100th Dosa: மான் கலவி – பார்த்த தலைவி!

dosa365 = இஃது ஆய்வுத் தளமோ (அ) சிறப்புத் தளமோ அன்று!
அத்தகு பெருமையோ/ வல்லமையோ இதற்கு இல்லை!
இது ஒரு தமிழ்ப் பூங்கா மட்டுமே; பூங்காவுக்கென்று பெருமை ஒன்னுமில்லை; செடி கொடிப் பூக்களுக்கே மணமும் பெருமையும்!

தமிழ் வாசிக்கும் வண்டுகள் = நீங்கள்;
இந்த 100 ஆம் பதிவிலே, உங்களுக்கு என் பல்லாண்டு வாழ்த்தும் நன்றியும்!
என்னவன் முருகவனின் கைப்பிடித்து…
இந்தத் தமிழ்ப் பயணத்தை மேலும் தொடர்கின்றேன்… பயணங்கள் முடிவதில்லை!


முன் கதை:

உங்களில் எத்தனை பேரு = அடுத்தவர் காமத்தை விரும்புவீங்க?:)
என்னடா வெவகாரமாக் கேக்குறேன் -ன்னு பார்க்காதீங்க; வாழைப்பந்தல் To வேலூர் & To திருப்பதி; பேருந்தில் ஒரு இளம் தம்பதி; கொஞ்சம் public display of affection:) பேருந்தில் பலரும் முகம் சுளிப்பு:)

எல்லாம் அடங்கி, இப்போ, ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூக்கம்!
அப்பப்போ முழிச்சி, திடீர்-ன்னு ஒருத்தர் கண்ணை இன்னொருத்தர் பாத்துக்குறாங்க;

பாக்கவேணாம் -ன்னு என் மனசு சொன்னாலும், அவர்கள் “பார்த்துக் கொள்வதைப் பார்த்துக் கொள்வதும்” ஒரு சுகம் தான்:) – அவர்கட்கு இடையூறு இல்லாமல்;
Parallel Seat அல்லவா; எனக்கும் ஏதேதோ யோசனைகள் – டேய் முருகவா, you spoiled me:)

அந்தப் பொண்ணு சன்னல் பக்கம்; அவன் அணைப்பில் அவள் = இன்பத் தூக்கம்!
திடீர்-ன்னு மாம்பாக்கம் தாண்டி…
ரோடு நெடுக்க வேல முள்ளு; சன்னல் வழியாவும் உரசுது;
இவர்களோ = ஏகாந்தத் தூக்கம்!

படேர்-ன்னு எழுந்து, அவங்க பக்கம் போயிட்டேன்;
குளிரில் நான் போட்டிருந்த Fleece Jacket ஐ அவங்க மேல் போட்டுட்டு, பேருந்துச் சன்னல் கதவை மூட, அவன் விழித்துக் கொண்டான்; புரிந்தும் கொண்டான்!

நான், இந்தப் புறம், என் இருக்கைக்குத் திரும்பி விட…
அவன் கை நீட்டி, என் கையைப் பற்றிக் கொண்டான்; விடவும் மாட்டேங்குறான்;
கண்ணில் அந்தக் காதல்-நன்றி உணர்ச்சி;

அதிகாலைக் குளிரில் நான் லேசா நடுங்குவதைப் பார்த்து…
அவள் மேல் சிக்கிக் கொண்ட என் Fleece Jacket ஐ எடுக்கணும்-ன்னு, அவளை எழுப்பியும் விட்டான்;
வேணாம்-ன்னாலும் கேட்கலை; அவள் காதில், இவன் ஏதோ சொல்ல…
அவள் புன்னகையிலேயே நன்றி சொன்னாள்; Jacket என் கைக்கு வந்துவிட்டது..

இப்போ இருவரும் சோடியா, என்னைப் பாத்துக்கிட்டு வராங்க:) எனக்கு வெட்கம்:)
அப்போ, மனசுக்குள் ஓடிய ஒரு சங்கத் தமிழ்ப் பாட்டு = அதுவே இது!


பாடல்: புறநானூறு
கவிஞர்: வீரை வெளியனார்
திணை: வாகை
துறை: வல்லாண் முல்லை

சூழல்:

வேடன்-வேடிச்சி குடும்ப வாழ்க்கை;
முன் மண்டபத்தில் இருவரும் தூங்க, பக்கத்திலே… மான்-மான் இன்பம்!
பசிக்குது;  பழம் உண்ண எழுந்த அவ, இந்த மான்-மான் கலவியைப் பாத்துட்டா;

* உதறி எழுந்தா, கணவன் விழிச்சிக்குவான்; வேடனால் மான்களுக்கு ஆபத்து!
* இருந்த இடத்தில் எக்கியே எடுத்தா, அரவம் கேட்டு, மான்கள் விலகி விடும்; புணர்ச்சிக்கு ஆபத்து!

என்ன பண்ணுவா?
= பசியோடு, அந்த மூலையில்… குறுகியே கிடந்தாளாம் தலைவி!
= மான் கலவி – பார்த்த தலைவி!

முன்றில், முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்

தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து,

மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாற,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,

தங்கினை சென்மோ, பாண! தங்காது,
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே!


காபி உறிஞ்சல்:

முன்றில், முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்

முன்னைக் கொடி & முசுண்டைக் கொடி;
முன்றிலில், பலா மரங்களின் மேல், கொடிகள் படர்ந்துள்ளன;
பந்தலே போட வேணாம்; அப்படி ஒரு நிழல்! பலாப்பழங்கள் தொங்கும்/தூங்கும் நீழல்!

கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்

கையாள் மாளும்/ கொல்லும் வேடன்; அவன் ஒய்யாரமாத் தூக்கம் தூங்குறான்;

பார்வையாலே தழுவ முடியுமா?
= தழுவியும் தழுவாமலும்…
அப்படியான மடப் பிணை மான்கள், இணை மான்கள்!

தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்

கலை = ஆண் மான்; பிணை = பெண் மான்
மேய்ச்சல் என்னும் தொழிலை விட்டுருச்சி அந்த ஆண்! = தீர் தொழில்;
ஆனா, இன்னொரு தொழிலைப் புடிச்சிக்கிச்சி = திளைத்து விளையாடும் “இன்புறு புணர்ச்சி

புணர்ச்சியே இன்பம் தான்! அப்பறம் என்ன “இன்புறு” புணர்ச்சி?
சில சமயம், லேசா வலிக்கலாம்; துன்பம்;
அது கூட இல்லாமப் பாத்துக்குதாம் அந்த ஆண்மான்! அதனால் இன்பு உறு புணர்ச்சி;

புணர்ச்சிக்கே, புணர்ச்சி விதி சொல்லுவோமா?:)
உறு புணர்ச்சி = உற்ற புணர்ச்சி, உறுகின்ற புணர்ச்சி, உறும் புணர்ச்சி = முக்காலமும் புணர்ச்சி:)
வினைத் தொகை இன்பம்… உடல் தொகை இன்பம்!

கணவன் எழுதலும் அஞ்சி, கலையே
பிணை வயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், இல் வழங்காமையின்

அந்த இன்புறு புணர் நிலையைக் கண்ட வேடனின் வேடிச்சி…
எங்கே தன் கணவன் எழுந்து விடுவானோ? அந்த மான்களுக்கு என்ன ஆகுமோ? -ன்னு அஞ்சி

தான் எழுந்தால், அந்தச் சத்தத்தால், கலை (ஆண்), பிணை (பெண்ணை) விட்டு நீங்கிருமோ? -ன்னு அஞ்சி…
அந்தப் புணர்ச்சி இன்பம் தடைபடலாமா? = அந்த இல்லிலே (மண்டபத்திலே), நகராமல், ஒடுங்கியே கிடந்தாள்!

கல்லென ஒலித்து, மான் அதள் பெய்த, உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென

இதனால், கானக் கோழி, முன்றிலில் காயப் போட்டிருக்கும் தினையைத், தைரியமாக் கொத்திக் கொத்திச் சாப்புடுது; கூடவே இதல் என்னும் புறாவும் கூட்டுத் கொத்தல்:)
ஐயோ -ன்னு பொம்பளைங்க பதறி அடிச்சிக், கோழியை வெரட்டுவாங்களே? ஆனா, இந்தப் பொண்ணு அப்படி விரட்டலை;

மான்-கலவிக்கு மதிப்பு குடுக்குறா;
அந்த இன்புறு புணர்ச்சியைப், பார்த்தும் பாராமலும்… தன்னகத்தே இன்பம் கொள்ளுறா;

ஆர நெருப்பின், ஆரல் நாற,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,
தங்கினை சென்மோ, பாண!

சந்தனக் கட்டையின் அருமை தெரியாமல், நெருப்புக்கு எரிக்கும் வேடர்களின் காடு;
அதில் ஆரல் மீன் நாற்றம்;
துண்டுத் துண்டா அரிஞ்ச கறி – இறைச்சி; சுற்றத்தோடு அதைக் கூடி உண்டு..
எலே பாணனே; அந்தக் காட்டு ஊரிலே தங்கி விட்டுச் செல்!

தங்காது, வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு, என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே!

தனக்கு-ன்னு வச்சிக்காது, பல வேந்தர்கள் தரும் பரிசில்/திறை எல்லாத்தையும், பரிசில் வேண்டிச் சொல்வோர்க்குக் குடுக்கும் அரசன்; அங்கே போ; பரிசில் வாங்கிக்கோ; ஆனா…
அந்த அரசனைக் காட்டிலும், பெருமை உள்ளவ இந்தப் பொண்ணு; வேடிச்சிப் பொண்ணு;

* அரசன் குடுப்பானே தவிர, தன் செல்வத்தில் யாரேனும் கை வச்சி விளையாடினாப், பாத்துக்கிட்டு இருக்க மாட்டான்!
* ஆனா, இவ பாத்துக் கிட்டு இருந்தா… கோழியும் புறாவும் கொத்தக் கொத்தப் பாத்துக்கிட்டு இருந்தா;

அவள் ஊரிலே தங்கி விட்டு, அப்பறம் அரசன் ஊருக்குச் செல்!

அப்படியான மனப் பான்மை; அப்படியான தலைவி;
மான் கலவி – பார்த்த தலைவி!
(முருகா, இவ உள்ளத்தையே எனக்கும் கொடு; சங்கத் தமிழையே எனக்கும் கொடு)


dosa (எ) தினம் ஒரு சங்கத் தமிழின் முக்கிய நோக்கம்:

dosa365

1) சங்கத் தமிழை இன்றைய கோணத்தில் படம் பிடிப்பது
= உதட்டுப் பேச்சாய் இல்லாது, உள்ளத்து உறவாய்!

2) திணை – துறை – இலக்கணம் என்று = அசை பிரிக்காமல்,
காதல் – உள்ளம் – உணர்ச்சி என்று = அசை போடுவது!

3) இன்றைய கால கட்டம் வேறு; ஆனா, தமிழ்த் தொன்மம் எப்படி?
இதைத் தொல் பூங்காவில் எட்டிப் பார்த்து மகிழ்வது;

4) எட்டிப் பாக்கணும்-ன்னா = மதம்-சமயம்/ அரசியல்/ சுயப் பிடித்தங்கள் என்னும் சுவரைத் தாண்டினால் தான் உண்டு!
தமிழைத் தமிழாய் அணுகும் மனப் போக்கு = இதை விதைப்பதும் ஒரு நோக்கம்!

5) இப்படித் தொல்தமிழை எட்டிப் பார்ப்பதால் வரும் பயன் என்ன?
இதுக்குப் பதில், இன்னொரு கேள்வியே = காதலால் வரும் பயன் என்ன? அது ஒரு மனத்தை மேம்படுத்தும் “உணர்வு”;

2000+ ஆண்டுகளாய் காதல் அதே தான்; மாறவே இல்லை;
வெளியே உடுப்பு தான் மாறுகிறது; உள்ளே உணர்ச்சி அல்ல! அதுவே = தினமொரு சங்கத்தமிழ்!

dosa 100/365

Advertisements
Comments
14 Responses to “100th Dosa: மான் கலவி – பார்த்த தலைவி!”
 1. சதம் அடித்ததற்கும், மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்….

  Like

 2. வாழ்த்துகள் KRS :-) கார் விபத்து ஏற்பட்டபோதும், புயலின் போது சேவை செய்ய சென்ற பொழுதும் தவறாமல் இங்கே பதிவை தொடர்ந்து போட்டுக் கொண்டிருந்தீர்கள். உங்கள் அர்ப்பணிப்புக்கும் உழைப்பிற்கும் வாசகர்களாகிய எங்களிடம் இருந்து நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுகிறீர்கள். இந்த முயற்சியினால் நாங்கள் பெற்ற பயனை மதிப்பிடும் பொழுது நூற்றுக்கு இருநூறு மதிப்பெண்கள் பெறுகிறீர்கள் :-)

  தொடரட்டும் இந்த சேவை. உங்கள் முயற்சிக்கு நான் பல்லாண்டு பாடுகிறேன்.

  amas32

  Like

 3. சொ.வினைதீர்த்தான் says:

  ) இப்படித் தொல்தமிழை எட்டிப் பார்ப்பதால் வரும் பயன் என்ன?
  இதுக்குப் பதில், இன்னொரு கேள்வியே = காதலால் வரும் பயன் என்ன? அது ஒரு மனத்தை மேம்படுத்தும் “உணர்வு”;

  அருமை! அருமை!!
  அனைத்துப் பதிவுகளும் படித்து மகிழ்ந்தேன். உணர்ந்தேன். வாழ்த்துக்கள் நண்பரே.
  அன்புடன்
  சொ.வினைதீர்த்தான்.

  Like

 4. வாழ்க்கையோடு இயைந்தது தான் வேதமும் வேதாந்தமும். அனுபவமே வாழ்க்கை. வாழ்க்கையே வேதமாகிறது. அந்த வாழ்க்கைப் பாடத்தை சங்கப் பாடலுடன் பகிர்ந்தமைக்கு நன்றி KRS :-)

  காக்காசுரனால் மார்பில் கொத்தப்பட்டு குருதி வடிய வலியைப் பொறுத்துக் கொண்டு மடி மீது உறங்கும் கணவன் எழுந்து விடாமல் பார்த்துக் கொண்ட வைதேகியின் நினைவு தான் வருகிறது, இந்தப் பாடலைப் படிக்கும் பொழுது.

  பலாத் தோட்டத்தை நேரில் பார்த்தவர்களுக்கு இது தெரியும். பந்தல் போட்டது போல் அவ்வளவு அடர்த்தியாக இருக்கும் செடிகள். விலங்கினங்கள் புணர்வது பொது இடத்தில் தான். நாம் தான் அவர்களுக்கு தொந்தரவு தரா வண்ணம் அவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்ல வேண்டும். ஆனால் இங்கோ வேடிச்சி நகர்ந்தாலே புணர்ச்சி கெட்டுவிடும். அதனால் நல்ல உள்ளம் படைத்த அவள் பசியையும் புறக்கணித்து அமைதி காக்கிறாள்.

  அவள் ஒடுக்கத்தை கோழியும் புறாவும் அவைகளுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கின்றன. பரத்தி வைத்திருக்கும் தானியங்களைச் சுதந்திரமாகக் கொத்தித் தின்கின்றன. அதைப் பார்த்தும் வாளாவிருக்கிறாள் அவள். அப்படிப் பட்ட நல்ல உள்ளம் படைத்த அவளுக்கு, பல வகை தானங்கள் கொடுக்கும் அரசனும் நிகரில்லை. ஏனென்றால் அவன் கூட தன் பொருள் பாழாகும் பொழுது சும்மா இருக்க மாட்டன்.

  என்ன அருமையான அன்பை வெளிப் படுத்தும் ஒரு பாடல்! நல்ல தேர்வு KRS!

  //5) இப்படித் தொல்தமிழை எட்டிப் பார்ப்பதால் வரும் பயன் என்ன?
  இதுக்குப் பதில், இன்னொரு கேள்வியே = காதலால் வரும் பயன் என்ன? அது ஒரு மனத்தை மேம்படுத்தும் “உணர்வு”;// I second it :-)

  amas32

  Like

  • This song is very close to my heart ma!
   The other one is: where a mom rushes to serve in a hotel to feed the groom & bride, when she knows that her daughter has eloped; Remember?:)

   //நல்ல உள்ளம் படைத்த அவளுக்கு, பல வகை தானங்கள் கொடுக்கும் அரசனும் நிகரில்லை//

   ஆமாம்!
   நாம் முல்லைக்குத் தேர் குடுத்தான் பாரி-ன்னு சொல்லுறோம்
   ஆனா, இவ?
   இவ பேரு கூடத் தெரியாத வேட்டுவச்சி; வள்ளி -ன்னு வச்சிப்போமே!

   அரசர்கள் குடுப்பது = வரலாற்றில் நிக்கும்
   இவர்கள் போல் முகமறியா உள்ளங்கள் குடுப்பது = மனத்திலே நிற்கும்!
   இன்று…நூறாம் பதிவுலயும் நிக்கும்!
   என் உள்ளமெல்லாம் சங்கத் தமிழ்!

   Like

 5. Santhosh says:

  சிறந்த பதிவு. மேலும் தொடர வாழ்த்துக்கள்….

  Like

 6. ranjani135 says:

  100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும்.
  100 வது பதிவுக்கு ஏற்ற நல்லதொரு பாடல்.

  Like

  • அன்பின் கேயாரெஸ் – அருமையான பதிவு – 100 வது பதிவினிற்கு நல்வாழ்த்துகள் – பாராட்டுகள் – எவ்வளவு அழகாக காட்சிகளை விவரித்து சங்கத்தமிழினை எடுத்து ஆய்ந்து – இரண்டினையும் ஒப்பு நோக்கி – சூழ்நிலைக்கு ஏற்ற படங்களைத் தேடிப் பிடித்து கச்சிதமாக ஆங்காங்கே இட்டு பதிவினை சிறப்பாக ஆக்கியமை நன்று. அடுத்தவர் காமத்தினைப் பார்க்கிறோமோ இல்லையோ – அததனையையும் மனதில் ஓடவிடும் பதிவு. மான்களின் உணர்ச்சி – வேட்டுவச்சியின் உணர்வுகள் – அப்படியே படம் பிடித்துக் காண்பித்த கேயாரெஸ் – மிக மிக மகிழ்ந்தேன் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

   Like

   • அன்பின் கேயாரெஸ் – பட்ங்களை வைத்துப் பதிவா – பதிவினை வைத்துப் படங்களா ? ஐயம் களைக – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Like

 7. அன்பின் கேயாரெஸ் – பட்ங்களை வைத்துப் பதிவா – பதிவினை வைத்துப் படங்களா ? ஐயம் களைக – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: