்டு உடலைச் சுமக்கிறேன் மயிலே நாம் வாழ”. வெண்பாம்த்தனமான அவன் பதிலில் சமாதானம் அடைந்த அந்த மயில், “பாதியில் வந்தவள்தானே என்று நீங்கள் நினைத்து விட்டால் பாவியாகிப் போவீர்கள் நினைவிருக்கட்டும்” என்று மிரட்டலாய்க் கொஞ்சினாள்.

  சற்றே யோசித்து அந்த கணவன் சொல்லத் தொடங்கினான், “சில நாட்களுக்கு முன்புவரை, உன் தாயும் என் தாயும் யாரோ ! உன் தந்தையும் என் தந்தையும் உறவினரும் அல்லர். நானும் நீயுமே ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை. பூமிப் பந்தில் இருக்கும் அழுக்கான மண்ணாக நானும், மேகங்களில் ஓய்வெடுக்கும் தூய்மையான நீராக நீயும், வெகு தூரத்தில் இருந்தோம். நம் மனமொத்த ஒரு நன்னாளில், ஊரார் மெச்சிய ஒரு பொன்னாளில், மழையாக நீ வந்தாய் என்னுள். தண்ணீரை தான்பெற்றால் ஊருக்கே மணம் பரப்பும் மண்ணென உலகிற்கே பரவியது நம் மனத்தின் வாசம். இத்தனை நாள் தூரமாய் இருந்த நீரும் மண்ணும் பிணைந்து, வேறு வேறாகப் பிரிக்க முடியா சேறாவது போல நாம் இனைந்து போனோம். நம் நெஞ்சங்கள் இணைந்ததை சேற்றுக்கு இணையாகச் சொல்ல மற்றுமொரு காரணமும் உண்டு. மழை வந்து நனைத்தபின் சேறு பல பயிர்களையும் முளை விடச்செய்யும். நாமும் அது போல சில உயிர்களையேனும் முளைக்கச் செய்ய வேண்டும்”.

  இதையே ஒரு சங்ககாலப் பாடலில், “யாயும் ஞாயும் ……..” என்று புலவர்கள் பாடியுள்ளனர் :)

  Like

  • யோவ்!
   சிறுகதைப் போட்டி போல எழுதிட்டீரு!:) ஒவ்வொரு வரியும் ரசித்துப் படித்தேன், ஊடால உங்க சொந்த அனுபவங்களையும்:))
   இராத்திரி, ஏதோ தூங்காம, வானத்தைப் பாத்து இருக்கீரு -ன்னு மட்டும் நல்லாத் தெரியுது!:)

   You have covered some of the very subtle things in this kavithai; Almost my thinking:)
   examples:
   * தூங்கும் கைக்குழந்தையைத் தாங்கும் சிறுமியைப் போல்
   * ஏன் அழுகிறாய் ?” என்று வார்த்தைகளின்றி கேட்டன அவன் கண்களும்
   * மிரட்டலாய்க் கொஞ்சினாள்.

   and the ultimate subtle is
   //நாமும் அது போல சில உயிர்களையேனும் முளைக்கச் செய்ய வேண்டும்//
   advance wishes:)

   Like

   • psankar says:

    அண்ணா, சொந்த அனுபவம் எல்லாம் இல்லீங்கண்ணா. முழுதும் கற்பனையே. தவிர, நாம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில், எங்கிருந்து மல்லாக்க படுத்துக் கொண்டு வானத்தைப் பார்ப்பது !?

    Like

  • எவ்வளவு சூப்பரா எழுதறீங்க, போட்டின்னா தான் பின்னூட்டம் இட வருவீங்களா? :-)))

   மழை நீர் மணவாளானாகவும் நிலம் மணவாட்டியாகவும் தான் நினைத்திருந்தேன். ஆனால் காதலியை மழையாக நீங்கள் சொல்லியிருக்கும் அழகும் அழகே :-)

   கூடலுக்கு பின் உயிர்களின் உருவாக்கத்தையும் சொல்லியிருப்பது – அவள் இனி அவனை சந்தேகமே பட மாட்டாள் என்று நிச்சயமாக சொல்லலாம். :-)

   வாழ்த்துகள்!

   amas32

   Like

   • psankar says:

    நன்றி :-) நான் கத்துக்குட்டி, அவ்வளவே. http://psankar.blogspot.in/2012/07/2.html

    நீங்கள் சொல்வது சரிதான். போட்டி என்பதால்தான் இன்று பின்னூட்டம் இட்டேன். பொதுவாக நான் Google Reader இல் மாதம் ஒரு முறை எல்லா பதிவுகளையும் மொத்தமாகப் படித்து விடுவேன். இங்கு எழுதுபவர்கள் மிகவும் ரசித்து எழுதுவதால், தினம் வேலைப்பளுவின் நடுவே, ஏனோ தானோ என்று புரட்டிப் போக மனம் ஒப்பவில்லை :)

    Like

 4. சொ.வினைதீர்த்தான் says:

  நண்பர்களைத் தூண்டிவிட்டுள்ளீர்கள்!
  இன்று காதல் இடம் பார்த்துத் தொன்றுகிறது என்பதைக் குறிக்க மீரா எழுதிய நாம் திருநெல்வேலிப் பிள்ளைமார், திருமண முறையினர், நம் நெஞ்சம் கலந்தன என்ற பகடிப் பாடல் நினைவுக்கு வருகிறது.
  அன்புடன்
  சொ.வினைதீர்த்தான்.

  Like

  • I like “thooNdi vittings”:)
   நான் பேசுவது எழுதுவது = சின்ன இன்பம் தான்!
   மற்ற உள்ளங்களைத் தமிழில் தூண்டி, அதைக் கேட்பதும் காண்பதும் = பெரிய இன்பம்:)

   I did the same for #PaavaiPodcasts, last year! Enjoyed it with real fun!
   தமிழைக் கூடி இருந்தாத் தான், குளிர்ந்தேலோ ரெம்பாவாய் ஆவுது! அம்மட்டில் ஒரு மகிழ்ச்சி என்னுள்:)

   Like

 5. rajandr says:

  செம்புலப் பெயனீர் போல 

  சிவப்பாக இருக்கும் அவளது அல்குல்(யோனியின்) மீது அவனின் விந்து பெய்து என்று அவர்களின் புணர்ச்சியை விவரிக்கும் அற்புத உவமை 

  Like

  • வணக்கம் ராஜன்;
   ராஜன்-ன்ன அதிரடியா? அதிரடி-ன்னா ராஜனா?:))

   நீங்கள் சொல்வதைத் தமிழ்ப் பண்டிதர்கள் சிலரு ஒப்புக்கிட மாட்டாங்க!
   நான் பண்டிதன் அல்லன்; இருந்தாலும் சொல்லுறேன்; What u said is right!
   உடற் பொழிவு பாட்டில் இருக்கு!

   எப்படி-ன்னு பின்பு விளக்குகிறேன்!:)
   இப்போ, இன்னும் வருபவர்களுக்குச் சற்று இடம் விட்டு வைப்போம்!

   Like

 6. அன்பின் கேயாரெஸ்

  நீண்டதொரு மறுமொழி இட்டிருந்தேன் – வெள்ளைக் காக்காய் தூக்கிக் கொண்டு சென்று விட்டது போலும் – மட்டுறுத்தலுக்காக இருப்பின் பப்ளிஷ் செய்யவும் . நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 7. “செம்புல பெயல் நீர் போல”

  மற்ற வரிகளை விட்டுவிடலாம், அவை தரும் பொருள் நேரடியாக அனைவரும் அறிந்து கொள்ள கூடியதே

  ஆயினும் செம்புல பெயல்நீருக்கு தமிழ் ஆசிரியர்கள் ஒரு மணிநேரத்திற்கு மேலாக உரை சொல்வார்கள் என்று பட்டிமன்றத்தில் கேட்டிருக்கிறேன்

  சிறிது தாமதமாக வந்ததால் இதுவரை நான் எண்ணியிருந்த பொருள்களை ஏற்கனவே ஆராயப்பட்டு விட்டது
  1. செம்மண்ணோடு கலக்கும் நீரானது தன் இயல்பிலிருந்து மாறி பின்னே பிரிக்கமுடியாது
  2. இதுவரை வெளிதெரியாத உயிரினங்கள் மழையின் தாக்கத்தால் வெளிவரும்

  ஆக நீண்ட பதிவை எதிர்பார்க்கிறேன்

  Like

  • Sooper Vijai
   //இதுவரை வெளிதெரியாத உயிரினங்கள் மழையின் தாக்கத்தால் வெளிவரும்//
   – Fantastic! No one told this so far; Sankar said abt crops, not this one!:)

   Question to u:
   //செம்மண்ணோடு கலக்கும் நீரானது தன் இயல்பிலிருந்து மாறி பின்னே பிரிக்கமுடியாது//

   மற்ற மண் (வண்டல்/கரு மண்/களி மண் etc), கலந்தால், அப்போதும் நிறம் மாறும் தானே?
   அப்படி என்ன செம் மண்ணில் விசேடம் (சிறப்பு)?:)) Guess, Guess!:)

   Like

   • விசேஷ நாட்களில் வாசலில் கோலம போட்டு செம்மண் இடுவது வழக்கம். செம்மண் வளமையை குறிக்கும். செம்மண்ணில் நன்றாக பயிர் விளையும். அன்பால் இணையும் வாழ்க்கை மங்களகரமாக அமைய அவ்வாறு சொல்லியிருக்கலாம். மேலும் உங்கள் வேள்ளையுடையில் செம்மண் சகதி பட்டு அதை எடுக்க முயற்சி செய்திருக்கிறீர்களா? சாயம் போவது வெகு கடினம். இங்கே அன்பு அவர்களை அந்தளவு பிணைத்துள்ளது, பிரிக்க முடியாது :-)

    amas32

    Like

 8. அன்பின் கேயாரெஸ்

  செம்மண் நிலத்துப் பெய்த மழை நீர் அந்நிலத்தின் இயல்பைப் பெறுதல் போல எங்கிருந்தோ வந்த நீயும் நானும் அன்பால் கலந்தோம்.

  நீர் தான் எதனோடு கலக்கின்றதோ அதனின் இயல்பைப் பெறுதல் இயல்பு. அதற்கென்று தனி இயல்புகள் இல்லை. நிறமும் மணமும் குணமும், தான் சேர்ந்தவற்றையே பெற்று மிளிரும்.

  என்னுடைய தாயும் தந்தையும் யாரோ ? உன்னுடைய தாயும் தந்தையும் யாரோ ? அவர்கள் எம்முறையில் ஒருவருக்கொருவர் உறவோ – யாமறியோம். ஆனால் நம் அன்பு நெஞ்சங்கள் ஒன்று கலந்து விட்டன.

  விண்ணின் மழை மண்ணின் இயல்பைப் பெறுதல் போல நாம் அன்பால் இணைந்து விட்டோம். எத்தகைய உயர்ந்த நட்பு ! எவ்வளவு பெரிய உள்ளம். ! எத்துனை சிறந்த உணர்வு ! இப்பொழுது இருக்கின்றதா இங்கே ?

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பி.கு : மறுமொழி உபயம் என் துணைவியார்
  பரிசு வேண்டுமாம் – புத்தகம் எங்கே ? முகவரி தெரிய்மல்லவா ?

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  Like

 9. திணை குறிஞ்சி எனில், மண் சிவப்பாக இருப்பது எப்படி? செம்புலம் (சிவப்பு மண்) முல்லைக்கு உரியது அல்லவா? இவ்வாறு சிந்தித்தால், செம்புலம் என்பதை செம்மையான (செம்மை படுத்தப்பட்ட) நிலம் என்றும் பொருள் கூறலாம். அப்படி எனில், பொருள் சற்றே வேறுபடும். சம தளத்தில் பெய்யும் நீர் ஒன்று கலப்பது போல (கலந்து மற்றொரு புறம் செல்லாது ஓரிடத்தில் நிற்பது போல) நம் நெஞ்சங்கள் கலந்துவிட்டன. இனி அவை வேறு புறம் செல்லா.

  இப்படிப் பொருள் கூறுவது சரியா?

  Like

  • Cool, வித்தியாசமான பார்வை!
   வாழ்த்துக்கள் kskarun

   சில சமயம் திணை மயக்கம் உண்டு; மயில் முல்லையில் வரும்; செம்மண் குறிஞ்சியில் வரும்..etc
   Letz wait for some more ppl:)

   Like

   • ஆம். திணை மயக்கம் தான். ஆனால் ஒரு மாறுபட்ட பார்வையாக இருக்கட்டுமே என்றுதான்… :-)

    Like

    • Rajasekar says:

     செம்புலம் என்பது பாலை நிலஹ்தைக் குறிக்கும். பாலை நிலத்தில் பெய்யும் மழை நீரானது எங்கும் செல்லாமல் உள்ளுக்குள்ளேயே அடங்கி விடும். அது போல் தலைவனும் தன்னுடன் கலந்து விட்டான், இனி எங்கும் செல்லமாட்டான் என்று பொருள் கொள்ள வேண்டும். மாறாக மழை நீரானது நிறத்தை மட்டும் எடுத்துச் சென்றது என்று எடுத்தால் அது தலைவியின் அழகை மட்டும் எடுத்துச்ஹ் சென்றதற்கு சமமாகிவிடும். ஏனெனில் என் அழகை மீண்டும் கொடு என்ற பொருளில் அமைந்த பாடல்கள நெய்தல் நிலத்தில் உண்டு.

     Like

 10. அன்பின் கேயாரெஸ் = எனது நீண்ட மறுமொழி பார்வைக்குவர வில்லையா ? இங்கு பிரசுரிக்கப் பட்டிருக்கிறது…….. ஆனால் கேயாரெஸ்ஸின் கமெண்ட் காணவில்லையெ – ஏன் ? நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

  • ஆகா! அடிச்சி வாங்குறாங்கப்பா My Commentஐ:))
   இதோ, சீனா சார்… Was trying to podcast today’s kamban post – திரிசடை:)

   * நீர் எங்கிருந்தோ வந்துச்சி
   * நீருக்கு-ன்னு தனித்த வடிவம் இல்லை! எல்லாத்தையும் உள்ளடக்கியது, எதுல புடிக்கிறோமோ, அது போல நிறம்/சுவை
   = நல்ல பார்வைகள்!

   அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்:)
   போச்சு, இராம.கி ஐயாவைத் தான் நடுவராக் கூப்புடணும் போல, பரிசைத் தேர்ந்தெடுக்க!:)

   Like

 11. ranjani135 says:

  எல்லோருடைய பதிலும் அசத்தல்! பி.சங்கர் அழகிய சிறுகதை எழுதிவிட்டார்.
  எல்லாப் பின்னூட்டங்களுக்கும் நீங்கள் கொடுத்திருக்கும் பதிலும் equally good!

  என்னுடைய தமிழ் புலமையை இதற்கு மேல காட்ட வேண்டாம்! கருத்துக்கு உணவிட்ட எல்லோருக்கும் பாராட்டுக்கள்!

  Like

 12. அனைவரின் அழகிய ஊக்கத்துக்கும் நன்றி!
  போட்டியின் முடிவாக, பின்னூட்டங்களை, எழுத்தாளர் ஷைலஜா அவர்களிடம் அனுப்பியுள்ளேன்;
  அவர்கள் சிறந்ததொரு பின்னூட்டத்தைத் தேர்ந்து தந்த பின்.. பரிசு = சங்கத் தமிழ்ப் புத்தகம்!:)

  அதுக்கப்பறம், இந்தப் பாட்டுக்கு என் கருத்தையும் சொல்லுறேன்!
  கையைக் கட்டிக்கிட்டு இருந்தேன்… பாட்டின் முதல் மூன்று வரிகள் தேவையில்லை -ன்னு அன்பர் ஒருவர் சொன்ன போது:))

  பாட்டின் களமே அந்த வரிகள் தானுங்கோ!
  * யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
  * எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
  * யானும் நீயும் எவ்வழி அறிதும்?
  Direct Linking of பெற்றோர் காதல் to நம் காதல்:) Who are the best lovers? Our Parents or Us?:))

  Like

  • rajandr says:

   பொதுவாக ஒரு கேள்வி. 
   நேரடி பொருளை தவிர்த்து ஒரு பாடலுக்குள்/கவிதைக்குள் இருக்கும் கருபொருள் மறைபொருள் காண்பது எல்லாமே வாசிப்பவரின் perception/interpretation  தானே? 

   Like

   • //வாசிப்பவரின் perception/interpretation தானே?//
    ha ha ha; yessu:)

    கவிதை -ன்னா என்ன? = அக உணர்ச்சி
    அகம் யாருக்கு இருக்கு?
    * எழுதியவருக்கு இருக்கு; அதனால் பதிக்கிறார்!
    * ஆனா வாசிப்பவருக்கும் இருக்கே; அதனால் அவரும் பதிக்கிறார்!

    அதுக்காக எழுதியவரின் மூலக் கூற்றில் மாறுபட்டுச் சொல்லி விட முடியாது;
    படைத்தவனின் அகத்தோடு ஒத்திசைந்து சொல்லும் அக உணர்ச்சிகள் = ஒரு கவிதைக்கு எழில் “நலமே”!

    அதான் தமிழில் “நயம்” பாராட்டுதல் -ன்னு சொன்னாய்ங்க!
    So, வாசிப்பவரின் interpretation வரவேற்கத்தக்கதே!:)

    Like

 13. போட்டி முடிவுகள் from எழுத்தாளர் ஷைலஜா (http://shylajan.blogspot.com):
  —————-
  இங்கு உள்ள அனைத்துப் பின்னூட்டங்களையும் வாசித்தேன்.
  அற்புதமான இலக்கியப்பாடல் இது அளவில் சிறியது அர்த்தமோ நெடியது !
  ஆமாம் முக்கியமாய் செம்புலப்பெயநீருக்கு எத்தனை எத்தனை விதமான சிந்தனைகள்!

  சங்கரின் கருத்து சிறுகதைப்போல நீண்டிருந்தது உண்மைதான். அதனால் என்ன மயிலுக்கு தோகை நீளம் தான் ஆனால் அதுவே ஓர் அழகுதானே! அவருடைய மழை-சேறு-சிந்தனை சற்றே புதுமை!
  திரு சீனா அவர்களுடைய கருத்தும் சரியே அதே போல மற்றவர்களுடைய சிந்தனைக்கோணங்களும் சிந்திக்கவைத்தன.

  amas32
  இவர் பேர் என்னனு தெரியலை
  நீரைப்பிரிக்கலாம் மண்ணைப்பிரிக்கலாம் நிறத்தைப்பிரிக்கமுடியுமா அதுதான் காதல்
  அதனால் இந்த பின்னூட்டம் சின்னதா இருந்தாலும் செய்தி புதுமை பரிசு இவருக்கே!
  —————-

  என்னுடைய பார்வை:
  சிவந்த மண்ணில் (வெறும் மண்ணென்று கூறாமல் சிவந்த மண் என்றது மண்ணின் பதத்திற்கு ஒப்பாகிறது)
  காதலின் வெட்கம் செம்மை
  வெட்கம் இருபாலருக்கும் பொது

  – shylaja

  Like

  • நன்றி Ms Shylaja :-) என் பெயர் சுஷீமா சேகர் :-) திரு சொக்கன், திரு KRS, திரு ராகவன் மூலம் தான் நான் தமிழ் கற்றுக் கொள்கிறேன். எனக்கு பரிசை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. மட்டற்ற மகிழ்ச்சி :-) எனக்கு இது பெரிய ஊக்கத்தைத் தருகிறது.

   நன்றி KRS :-)

   Regards,

   amas32

   Sushima Shekar

   Like

  • psankar says:

   vaazhthugal @amas32 :)

   Like

 14. தமிழ்ச்சங்கமே நடத்துறீர் இங்க..நைஸ்..

  Like

  • யோவ், நான் என்ன பாண்டியன் அறிவுடைநம்பியா, தமிழ்ச் சங்கம் நடத்த?:))
   இது ஆர்வலர் திரள்; என் பங்கு பெருசா ஒன்னுமில்ல!

   Like

 15. அன்பின் சுஷீமா சேகர் – பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகளூம் நல்வாழ்த்துகளும் – நட்புடன் சீனா

  Like

 16. அட!!! அருமைங்க. தமிழ் விரும்பி பேர்ல போட்டுட்டு சும்மா இருந்தேன். நிறைய படிக்க ஆர்வம் வந்துள்ளது தங்களது இந்த பதிவால். – கார்த்திகேயன்.வி

  Like

 17. வாழ்த்துக்கள் சுஷிமா சேகர் (எ) amas32 :))
  பரிசுப் புத்தகம் = தமிழ் இலக்கிய வரலாறு, by டாக்டர் மு.வ
  Book is ordered this morning from பாரி நிலையம் & on your way!:)

  டாக்டர் மு.வ = மிகப்பெரும் தமிழ்த் தும்பி;
  இந்த நூல் = எளிய உரைநடையில், சங்க இலக்கியம் + பிற்கால இலக்கியத்துக்கு, எளிமையான முன்னுரை!
  உங்கள் ஆர்வத் துளிர்ப்பு, மேலும் பெருகி மகிழ வாழ்த்துக்கள்!
  ————-

  போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்; இன்னும் நிறைய போட்டி வரும்:))
  என்னைக் கவர்ந்த பின்னூட்டம் தந்த சங்கருக்கும், இனிய வாழ்த்துக்கள்!

  Like

 18. ஒரு பாட்டை எப்படி அணுகுவோம்?
  * முதலில் நேரடி வரிகள்
  * அப்பறம் நேரான பொருள்
  * பின்பு நம் மனசில் எழும் உள்ளார்ந்த பொருள்
  * பாட்டின் சூழலை வச்சி, இந்தப் பொருளைச் சமன் செய்து கொள்வோம்;
  * பின்பு அசை போட்டு மகிழ்வோம்! அல்லவா?:)
  ———————

  பாட்டின் நேரான பொருள் என்ன?

  ஏய், ஒங்க அம்மாவும் என் அம்மாவும் Friends-ஆ?
  ஒங்க அப்பாவும் எங்க அப்பாவும் Business Partners-ஆ?
  ஒனக்கும், எனக்கும் எப்படிடீ கனெக்சன் ஏற்பட்டுச்சி?

  சரி, அது கிடக்கட்டும்! எப்படியோ ஏற்பட்டுச்சி!
  எப்படி ஏற்பட்டுச்சி -ன்னு தெரியலீன்னாலும், ஒன்னு மட்டும் நல்லாத் தெரியுது;
  நம்ம அன்பு மாறவே மாறாது; செம்மண்ணுலு பெய்ஞ்ச மழைத் தண்ணி போல
  ———————

  இம்புட்டு தான் இதுக்கு நேரான பொருள்!
  ஆனா, கவிஞன் உள்ளம், இதை ஒப்புக்கு எழுதுனாப் போலத் தெரியலை அல்லவா?

  * கவிஞனனுக்கு ஒரு உள்ளம் இருக்கு = எழுதி விட்டான்
  * வாசிக்கும்/சுவாசிக்கும் நமக்கும் ஒரு உள்ளம் இருக்கே = நாமும் எழுதுகிறோம்… அவனை அடியொற்றி!
  ———————

  குறுந்தொகை! = ஐஞ்சே வரி!
  அதற்குள் மொத்த உணர்ச்சியும் கொட்ட வேண்டும்!
  கலவி எவ்வளவு நேரம் வேணாலும் நீட்டிக்கலாம்! ஆனா உச்ச-உணர்ச்சியின் தருணம் = ஐஞ்சே நொடி தானே?:))

  பாட்டின் முதல் மூனு வரிகளில் = ஒரு களம் அமைக்கிறான்!
  இந்த வரிகளை ஒதுக்கித் தள்ளீற முடியாது!
  * யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
  * எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
  * யானும் நீயும் எவ்வழி அறிதும்?

  எதுக்கு அம்மா-அப்பாவை இழுக்கணும்?
  நானும் நீயும் எப்படிச் சந்திச்சோம், ஞாபகம் இருக்கா? அந்தச் சோலையில் யானை புகுந்துச்சி…
  மலர் கொய்த நீ, என் மேல் சாய,
  நான் உன்னைக் கொய்தேன், நாமும் சாய்ந்தோம் -ன்னு சொல்லி இருக்கலாமே?:))
  குறிஞ்சிக் கருப்பொருள் = யானை -ல்லாம் வரும்! பாட்டும், அகநானூறு போல், சங்கப் பாடற் கூறு கொண்டிருக்குமே!
  Why this amma-appa comparison? Any one?:)

  Like

  • யாய்-எந்தை; ஞாய்-நுந்தை!
   அதே போல் நான்-நீ!

   பாட்டின் சூழலையும் பாத்துக்கோங்க!
   புணர்ச்சிக்குப் பின், அவளுக்கு மென் சோகம்!
   = நம்மை அவனுக்குக் குடுத்துட்டோமே? அவனும் முழுமையா எனுக்குக் குடுத்துட்டானா?

   பெண்கள் இப்படித் தான்; ஆண்கள் அப்படி அல்ல!
   * பெண்களுக்கு உணர்ச்சியைப் பேசணும், உள்வாங்கணும்
   * ஆண்களுக்கு உணர்ச்சியை அனுபவிச்சிடணும்:)
   இவ பொண்ணு; ஏங்குறா! ஏங்க ஏங்க -ன்னு ஏங்குறா!

   கலவி இன்பம் கலவியோட போச்சா?
   = இல்லை! அடுத்த கலவிக்கு அடி போடணும்
   = உள்ளக் கலவி – உடல் கலவி – உள்ளக் கலவி – உடல் கலவி; Itz a cycle!
   அதான், அவ உடல் முடிஞ்சி, அவ உள்ளத்தோடு பேசுறான், பையன்:)
   ———————

   ஏன்டீ, என்னமோ யோசனையா இருக்க?
   நாம எங்கே மொதல்ல பாத்துக்கிட்டோம்? ஞாபகம் இருக்கா?
   நீ யாரு? -ன்னு எனக்குத் தெரியாது; நான் யாரு? -ன்னு உனக்குத் தெரியாது!
   (ஆனாலும், முருகன் அருளால், இப்படி ஆயிட்டோமோ என்னவோ? – My own feelings, Not in song)

   * யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
   * எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
   This is not just my mom & your mom!

   பின் வரு நிலை!
   முதலடி முதல் = யாயும்; இரண்டாம் அடி முதல் = எந்தையும், ஒன்னு கூட்டணும்!
   முதலடி இரண்டு = ஞாயும்; இரண்டாம் அடி இரண்டு = நுந்தையும், ஒன்னு கூட்டணும்!

   Example: அன்பும் அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
   பண்பும் பயனும் அது
   இல்வாழ்க்கையின் பண்பு = அன்பு; பயன் = அறன்!
   பின் வரு நிலை -ன்னு பேரு!
   ———————

   எங்கம்மாவும் எங்கப்பாவும் = இன்னும் இல்லறமா இருக்காங்க-ல்ல? அதுல வந்த முத்து தானே நானு?
   ஒங்கம்மாவும் ஒங்கப்பாவும் = இன்னும் இல்லறமா இருக்காங்க-ல்ல? அதுல வந்த முத்து தானே நீயி?
   அதே போல…யானும் நீயும் எவ்வழி அறிதும்? = அவர்கள் வழியே அறிதும்!

   A Girl has a great “confidence feeling” – when getting associated with her Parents!
   He touches that feeling, to make her confident of him also! A Gem Guy!

   பயப்படாதடீ, இன்னிக்கி நாம் கண்ட புணர்ச்சி, காலமெல்லாம் தொடரும்!
   உடல் புணர்ச்சி – உள்ளப் புணர்ச்சி – உடல் புணர்ச்சி – உள்ளப் புணர்ச்சி… தொடரும்!
   அவிங்கள போலவே நாமும் ஆவோம்! நாமும் முத்து சிந்துவோம்!
   வா, என்னோடு, என் வாழ்வோடு!

   * யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
   * எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
   * யானும் நீயும் எவ்வழி அறிதும்?

   Like

  • Next comes the real action, after the scene setting
   * செம்புலப் பெயல் நீர் போல…
   * அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!

   இதுக்கு வாசகர்கள் நீங்க சொன்ன அனைத்துமே சரி!
   சற்றே மேலதிகமாய்…
   —————————–

   * மண்ணு எப்படி வந்துச்சு? = மழையால் வந்துச்சி!
   மழைத் தண்ணி, ஆறு அடிச்சி அடிச்சித் தானே, ஓரமா மண்ணு சேருது?
   * ஆண் எப்படி வந்தான்? = பெண்ணால் வந்தான்!

   அப்போ பெண் எப்படி வந்தாள்? = ஆணால் வந்தாள்!
   * மண்ணுல ஓடுற தண்ணி தானே, ஆவியாகி, மழையா ஆவுது!

   ஆக, யாரால் யார் வந்தா -ன்னு சொல்லவே முடியாது!
   இருவராலும் இருவரும் வந்தார்கள்! இருவராலும் இருவரும் இருக்கிறார்கள்!
   —————————–

   இப்படிச் செம்மண் பூமியில், தண்ணி பாயுது!
   அவன் மண்; அவள் = மழை!
   மண்ணும் மழையும் சேரச் சேர = உலக வளங்கள் உருவாகும்! உணவு உருவாகும்!
   உணவால்… புதிய உயிர்கள் உருவாகும்!

   மண்ணுக்கு -ன்னு ஒரு வாசம் உண்டு! ஆனா பளிச் -ன்னு தெரியாது!
   மழை பெய்யும் போது தான், மண் வாசனை அறிய முடியும்!
   அது போல, அவ பெய்யும் போது தான், அவன் வாசனை அறிய முடியும்!

   Like

   • மற்ற மண் கறை -ல்லாம் போயீரும்!
    ஆனாச் செம்மண் கறை போவறது ரொம்பக் கடினம்!
    அது போல, கலந்து விட்ட அவுங்க அன்பு போவறதும் ரொம்பக் கடினம்!
    = அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
    —————————–

    மண் சிவப்பு, நீரும் சிவப்பு
    = இந்தப் புணர்ச்சியில், இருவரும் சிவக்கிறார்கள், வெட்கத்தால்/இன்பத்தால்
    = அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
    —————————–

    மண் சிவப்பு = அதன் குணம் தான்!
    ஆனா நீர் சிவப்பு? = நீர் தூய்மை!
    மண்ணுக்காக, தன் தூய்மையும் துறந்து, அவனை முழுமையா உள் வாங்கிக் கொள்வது!
    இந்தச் சிவத்தலால் = உணவு விளைந்து, உயிர் விளையுது!

    பெண் சிவப்பு = பெருமை!
    = அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
    —————————–

    அவர்கள் உடல் இன்பத்தில்…
    அவ சிவப்பாகி, அவன் துளி ஆகி விடுறான்! பெயல் நீர்
    அவர்கள் உள்ள இன்பத்தில்…
    அவன் சிவப்பாகி, அவள் துளி ஆகி விடுறா! பெயல் நீர்

    = அன்புடை உறுப்பு தாம் கலந்தனவே!
    = அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!
    —————————–

    இந்த நீர்ச் சிவப்பு, இனி போகவே போகாது! = சூரியன், மறுபடியும் நீரை உறிஞ்சிக் கொண்டால் ஒழிய…
    அது போல், அவளும் போகவே மாட்டாள்! = அவள் உயிரை உறிஞ்சும் வரை, அவனே! அவனே அவனே!
    = அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
    —————————–

    இதுவே, பாடலின் பொருள் அல்ல…..!
    பாடலின் தாக்கம், என்னுள்!

    முருகவா!

    Like

 19. அருமையான பகிர்வு

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…

  திரு. ரஞ்ஜனி நாராயணன் அம்மா அவர்களின் அறிமுகம்-இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்…

  நேரம் கிடைத்தால் என் தளம் வாங்க… நன்றி…

  Like

  • நன்றி தனபாலன்!
   ரஞ்சனி அம்மாவுக்கு என் நன்றி பல; அவரின் தமிழார்வம் கண்டு எனக்கு மிக்கபெரும் களிப்பு!:)

   Like

 20. devarajan97 says:

  சங்கத் தமிழின் அழகே இயல்பு நவிற்சிதான்;
  மனத்தோடு ஒட்டிக் கொள்கிறது.
  அழகும் கருத்தாழமும் வியப்பைத்
  தருகின்றன

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: