Sangam Cinemas – பழி வாங்கிய மகள்!

பல பழிவாங்கும் சினிமாப் படங்களைப் பாத்துருக்கோம்;
பெரும்பாலும் கதைநாயகன் தான் பழிவாங்குவான்;
ஆனா ஒரு பொண்ணு, அப்பாவுக்காகப் பழி வாங்குவாளா, 2000 yrs back?
Sangam – Sunday Matinee பார்ப்போமா? வாங்க:)

கதை:

அன்னி மி்ஞிலி” முல்லை நிலத்துப் பெண்! = கருப்பழகி!
அவ அப்பா ஆநிரைத் தொழில் செய்யறவரு;
காட்டைத் திருத்தி, மருத நிலத்துக்குப் புதுசாக் குடி பெயர்ந்து இருக்காக போல (immigrant);

அவருடைய மாடு,  ஒருநாள்.. வயலில் புகுந்து,  பயிரை மேய்ந்து விட்டது;  நிலத்தின் சொந்தக்காரனோ பணக்காரன்;  மன்னனுக்கு வேண்டியவன்;
அவனுக்கு ஏதோவொரு காரணத்தால், மி்ஞிலி குடும்பத்தைப் பிடிக்கவே இல்லை; (பொண்ணை ரெண்டாந் தாரமாக் கேட்டிருப்பானோ என்னவோ!)

கோச மன்னனின் அவையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
மி்ஞிலியின் தந்தை,  தமது மாட்டின் குற்றத்தை ஒப்புக் கொண்டார்; கழுவாய்த் தொகை கட்ட முன் வந்தார்;

ஆனா,  செல்வந்தனுக்குத் தனிப்பட்ட வெறுப்பு;
இதான் சமயம்;  திக்கற்றவங்க தானே? அவங்க சொல்லு அம்பலம் ஏறவா போவுது?-ன்னு நினைத்து விட்டான்!
“பலர் முன்னிலையில் பொதுவில் அடிச்சா, எல்லாருக்கும் பாடமாகும்” -ன்னு மன்னனை ஏத்திவிட்டான்!

கோச மன்னன்,  அவரின் கண்ணை எடுக்குமாறு  தீர்ப்பளித்து விட்டான்;
பார்வை போனது தந்தைக்கு!

மி்ஞிலி துடிச்சாள்;
அப்பாவின் கண்ணைப்  பறித்தவர்களைப் பழிவாங்குவேன்; அதுவரை…
பாத்திரத்தில் உண்ண மாட்டேன்;
தூய ஆடையே உடுத்த மாட்டேன்
– எனச் சூள் உரைத்தாள்!

சூளை எப்படி நிறைவேற்றுவது?
அவளோ எளிய முல்லை நிலப் பெண்;  ஒரு மன்னனைப் பழி வாங்கணும் -ன்னா சும்மாவா?
= இன்னொரு மன்னனையே தவமாய்த் தவம் கிடந்து முறையிட்டாள்;
= திதியன்! அவ ஒருத்திக்காக கோசனின் மீது படையெடுத்தான்;  அவளும் தன் வஞ்சினம் முடித்தாள்!

சங்க இலக்கியம் -னாலே, வெறும் கோழி-தோழி/ காதல்-காமம் ன்னு எடை போட்ருவாங்க சிலர்:(
So called Sci-Fi “பெரிய” எழுத்தாளர்களும் கூட:(
ஆனா சங்க இலக்கியத்துக்குள்ளே பலப்பல ஒளிஞ்சிக்கிட்டு இருக்கு= “சிறுகதை” வடிவம் உட்பட!
அதைப் படிக்க அறிவை விட, மனசு வேணும்!  = மனமே தமிழின் மயில் வாகனம்!


பாடல்: அகநானூறு 262
கவிஞர்: பரணர்
திணை: குறிஞ்சி (புணர்தலில் எப்படிய்யா பழி வாங்கல் வரும்? Any Guess? :)

முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி…
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது…

ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்

அன்னி மிஞிலி போல, மெய்ம் மலிந்து…
ஆனா உவகையேம் ஆயினெம்…

செய்யுள் Allergy மக்கள் – Pl Note:
முழுப் பாடலும் கடைசியில் குடுத்திருக்கேன்:))
காமம்.. நேரடியா வாசிச்சாத் தான்யா இன்பம்;  சங்கப் பாட்டும் அப்படியே! :)
சிறிது சிறிதா வளர்த்துக் கொள்வோம்! Ok-vaa?:)


காபி உறிஞ்சல்:

முதை படு பசுங் காட்டு – அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட – உழவு உறு செஞ் செய்,

முதை = முது – பழமை;  பழமையான காட்டைத் திருத்தி, அதில் உள்ள கொடிகளை விலக்கி..
பகடு = எருது; குறளில் “மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான்” -ன்னு வரும்-ல்ல?

ரெண்டு எருது மட்டுமல்ல, பல எருதும் கும்பலாப் பூட்டி உழுவதும் உண்டு
செஞ் செய் = நன் செய்/ நஞ்சை நிலம்

இடு முறை நிரம்பி – ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு – ஆ புக்கு என,

விதைகள், பயிர் இடு முறை = உடல் வலிக்க வேலை செய்யும் வினைத் தொழில் உழவு,
அதைச் செய்யும் போது..
பாசிலை= பசிய இலைகள்; பயறு விளையும் வயலில், ஆ புக்கு என = மாடு புகுந்துருச்சி -ன்னு

வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து – அருளாது,
ஊர் முது கோசர் – நவைத்த சிறுமையின்,

வாய் மொழித் தந்தை = வாய்மை சொல்லிய தந்தை; தன் மாட்டின் குற்றம் ஒப்புக்கொண்ட தந்தையை…
கண் களைந்து = கண்ணைப் பிடுங்கி, அருள் என்னும் இரக்கமே இல்லாமல்…
மூதூர் மன்னர் குலத்தில் வந்த கோசர்கள் “நவை” செய்து விட்டனர்;  (நவைத்தல் = குற்றம் செய்யல்)

கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,

அந்தச் சிறுமையைக் கண்டு, அவளுக்கு மனசே வெம்பிப் போச்சு;
பாவம், சில நிகழ்வுகள் மனசையே அத்துப் போட்டுரும்:(

* கலத்தும் உண்ணாள் = தட்டுல சாப்பிட மாட்டாள்;
* வால் இதும் உடாள் = தூய ஆடை உடுத்த மாட்டாள்
(வால்= தூய்மை; வால் அறிவன் நற்றாள் தொழாஅர் எனின் -ன்னு குறள் ஞாபகம் வருதா?)

நல்ல சாப்பாடு மட்டும் பெருசில்ல; அதை நல்ல முறையில் திங்கணும்!

வீட்டுல, மணக்க மணக்கச் சிக்கன் பிரியாணி செஞ்சிட்டு…
தட்டுல பச்சடி-சால்னா பரப்பி உண்ணாமல்..
ஒங்க அம்மா, பிளாஸ்டிக் கவரில் கொட்டிக் குடுத்தா ஒங்களுக்கு எப்படி இருக்கும்?:)

ஓட்டல் பிரியாணி வாங்கி வந்தாலும், தட்டுல பரப்பித் தின்னாத் தான், தின்னாப் போல இருக்கு!  அப்படியே தின்னா அகதி போல இருக்கு:(

அது போல், அவ சாப்பிட்டாளாம்! வீம்பா?
இல்லை! அவ மனசு அத்துப் போச்சி; அதான் சாப்பாடு திங்க மறுக்கிறா;
ஒரு பொண்ணுக்கு அழகே = அழகுபட உடுத்தல் தான்; அதையும் மறுக்கிறா!

மறம் கெழு தானைக் – கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் – திதியற்கு உரைத்து, அவர்

மறம் = வீரம்; தானை = படைகள்
குறும்பியன் = கோச மன்னர் சிற்றரசர் குலம்; கோசர் x வேளிர்
அந்தக் குறும்பிய மன்னன் = திதியன்!
அவன் செரு இயல் = போர்த் தொழிலில் சிறந்தவன்… அவனிடம் போய் முறையிட்டாள்! யாரு?


இன் உயிர் செகுப்பக் – கண்டு சினம் மாறிய
அன்னி மிஞிலி போல – மெய்ம் மலிந்து,

மிஞிலி; பேரே நல்லா இருக்கு-ல்ல?
அவள் முறையை ஏற்று, திதியன், அவளுக்கு உதவினான்;

கண் பறிச்ச கோசன் போரிலே வீழ, அது கண்டு சினம் மாறினாள் மிஞிலி…
அப்போ, அவளுக்கு உள்ளுக்குள்ள எவ்ளோ உவகை பூத்திருக்கும்?
அது போல என் மனசு பூக்குது! மெய்ம் மலிந்து = உடம்பெல்லாம் ஆடுது!

ஆனா உவகையேம் ஆயினெம் – பூ மலிந்து
அருவி ஆர்க்கும் – அயம் திகழ் சிலம்பின்

ஏன்னா, பல நாள் தடைகளை மீறி, இன்னிக்கி அவளைப் புணர்ந்து விட்டேன்:)  என்னவள் ஆக்கிக் கொண்டேன்:)
பாருங்க: ஒரு அகப் திணைக்குப், புறத் திணை (போரை) உவமை காட்டுறாரு பரணர்:)

அவன்! அவ்வளவு ஏங்கிக் கிடந்தவன்; மனசே அத்துப் போனவன்; ரொம்ப நாள் காதல் போல.. கைகூட மாட்டேங்குது:(
கட்டுக் காவலும், அவள் வீட்டில் நெருக்கடிகளும் ரொம்ப ரொம்ப….

* மனக் களத்தில் உள்ள வெம்மை தீர,
*அவள் உடல் களத்தில் வெம்மை தீர்த்துக் கொண்டான் இன்றே!
மிஞிலி தீர்த்துக் கொண்டது போல்…

பூ மலிந்து அருவி ஆர்க்கும் சிலம்பு = பூக்கள் மிதந்து வரும் சத்தமுள்ள அருவி; சிலம்பு = மலை

நுண் பல துவலை – புதல் மிசை நனைக்கும்
வண்டு படு நறவின் – வண் மகிழ்ப் பேகன்

அந்த அருவிச் சாரலிலே, துவலை/ திவலை = Droplets;
(துளி வேற, திவலை வேற)
வெறுமனே இருந்தா = துளி; பட்டுத் தெறிச்சா = திவலை
இருவரும் கூடும் இன்பத்திலே, பட்டுத் தெறிச்சிதாம் இன்பத் துளி..

புதல் = புதர்; மலைப் புதர்களில் அருவிநீர் பட்டுத் தெறிக்க.. Heavenly Setting for Lovemaking
அவர்கள் கூடல் நடக்கும் இடம் எது தெரியுமா?

கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே!!

வண் மகிழ்ப் பேகன் = வள்ளல் பேகன்;
அவனுடைய கொண்டல் மா மலை = மேகம் சூழும் மலை!
மாமலை நாறி = அந்த மலையே, அவங்க காதல் வாசத்தால் மணக்குது:)

அம் தீம் கிளவி = இன் மொழியாள் அவ, வந்து விட்டாள்!
நான் அவளுக்குள் சென்று விட்டேன்;
அவள் எனக்குள் வந்து விட்டாள்! வந்து விட்டாள்…

dosa 4/365


இப்போ… பாட்டை, வரி வரியாக, நீங்களே அசை போடுங்க, பார்க்கலாம்:)

முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவு உறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என,

வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,

மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,

ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்

கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே!!

பாடல்: அகநானூறு 262
கவிஞர்: பரணர்
திணை: குறிஞ்சி

Comments
23 Responses to “Sangam Cinemas – பழி வாங்கிய மகள்!”
  1. //கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
    சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,//

    எவ்வளவு பொருள் இருக்கு இந்த இரண்டு வரியில….
    கலத்தும் உண்ணாள் = பாத்திரத்துல சாப்பிட மாட்டாள் (மேலோட்டமா), அதாவது உணவு என்பது “பகை முடிக்கும் வரை” ஒரு உடல் தேவைதான், பசிச்சா சாப்பிடுவா, உயிரோடு இருக்க வேண்டி, அதுவும் பகை முடிக்க வேண்டி..

    வாலிதும் உடாஅள்- ஒரு பெண் உடை மீது எவ்வளவு ஆசை வச்சிருப்பாள்? சீவி சிங்காரிச்சு, போட்டு வைச்சு பூ முடிச்சு… அதுவும் இவள் கன்னி, இன்னும் அதிக காரணமிருக்கு தன்னை அழகா காட்டிக்க…ஆனா அழகான ஆடை கூட உடுத்த மாட்டாளாம்.. அந்த அழுக்கு ஆடை அவள் உடம்பில் இருக்கும் வரை, அப்பன் கண் இழந்த வஞ்சம் நெஞ்சை விட்டு நீங்காம உறுத்திகிட்டே இருக்கும்.. இருக்கணும் … அதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம்… அப்பா மேல பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் பாசம் அவ்வளவு வலிமையானது என்னும் உளவியல் உண்மையை இந்த சபதம் எவ்ளோ சிறப்பா எடுத்து காட்டுது?

    Like

    • // பசிச்சா சாப்பிடுவா, உயிரோடு இருக்க வேண்டி//

      I dunno, what to say…but thatz the truth!
      this girl does it for pagai, some other girl does it for love

      // அப்பா மேல பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் பாசம் அவ்வளவு வலிமையானது என்னும் உளவியல் உண்மையை //

      Wow, Thanks Ragu for touching this!

      இதைப் பற்றிப் பதிவில் சொல்லணும் -ன்னு நினைச்சேன்; ஆனா எல்லாத்தையும் நானே சொன்னா நல்லா இருக்காது…
      முன்பு 365paa வில் நடைபெற்ற உரையாடல் போல், வேறு பலரும் உரையாடினால் தான் சுவை..

      அங்கே வாசகன், அதனால் உரையாடினேன்,
      இங்கே வாசகனா இல்லாமப் போயிட்டேனே, முருகா:)

      அதனால் என்ன? ரகு இருக்கான்! சுஷி-யம்மா இருக்காங்க!
      மனத்தளவில் இன்னொரு தோழனும் இருக்கான்!
      உரையாடல் வளம் பெறும்!:)

      Like

      • //அப்படியே நீரும் அனானிமஸ் வேசம் கட்டிக்கொள்ளும் + இந்த முறை மாட்டிக்காதீரும்//

        அப்படியே நீரும் அனானிமஸ் வேசம் கட்டிக்கொள்ளும் + இந்த முறை மாட்டிக்காதீரும்

        //அதனால் என்ன? ரகு இருக்கான்! சுஷி-யம்மா இருக்காங்க!
        மனத்தளவில் இன்னொரு தோழனும் இருக்கான்!
        உரையாடல் வளம் பெறும்!:) //

        அவர் இன்னும் இங்க வரலை என்பதில் எனக்கொரு மனக்குறை! அப்படி என்னதானாம் அவருக்கு?! தமிழுக்கு முன்னாடி எல்லாம் சும்மான்னு அவருக்கு தெரியாதா ?

        Like

  2. Rex Arul says:

    @kryes – As tweeted earlier, first, I want to appreciate this fantastic project of yours. Due to “obvious” reasons, this poem touched me profoundly. Expect more comments in Tamil coming. For now, please clarify this:

    /:குறும்பியன் = கோச மன்னர் சிற்றரசர் குலம்:/ குறும்பியன் குலமா, அல்லது குறும்பியன் + திதியன் என இரண்டு சிற்றரசர்கள் இந்த அன்னி மிஞிலி அபலைப் பெண்ணுக்காக போர் தொடுத்தார்களா என்பதை இன்னும் ஆராய்ந்து தெளிவுபடுத்துக. 

    Like

    • Rex: Here are the answers:)
      கோசர்கள் = பழைய குறுநில மன்னர்கள்; கொங்கணம் (Konkan), கொங்கு நாடுகளில் ஆட்சி செலுத்தியவர்கள்;
      பெரும்பாலும் நல்ல மன்னர்களே! (சிலரைத் தவிர)
      சேரம்/சோழம் போல, இது தான் கோச நாடு -ன்னு குறிப்பிட்டுச் சொல்லீற முடியாது; பல கோசர்கள் பரவியும் கிடந்தார்கள்;

      கோசரின் பகைவர் = வேளிர்
      * பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதிகமான், நள்ளி = வேளிர்
      * அகுதை, திதியன், ஆதன், எழினி = கோசர்
      வேளிர்கள் – மூவேந்தர்களுக்குக் கட்டுப்படுவதில்லை:) எனவே, கோசர்கள் = கட்டுப்பட்டார்கள்!:))

      * மிஞிலியின் தந்தையைக் கொன்றவனும் = ஒரு கோசன் தான்
      * திதியனும் = கோசன் தான்!
      So, this மிஞிலி issue became an internal strife!

      கோசர் குலத்துக்குள்ளேயே, சிறுசிறு பிரிவுகள்; அதில் ஒன்று குறும்பியன் (குறுநிலக் குறும்பியன்)
      அதனால் இங்கே திதியன் என்ற ஒரே ஒருத்தனின் உதவி பெற்றே மிஞிலி போராடினாள்
      ஒரு சிலர் “குறும்பியன் திதியன்” என்று இருப்பதால், இருவர் என்று பொருள் கொண்டு விடுகிறார்கள்; அப்படி அல்ல! குறும்பியனாகிய திதியன்!

      இன்னோரு குறும்பியன் பின்னாளில் தோன்றினான்; அவன் காலம் வேறு;
      கோசர் = வடமேற்குத் தமிழக மன்னவரே;
      “கோசர் யார்?” என்று மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் ஒரு கட்டுரையே வெளியிட்டுள்ளார்;

      Like

  3. Rex Arul says:

    அருமையான பதிவு. காதலன் காதலியோடு புணர்கின்றான், இருவரும் இன்பம் அனுபவிக்கின்றார்கள். எப்படி என்பதற்கு ஒரு புறப்பொருள் கொண்ட உவமை, கிளைக்கதையாக போகிறது. “நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்” என்பது போல, பல கருத்துகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

    அடிப்படையில் இது ஒரு பழிக்குப் பழி வாங்கும் கிளைக்கதை. இதில் 2 மேற்கோள்களை ஆங்கிலத்தில் இருந்து இறக்குமதி செய்தே ஆக வேண்டும் – one by William Shakespeare and another by Lord Byron.

    1. “Sweet is revenge – especially to women” (Lord Byron in Don Juan)
    2. “If you prick us, do we not bleed? If you tickle us, do we not laugh? If you poison us, do we not die? And if you wrong us, shall we not revenge?” (William Shakespeare in The Merchant of Venice.)

    மேற்சொல்லப்பட்ட இரு மேற்கோள்களுக்கும் இந்த அகநானூறு பாடல் பொருந்திப் போகிறது.

    பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்கள் சில, என்னை மிகவும் கவர்ந்தது.

    1. முதை – முதுமை! வெறுமையாக “காடு” என்று சொல்லாமல் “முதுமையான / பழமையான” காடு என்று சொல்வது, அன்னி மிஞிலியின் முதுமை பொருந்திய தந்தைக்கு நடக்கவிருக்கும் அநீதிக்கு, களம் அமைக்கும் ஒருவித premonitionஆக எனக்கு தோன்றுகிறது.

    2. அரில்பவர் – ஒன்றோடொன்று பின்னியிருக்கும் கொடிப்பயிர்! மஞ்சத்தில் இன்பத் தழுவலில் மெய்மறந்து இருக்கும் தலைவனும் தலைவியும் எப்படி இருந்திருப்பர்? பத்தடி தள்ளியா “ஊரு சனம் தூங்கிருச்சுன்னு” படுதிருப்பாக? :-) அட கொடியில் ஒன்றுக்குள் ஒன்றாக பின்னி, சுருண்டிருப்பது போல அல்லவா இருந்திருப்பாங்க? புணர்வின் கருப்பொருளில், இந்த கிளைக்கதையின் பொருளும் ஒன்றி வர, பரணர் இப்படி சில சொற்களை தேர்ந்தெடுத்து சொல்லியிருப்பார் போலும்.

    3. வாய்மொழித் தந்தை – வாய்மை(Truth) பேசும் / சொல்பிறழா (without any prevarications) குணமுடைய தந்தை! இதுவே அன்னி மிஞிலியின் கோபத்துக்கு உரமூட்டும் காரணியாகப்படுகிறது. ஏதோ, எப்பவும் தப்பு செய்யற அப்பான்னா கூட இவளுக்கு இப்படி ஒரு கோபம் வந்திருக்காது. ஆனால் உண்மை பேசும் ஒருவனை, தன் தகப்பனை இப்படி அநியாயமாக தண்டித்துவிட்டார்களே என்று வெகுண்டு எழுவது, “சாது மிரண்டால், காடு கொள்ளாது” என்னும் கூற்றை மெய்ப்பிப்பது போல உள்ளது. இங்கு US Justice Systemல், plea-bargain என்று ஒரு concept உள்ளது. தண்டனை என்பது பழி வாங்குவதற்காக அல்ல. சமூகத்தையும் அதன் அங்கம் வகிக்கும் நபர்களையும் திருத்தி, மெய்மையுடன் வாழ வழிகோலச் செய்வதே அதன் நோக்கம் (“Punishment is not for revenge, but to lessen crime and reform the criminal”). USல் நடைமுறையில் குறைகள் உண்டு; என்றாலும் let us not digress . இம்முறையில் குற்றத்தை ஒப்புகொண்டால் கழுவாய்ச் செலுத்தியோ அல்லது, வேறு வகையான குறைந்த தண்டனையையோ வாங்கிச் செல்லலாம். இதனால் குற்றவாளிக்கும் குறைந்த தண்டனை, அரசுக்கும் தேவையற்ற செலவு இல்லை என்பதே concept. ஆனால் இங்கு நடந்தது வேறு. அன்னி மிஞிலியின் தந்தையின் சிறு குற்றத்துக்கு பெரும் தண்டனையாக பறிபோனது அவரின் கண்கள்! “Punishment must be proportional to the crime” என்னும் அடிப்படை அறத்தை மீறிய செயல் அங்கு நடைபெற்று விடுகிறது. மேலும் “வாய்மொழித் தந்தை” குற்றவாளி அல்லவே. இதனால் கோபம் கொப்பளிக்கிறது. “ஒரு கைதியின் டைரி” உருவாகிறது :-) .

    மேலும் சட்டம், நீதி, என்றெல்லாம் கட்டமைப்பு இருந்தாலும் கூட அநீதி என்பது நடக்கக்கூடும் என்று அந்த மனித fallibilityஐ கட்டம் போட்டு காட்டிவிடுகிறது இந்தப் பாடல். அனைவரும் யோசிக்க வேண்டும். வெறும் நீதிமன்றங்கள் உள்ளது என்று வழக்காடுவதிலேயே குறியாய் இல்லாமல் மனசாட்சி படியும் அன்போடும், அருளோடும் நடக்க வேண்டும் என்று சூசுகமாக கூறுவது போல உள்ளது.

    4. அருளாது – அருள் இல்லாமல் – mercilessly, ruthlessly, injustice. ஆக, மாட்டை மேயவிட்டது தந்தையின் தவறு தான் என்று கண்டிப்பாக மகள் ஏற்றுக்கொண்டிருப்பாள். என்றாலும் கூட அவள் எதிர்பார்த்து ஏமாந்தது அங்கே அருள் இல்லாமல் அவர்கள் தண்டித்தது. In other words, she expected Justice; not just an application of Law. Much worse, she got injustice and a draconian overreach of Law that was twisted to suit the whims and fancies of the Kosavas – or the power-elite!

    5. ஊர்முது….சிறுமையும் – ஊரைச் சொல்லும்போது மூதூர் என்றும், அதில் நீதிபதிகளாக இருந்த கோசர்களை நட்டுவதாக “கோசர் நவைத்த சிறுமையின்” என்று “முதுமை Vs சிறுமை” என்று பகுத்துக்காட்டும் ஒரு dichotomy — அந்த paradox – அதுவும் ஒரே வரியில்…மிக அழகு போங்கள்.

    6. சினத்தின் கொண்ட படிவம் மாறாள் – இங்கே படிவம் என்பது என்னைக் கவர்ந்தது. உடலை வருத்தி நோன்பு இருப்பது, படிவம். ஒரு வித தவம். இறைவனை அடைய விரும்பும் துறவிகள் இருப்பது போல. கடவுளை அடைய அவர்கள் “படிவம்” இருப்பார்கள் என்றால், கோசர் மன்னனை முடிக்க இவள் படிவம் ஏற்கிறாள். “படிவர்” என்று முனிவர்களுக்கு வேறு ஒரு பெயரும் உண்டு. ஆக, எதற்கு படிவம்? எதற்கு நோன்பு? எதற்கு விரதம்? Focus – ஒரு பிடிப்பு. மனதை நேர்முகப்படுத்த, உடலை வருத்தி உள்ளத்தை உறுதிபடுத்த. காந்தியின் சத்தியாகிரகத்தின் உண்ணாவிரதப் பழக்கம் கூட இவ்வழியை ஓட்டியதே. ஆக, கோபம் தவறா?

    பழிக்குப் பழி என்னும் இவள் நிலை தவறா? இரு வேறு கருத்துகள் இங்கே நாம் எடுக்கலாம். என்றாலும், அவளின் “படிவம் மாறா” பொறுமை, மனவுறுதி, கோபம் என்றாலும் அதில் தன்னை இழக்காமல் போராடும் குணம், Aristotole’ன் Nicomachean Ethicsஐ நினைவுபடுத்துகிறது. “For those who are not angry at the things they should be angry at are thought to be fools, and so are those who are not angry in the right way, at the right time, or with the right persons; for such a man is thought not to feel things nor to be pained by them, and, since he does not get angry, he is thought unlikely to defend himself; and to endure being insulted and put up with insult to one’s friends is slavish.” (http://www.constitution.org/ari/ethic_04.htm)

    7. இன்னுயிர் செகுப்பக் கண்டு – இறந்தவர் கொடியவர் என்றாலும், அவரின் உயிரை “இன்னுயிர்” என்று கோடிட்டு காட்டும் பாங்கு, அனைத்து உயிர்களுக்கும் ஒரு dignity உள்ளது என்பதை (“dignity of human-life”) பரணர் காட்டுவதாகவே நான் எடுத்துக்கொள்கின்றேன்.

    இன்னும் நிறைய சொல்ல இருக்கிறது. என்றாலும், தமிழில் தட்டச்சு செய்யும் பொறுமை இல்லாத காரணத்தால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

    அடிப்படையில் பெண்கட்கு உள்ள மனவுறுதியை இப்பாடல் நன்கு காட்டுகிறது. மஞ்சத்தில் தஞ்சம் புகுந்த இருவர் காணும் களம் — இன்பக்களம்! உவமையாக கூறப்பட்டிருப்பதோ ஒரு போர்க்களம்! அந்தப் போர்க்களத்தில் பழிக்குப்-பழி வாங்குவது மகள் – தந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி கொடுமைக்கு எதிராக. மாறி வரும் இக்காலத்தில், தந்தையர்களை வில்லன்களாகவும் தேவைப்படாத ஒரு வித appendixஆக பார்க்கும் பழக்கம் ஓங்கத் துவங்கியுள்ள மேற்கத்திய கழிவுகளுக்கு இடையே, “தமிழா தமிழா, இதையும் கேளடா, யோசியடா, தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவை “தெய்வத்திருமகள்” திரைப்படம் பார்த்து மட்டுமல்ல, இது போன்ற சங்க கால இலக்கியப் பாடல்களிலும் இருந்து தெரிந்துகொள்ளடா. பல மேற்கத்திய கழிவுகளை முன்னேற்றம் என்று கண்மூடித்தனமாக நம்பி ஏமாறாதேடா” என்று சொல்வதாகவே நான் எடுத்துக்கொள்கின்றேன் :-))))

    Like

    • amas32 says:

      Rex or Arul, how do I call you?

      What a copious explanation! This poem has certainly strung a chord close to your heart! Very well written.

      amas32

      Like

      • Kalakkals of Rex -ல்ல?:)
        நீதி – சட்டம் – கருணை – பெண்மனம் = He touched a full circle!

        Like

        • Rex Arul says:

          /:நீதி – சட்டம் – கருணை – பெண்மனம் = He touched a full circle!:/ மிக்க நன்றி நண்பரே. தங்களின் தமிழ்ப் பணி தொடர்ந்து சிறப்பிக்க எனது வாழ்த்துகள்.

          Like

      • Rex Arul says:

        >>Rex or Arul, how do I call you?<> This poem has certainly strung a chord close to your heart! <>What a copious explanation! Very well written.

        Thank you very much for your kind words and for welcoming me here. Much appreciated.

        Like

      • Rex Arul says:

        வணக்கங்க. I typed a detailed response and something went hose at WP, I guess. It only displays the last line I typed. Basically, I said, you can call me “Rex” or “Arul” or “Rex Arul”, whichever makes it comfortable, as my friends call me by all those names :-)

        Yes, this poem did strike a very strong chord in me, just because, I was responding from life’s experiences :-) I am certainly not a litterateur, but, always have a tendency to view works of literature against the backdrop of modern Zeitgeist. That makes me experience these works of ancient times in a personal way.

        Thank you for your charitable words and for making me feel welcome amid the Pundits of ancient Tamil Sangam Literature :-)

        Thanks once again and God bless :-)

        Like

    • செம விளக்கம் ரெக்ஸ்அருள்! எவ்ளோ பகுப்புகள் செய்து சொல்லிருக்கீங்க..அசந்து போயிட்டேன்.. இந்த முருகா அரைகுறையாத்தான் தமிழ் சொல்லித்தாரார்.. நீங்க அடிக்கடி வரணும்!

      நம் இலக்கியங்களிடை காட்சிப்படுத்தப்படாத எவ்வளவோ நிகழ்வுகள் உள்ளன.. நம்முடிய இயக்குனர்கள் இவற்றை காட்சிப்படுத்தி விட்டு கூடவே உபயம்:நற்றிணை,குறுந்தொகைன்னு “காலர்” தூக்கி விட்டுக்கலாம்.. ஆனா என்ன செய்ய இவர்களுக்கு உலக இலக்கியங்களை தேடவும், உலக படங்களை சூட்டிங் போடவுமே நேரம் சரியாய் இருப்பதோடு அதுதான் புத்திசாலித்தனம் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள்! காலம் மாறனும்

      Like

      • ரகு, Rex-ஐ இம்மாம் பெருசா தமிழில் எழுத வச்சதே பெரும் வெற்றி!:)
        தமிழில் தட்டச்சு செய்யும் பொறுமை இல்ல மனுசனுக்கு; அதான் ட்விட்டரில் ஒரே பீட்டர்:)
        தட்டச்ச ஆரம்பிச்சாரு, ஆரம் பிச்சாரு தான்:))

        Like

      • Rex Arul says:

        நண்பர் ரகு அவர்களே – தங்களின் கனிவானப் பாராட்டுகளுக்கு முதலில் எனது நன்றிகள். தங்களின் பின்னூட்டங்களை நுகர்ந்தவன் என்ற அளவில், தங்களின் பாராட்டு வார்த்தைகள் means a lot :-) கண்டிப்பாக வருகிறேன். உங்கள் எல்லாரிடமும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

        நீங்கள் சொன்னது 100க்கு 100 சரி. நம்முடையது என்றாலே அது ஒரு இளக்காரம் தான் நம் மக்களுக்கு. புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்வார், “A prophet is never welcome in his own town”. அல்லது ஆங்கிலத்தில் சொல்வது போல, “Familiarity breeds contempt”. நம்மிடையே இருக்கும் சரக்கு மீது நமக்கு என்றும் நம்பிக்கை இருப்பது இல்லை. ஒரு தமிழ் பாட்டை ஒரு கோடி தமிழ் மக்கள் பாடினா, அது செய்தி இல்லை. அதுவே ஒரு மேலை நாட்டு பெண்மணி பாடினா, உடனே அது தான் செய்தி. இப்படி பல போலித்தனங்களுக்கு அடகு போய் தான், ஏதோ இம்மாதிரியான dosa365 முயற்சிகளில் பாலைவன ஊற்றுகளை காணமுடிகிறது. அதில் மகிழ்ச்சியே.

        மீண்டும் எனது நன்றிகள்.

        Like

    • Just one line I say! Fantastic Rexu:)
      I may invite u to write a guest column here plz!
      ——————–

      //“Sweet is revenge – especially to women//
      – எனக்குப் புரிகிறது, உங்களை ஆழ்த்திய இப்பாடல்!

      //“Punishment must be proportional to the crime
      Punishment is not for revenge, but to lessen crime and reform the criminal//
      ஆம், மாடு பிறர் நிலத்தில் மேய்ந்து, வம்பு வளர்வது, இன்றும் கூடக் கிராமத்தில் பார்க்கலாம்!
      இது மாட்டை அடக்கி ஆளாத சிறு பிழையே அன்றி, பெருங் குற்றம் அல்ல!
      அதற்கு, இந்தா ஆட்டம் ஆடினால், அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்!

      //மேலும் சட்டம், நீதி, என்றெல்லாம் கட்டமைப்பு இருந்தாலும் கூட அநீதி நடக்கக்கூடும் என்று அந்த மனித fallibility//
      ஆம், நீதிமன்றங்களிலேயே கூட நீதி இல்லாமப் போயிடும் கட்டங்கள் உண்டு தான்!
      ஆனா, அது போன்றவை, மக்கள் மன்றத்தில் பதித்து வைத்தால் தான், சமூகம் விழிப்பு உறும்!
      Sangam poets never failed to do that, how high the king or justice system may be!
      கவிஞர்கள், வெறுமனே உலாப் பாடிகள்/ வாலிகள் ஆகிப் போனது பிற்காலத்தில் தான்:(

      //ஊர்முது….சிறுமையும்//
      நீங்க சொன்னபடியும் பொருள் கொள்ளலாம்! ஆனா இங்கே Historical Fact
      முதுகோசர், இளங்கோசர்
      * முது = இந்தக் கோசர்கள்
      * இளம் = திதியன் போன்ற கோசர்கள்
      கோசர்கள் = மூவேந்தர்களிடம் தளபதியாய் வேலை பார்த்து Retire ஆனவர்களும் உண்டு = முது கோசர்
      They spend rest of the live ruling a small land, allotted to them

      Like

      • Rex Arul says:

        Thanks a lot, @kryes, for reposing that level of faith and confidence. Will certainly pitch-in, where I can. It is getting late now, so, I will write back on your detailed responses tomorrow. Thank you very much for all your comprehensive responses. Much appreciated :-)

        Like

    • //இங்கே படிவம் என்பது என்னைக் கவர்ந்தது//

      Fantastic! U added what I missed;
      படிவம் = நோன்பு இருப்பது; படிந்தேலோ ரெம்பாவாய்;
      படிவம் = ஒரு வடிவம் கொள்வதும் ஆகும்; நோன்பு/ தவ வடிவம் (பண்ணவர் படிவங் கொண்டான்)
      அதான்…
      கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
      சினத்தின் கொண்ட “படிவம் மாறாள்”!
      ————-

      //இன்பக்களம் – போர்க்களம்//

      If u deeply notice, both coexist
      Both have that insatiable desire, “burning” inside
      Throughout the Life, we keep cooking our food, in this burning only
      அகம் – புறம் -ன்னு தமிழன் பிரிச்சியும்-இணைச்சியும் வச்சது, ஒரு அகவியல் அதிசயம்!

      ————-

      தமிழ்ச் சினிமா மகத்துவம் = Never nurtures relationships, just fans courtship:(
      சங்கத் தமிழ் = did both
      Thatz why, I restricted #dosa365 only to சங்கத்தமிழ்; Not even ஆழ்வார் – நாயன்மார் – அருணகிரி, my favorites!
      I will touch both these Courtship & Relationship = NURTURE, in days to come!

      Like

  4. amas32 says:

    நேற்றையப் பாடலிலும் ஒரு பேதைப் பெண்ணின் கோபத்தின் விளைவுகளைத் தான் பார்த்தோம். அங்கே கணவன் மேல் கொண்ட காதலால், அவன் மேல் உள்ள நம்பிக்கையால் மாபெரும் அரசனை எதிர்த்துப் பேசத் துணிந்தாள். அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துத் தனியாளாக மதுரையை எரித்தாள்.

    இன்றையப் பாடலில் தந்தைக்காக சபதம் எடுக்கிராள் ஒரு இளம் பெண். அதுவும் எப்படிப்பட்ட சபதம்? ஒரு நிராதரவான, புலம் பெயர்ந்த ஏழைப் பெண், தந்தைக்கு அநீதி இழைத்த மன்னனைப் பழி தீர்க்க சபதம் எடுக்கிறாள். பெண்கள் மனதால் சிந்திப்பவர்கள். பாசம் பேசும். என் பதின் வயதில், என் தந்தையை தொழிலில் ஏமாற்றியவனை விட என் தந்தைக்கு உதவி செய்யாது நிந்தித்த என் சொந்தங்கள் மேல் நான் அதிகக் கோபம் கொண்டேன். நல்ல தந்தையிடம் மகளுக்கு உள்ள பாசத்தின் அளவை யாராலும் மதிப்பிட முடியாது.

    திதியன் எப்படி ஒரு ஏழைப் பெண்ணான மிஞிலிக்கு உதவிப் புரிகிறான்? அதுவும் மாபெரும் உதவி! இன்னொரு மன்னனுடன் சண்டைக்குச் செல்வது என்பது எளிதா? அது கொஞ்சம் புதிராக உள்ளது.

    கதையுள் கதை இங்கே கவிதை மொழியில் சொல்லப்பட்டிருப்பது கவிஞரின் பெருமைக்கு ஒரு சான்று. அது மட்டும் இல்லாமல் ஆண் பெண் சேர்க்கையின் உச்சக் கட்ட இன்பத்தை இந்தப் பெண்ணின் பழி தீர்த்தலில் கிடைக்கும் உவகைக்கு ஒப்பிட்டிருப்பது அந்த கவிஞனின் கற்பனை வளத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.

    சங்கத் தமிழ் வாழ்க! Hats off to you KRS!

    amas32

    Like

    • //ஏமாற்றியவனை விட என் தந்தைக்கு உதவி செய்யாது நிந்தித்த என் சொந்தங்கள் மேல் நான் அதிகக் கோபம் கொண்டேன்.
      நல்ல தந்தையிடம் மகளுக்கு உள்ள பாசத்தின் அளவை யாராலும் மதிப்பிட முடியாது//

      முற்றிலும் உண்மை!
      தந்தை மீது இருக்கும் பாசம், மற்ற நேரங்களில் லூசுத்தனமான அன்பு போல் தெரியும்…
      இப்படிச் சங்கடங்களின் போது தான், அந்தப் பாசம் உறுதி காட்டி நிக்கும்!

      //ஆண் பெண் சேர்க்கையின் உச்சக் கட்ட இன்பத்தை இந்தப் பெண்ணின் பழி தீர்த்தலில் கிடைக்கும் உவகைக்கு ஒப்பிட்டிருப்பது//

      Thatz it ma; What I cud not say in the whole post, u said in one line:)

      Like

    • //திதியன் எப்படி ஒரு ஏழைப் பெண்ணான மிஞிலிக்கு உதவிப் புரிகிறான்?//

      அது முழுசாக் கதையில் சொல்லப்படலை-ம்மா;
      May be she won his love, who knows?:)
      இதர பாடல்களிலும், அவளைப் பற்றிய அதிகக் குறிப்புக்கள் இல்லை!

      Like

  5. அன்பின் கேயாரெஸ் – சங்கம் சினிமாஸ் – பழி வாங்கிய மகள் – பதிவு அருமை.

    ஆண் பெண் சேர்க்கையின் உச்சக் கட்ட இன்பத்தை இந்தப் பெண்ணின் பழி தீர்த்தலில் கிடைக்கும் உவகைக்கு ஒப்பிட்டிருப்பது நன்று நன்று.

    கண் பறிச்ச கோசன் போரிலே வீழ, அது கண்டு சினம் மாறினாள் மிஞிலி…
    அப்போ, அவளுக்கு உள்ளுக்குள்ள எவ்ளோ உவகை பூத்திருக்கும்?
    அது போல என் மனசு பூக்குது! மெய்ம் மலிந்து = உடம்பெல்லாம் ஆடுது!
    ஆனா உவகையேம் ஆயினெம் – பூ மலிந்து
    அருவி ஆர்க்கும் – அயம் திகழ் சிலம்பின்
    ஏன்னா, பல நாள் தடைகளை மீறி, இன்னிக்கி அவளைப் புணர்ந்து விட்டேன்:) என்னவள் ஆக்கிக் கொண்டேன்:)

    பாருங்க: ஒரு அகப் திணைக்குப், புறத் திணை (போரை) உவமை காட்டுறாரு பரணர்:-

    இது தான் சங்க கால ப் புலவர்களீன் கை வண்ணம்

    பதிவும் சரி மறுமொழிக்ளும் சரி – ஒன்றுக்கொன்று இழைத்த்தல்ல –

    மிக மிக இரசித்தேன் – நல்வாழ்த்துகள் கேயாரெஸ் உள்ளிட்ட அனைவருக்கும் –

    நட்புடன் சீனா

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)