மூனு பேர், ‘பெய்’ எனப் பெய்யும் மழை!

சுக்குமி-ளகுதி-இப்பிலி -ன்னு சின்ன வயசில் கேலி செய்வது வழக்கம்:)
= சுக்கு-மிளகு-திப்பிலி!

கிராமத்துல, ஆயா, மாசத்துக்கொருமுறை, இதை அரைச்சிக் குடிக்க வைப்பாங்க; கசப்பும்-காரமும்;
கோவம் கோவமா வரும்! ஆனா நல்லது, செரிமானம் -ன்னு ஆயா பேச்சை, மொத்த வீடும் அப்புராணியாக் கேக்கும்:)

கடுகம் = மருந்து
சுக்கு-மிளகு-திப்பிலி = காரம், கார்ப்பு, உறைப்பு

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் = திரி கடுகமும் அப்படியே! மூனு மூனு கருத்தா வரும்!
* சுக்கு-மிளகு-திப்பிலி = உடம்புக்கு நன்மை!
* திரி கடுகக் கருத்துக்கள் = உள்ளத்துக்கு நன்மை!

கீழ்க் கணக்கில் பின்னாளைய நூல்; சங்கம் மருவிய காலம்! எழுதியவர்: நல் ஆதனார்
இதன் கடவுள் வாழ்த்தை வைத்துக் கொண்டு, இவர் வைணவர் என்பார் உண்டு! அது நமக்குத் தேவையில்லாத விடயம்!
மொத்தம் 100 வெண்பாக்கள்; அன்றைய நீதி நூல் காலத்து Fashion = வெண்பாவில் யாப்பது;
ஆசிரியப்பா-கலிப்பா போல் நீளாமல், நீதியை, நச் -ன்னு, நாலே அடியில் அடிச்சீறலாம் அல்லவா!:)

திருக்குறளின் பாதிப்பு, திரிகடுகத்தில் தெரியும்!
“பெய் எனப் பெய்யும் மழை”-யைப் பார்ப்போமா?:)


நூல்: திரிகடுகம் (96)
கவிஞர்: நல்லாதனார்

கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன்; இவர் மூவர்
‘பெய்’ எனப் பெய்யும் மழை


சுக்கு – மிளகு – திப்பிலி

* வள்ளுவர் சொல்வது: பெண்ணை மட்டுமே = பெய் எனப் பெய்யும் மழை!
* திரிகடுகமோ, இன்னும் இருவரைக் காட்டி = பெய் எனப் பெய்யும் மழை!

காபி உறிஞ்சல்:

கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி;

பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி!
பெண் ஆள்வது = அன்பால், அறிவால்!
வந்து உன் முற்றம் புகுந்தோம்; சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி -ன்னு தோழி கோதையும் சொல்லுவா!

நல்ல மனைவி = குறிப்பாலேயே அறிந்து கொள்ளுவாள்; உடலோடும் உள்ளத்தோடும் கலந்தவ அல்லவா?
* உடல் சூடும் தெரியும், உள்ளச் சூடும் தெரியும்!
* உடல் வாசனையும் தெரியும், உள்ள வாசனையும் தெரியும்!

“குறிப்பு அறிதல்”-ன்னா = உங்களுக்கு ஆமாம் சாமி போடணும்-ன்னு பெண்ணடிமை இல்ல!
உங்க நிலைமையை நீங்களே சொல்ல வெட்கப்பட்டாலும்…
குறிப்பாலேயே புரிந்து கொண்டு, மாற்று வழியும் சொல்லுபவள் = மனைவி!

கொண்டன செய்வகை செய்வான் தவசி;

தன் நெறிக்கு உண்டான நோன்புகளை, முறைப்படி செய்து முடிப்பான் தவசி!
* செய்தல் = இதுவே தவம்
* சும்மா பேசுதல் = இது தவம் அன்று!
நிருபர்களைக் கூட்டி வச்சிக்கிட்டு, கண்டதையும் “பேசும்” ஆதீனங்கள், தவம் அன்று! “செய்வான்” தவசி!

கொடிது ஒரீஇ, நல்லவை செய்வான் அரசன்;

மக்களுக்கு வரும் கொடுமைகளை நீக்கணும் + நல்லதும் செய்யணும் = அதுவே அரசன்!
ஒன்னு மட்டும் செஞ்சி, இன்னொன்னை விட்டுறக் கூடாது!
* ஊழல், மின்சாரம் இன்மை = கொடிது ஒரீஇ
* புதுப்புது வேலைவாய்ப்பு, மேம்பாடு, தமிழ் வளர்ச்சி = நல்லவை செய்தல்

இவர் மூவர், ‘பெய்’ எனப் பெய்யும் மழை

இவர்கள் மூவரும், இந்த ஒழுக்கத்தில் நின்று..
பெய் எனச் சொன்னால், மழையும் பெய்யும் (மிகைக் குறிப்பு)

dosa 66/365

Comments
10 Responses to “மூனு பேர், ‘பெய்’ எனப் பெய்யும் மழை!”
  1. amas32 says:

    திருவள்ளுவரின் வாசுகி போல குறிப்பறிந்து செய்யும் மனைவியா? :-)

    ஆனால் அது முற்றிலும் உண்மை தான். ஒரு நல்ல மனைவி, கணவன் குழந்தைகளின் முகத்தைப் பார்த்தே அவர்கள் எண்ண ஓட்டத்தையும் தேவைகளையும் புரிந்து கொள்வாள். பின் பூர்த்தி செய்வாள். தன்னலமற்ற அவள் சொல் பொய்க்குமா?

    நெறியான வாழ்வு முறையே ஒரு தவம் தான். அதை செய்வதற்கு வைராக்கியம் வேண்டும்.முற்றும் துறந்த தவசி தன் வாழ்வை வேள்வியாக மாற்றி செயல்படும் பொழுது அவன் சத்தியத்தின் உருவமாகிறான். அவன் சொல்லும் வார்த்தை பொய்ப்பதில்லை! காஞ்சி மகா பெரியவாள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

    கலிகாலம் இப்பொழுது தான் ஆரம்பித்து ஐயாயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்கின்றனர். அரசு பதவியில் இருப்பவர்கள் செய்யும் ஒவ்வொரு ஊழலின் மதிப்போ ஐயாயிரம் கோடியைத் தொடுகிறது. எங்கே மக்களுக்கு நன்மைகள் கிடைக்கின்றன? மதுவினால் இப்பொழுது ஒரு தலைமுறையே மாசு பட்டு போயிருக்கிறது. ஏழை குடும்பங்கள் சிதைந்து போய் கொண்டிருக்கின்றன. நிச்சயம் CM/PM பெய் என்றால் மழை பெய்யப் போவதில்லை!

    On a totally different note there is not enough rainfall in Chennai :(

    amas32

    Like

    • இவிங்க சொன்னா, மழை பெய்யும் என்பது ஒரு மிகைக்குறிப்பே:)
      மத்தபடி, பெண்கள்-சன்றோர்-மன்னன் ஆளுமை பற்றிச் சொல்ல வந்த பாடல் இது!

      Like

  2. சொ.வினைதீர்த்தான் says:

    பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி!
    பெண் ஆள்வது = அன்பால், அறிவால்!

    1.பெண்டு ஆட்டி – பெண்டு ஆம் தன்மையை ஆளுபவள், என்றும் உரையில் பார்த்தேன்.பெண்ணுக்குச் சொல்லப்பட்ட குணங்கள் கொண்டவள்?

    2.தவசிப்பிள்ளை என்று சமையல் வேலை செய்பவரைக் குறிக்கும் பயன்பாடும் கேள்விப்பட்டுள்ளேன்.
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    Like

    • ஆமாம் சொ.வி
      தவசிப்பிள்ளை என்பது சமையல் பிள்ளைமாரில் ஒரு வகை!

      பெண் தன்மையை ஆள்பவள் -ன்னு கொள்வதும் பொருத்தமே!
      அப்படீன்னா மற்ற தன்மைக்கு அவள் ஆட்சியில்லை -ன்னு பொருள் வந்துறக் கூடாது அல்லவா?
      அதான் நான் அப்படிச் கொள்ளல:) Me kinda peNNiyam guy:))

      வேளாண்மை = வேள் + ஆள்வது
      வேள் = விருப்பம்; அனைத்து விருப்பத்துக்கும் அடிப்படை = உணவு;
      உடை, உறையுள், காமம் ன்னு மத்த விருப்பங்களைக் கூட, உணவில்லாத போது, விட்டுக் குடுத்து, உணவைப் பெறுவர்

      உணவு முதலான விருப்பினை ஆள்வதால் = வேள் + ஆள்மை = வேளாண்மை
      அதே போல், பெண்டு + ஆள்மை = பெண்டு + ஆள்தி = பெண்டாட்டி!
      ஆள்மை = Not Ruling, But Personality (ஆள்)

      Like

      • rAguC says:

        ஆண்மைக்கு ஆள்வது என்றே அர்த்தப்பட்டு வந்துள்ளது.அந்த பொய்மை உடைத்ததற்கு நன்றிகள். உரக்கச் சொல்லணும் இதை :))

        Like

  3. விவேக சிந்தாமணி:
    வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை
    நீதி மன்னர் நெறியினுக்கு ஓர் மழை
    மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை
    மாதம் மூன்று மழை எனப் பெய்யுமே

    “மாதம் மும்மாரி பெய்கிறதா?” அன்று அரசர்கள் அந்நாளில் மந்திரியைக் கேட்பார்களாம். நாட்டில் நெறி தவறாமல் ஆட்சி நடக்கிறதா என்பதன் இன்னொரு வடிவம் தான் அந்தக் கேள்வி.

    “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து” என்பது ஆண்டாள் திருப்பாவை (“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி”). இதுவும் அதே கருத்தைத்தான் கூறுகிறது.

    ஒரு காலத்துல அப்படி எல்லாம் இருந்திருக்காங்க போல இருக்கு. :-(

    Like

  4. உப்பும் மிளகும் சுவைத்ததுண்டு. திப்பிலியின் சுவை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)