சிலம்பு கழி நோன்பு – என் கொங்கை, நின் அன்பரல்லார் தோள் சேரற்க!

கிராமத்துப் பக்கம் ஒரு சொலவடை = நோகாம, நோன்பு கும்புட முடியாது;
எங்க வீட்டிலும் அப்படியே!
உலர்ந்த அரிசியை உலக்கையால் மாவு இடிப்பது, பாகு காய்ச்சுவது, அதிரசம் தட்டுவது, காப்பு கட்டுவது -ன்னு…. முதுகு வளைஞ்சே போகும்:)

ஒவ்வொரு ஆண்டும், தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசை நோன்பு;
கிராமத்தில், தீபாவளி அவ்வளவு சிறப்பு கிடையாது; நோன்பே முக்கியம்!
(சங்கத் தமிழிலும் தீபாவளி கிடையாது; திரு ஓணம், கார்த்திகை விளக்கீடு முதலிய விழாக்களே!)

தீவிரச் சைவக் குடும்பத்தில் இருந்து வருவதால், ஈசனுக்கு மிகவும் உகந்த = கேதார கெளரி நோன்பு; இதை ஒரு போதும் விடுவதேயில்லை வீட்டில்;
காத்தாயி எனும் காத்யாயினியை நோக்கி, அவளுக்கு ஈசன் வாய்த்தது போலவே, தங்களுக்கும் = எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க!” என்னுமோர் நோன்பு!

எங்க வீட்டில், காதலிச்சி… கல்யாணம் ஆகாமலேயே, மாண்டு போன கன்னி
= பூவாடைக்காரி-பாலு (பாலகுசாம்பாள் – இளமுலையாள்)

அவள் நினைவாக, ஒரு புதுப் புடைவையைப் பொண்ணு போலச் சுற்றி…
அதுக்குக் காதோலை-கருகமணி மாட்டி,
தாலி பூட்டி, ஒரு பெண்ணாகவே பாவித்துச் செய்யும் நோன்பு;

என்னமோ தெரியல, சின்ன வயசில் இருந்தே, அது மேல எனக்கு ஒரு ஈர்ப்பு;
பெண்கள் நோன்பு என்றாலும், நானும் மாங்கு மாங்கு -ன்னு நோன்பிருப்பேன்:)
= எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க:)

நோல்” என்ற வினைச்சொல்லில் இருந்து வருவது நோன்பு;
பொறுத்துக் கொள்ளுதல்/ பாடு எடுத்துத் தவஞ் செய்தல் என்ற பொருளில் வரும்!
இவன் தந்தை, என் நோற்றான் கொல் எனும் சொல் -ன்னு குறள் வரும்-ல்ல? அதே தான்!


அதே போல், சங்க காலத்தில் = சிலம்பு கழி நோன்பு!

ஒரு பொண்ணு, கல்யாணமாகிப் புது வீட்டுக்கு வரும் முன், பூ முடிச்சிப், பழைய சிலம்புகளைக் களைந்து, புதுச் சிலம்பு பூட்டுதல்!
பழைய கன்னிச் சிலம்புகளைக் கழிவதால் = சிலம்பு கழி நோன்பு;

இது ஒரு பெரிய நோன்பாகவே கொண்டாடப் பெறும்;
கண்ணகிக்கும் இது நடந்தது;
இது குறித்த பல சங்கப் பாடல்கள் உண்டு; அதில் ஒன்னைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்;

சூழல்: அவன்-அவள் = வீட்டுக்குச் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டார்கள்;
அவளும் அவனோடு ஓடிட்டா (உடன்போக்கு)
பிற்பாடு, ஏதோவொரு பாசத்தால், அவ வீட்டுக்கே கூட்டியாறான்;

ஒரு வித வெட்கம்! பெற்றோர்களை நேருக்கு நேர் பார்க்க ஒரு தயக்கம்;
அவன் வீட்டிலும் அப்படியே; ஆனால் பிற்பாடு இசைந்து விட்டார்கள் போலும்;
அவன் தாய், வந்த பெண்ணுக்குச் சிலம்பு கழி நோன்பு செய்யுறா;
இதைப் பார்த்த அவளோட பெற்ற தாய் (நற்றாய்) ஏங்குறா – என் வீட்டில் வதுவைத் திருமணமாச்சும் செய்யக்கூடாதா?


நூல்: ஐங்குறுநூறு 399
கவிஞர்: ஓதல் ஆந்தையார்
திணை: பாலை (மறுதரவுப் பத்து)

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம்மனை வதுவை நன்மணங் கழிக எனச்
சொல்லின் எவனோ மற்றே; வென்வேல்
மையற விளங்கிய கழல் அடிப்
பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே!


காபி உறிஞ்சல்:

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம்மனை வதுவை நன்மணங் கழிக எனச்

பையனின் தாய், அவ வீட்டில் சிலம்பு கழி நோன்பு நடத்துறாளாமே!
என் வீட்டில், அவர்கள் இன்ப மணம் கழியக் கூடாதா?

சொல்லின் எவனோ மற்றே?

இப்படி நான் சொல்வதும் ஒரு குற்றமா?

வென்வேல் மையற விளங்கிய கழல் அடிப்
பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே!

வெல்லும் வேல் கையில் வைத்திருப்பவன்! (என் முருகவனோ?)
குற்றமில்லா வீரக் கழல் பூண்டவன்; பொய் சொல்வதில் வல்லவன்,
அந்தப் பிள்ளையை ஈன்ற பெற்றவ…
அவ வீட்டுல, இந்த நோன்பு செய்வித்தீர்களே, என் வீட்டில் ஏதும் செய்யவில்லையே!

சிலம்பு கழி நோன்பு = அதன் பின், அவனும் அவளும் இன்பத்தில் திரளத் துவங்கும் நிகழ்வு;
அதையாவது என் வீட்டில் நடத்தக் கூடாதா?

dosa 97/365

Advertisements
Comments
2 Responses to “சிலம்பு கழி நோன்பு – என் கொங்கை, நின் அன்பரல்லார் தோள் சேரற்க!”
  1. நோன்பு செய்யும் முறை…ம்… சிறு வயது ஞாபகம் வந்தது…

    நன்றி…

    Like

  2. n_shekar says:

    இந்த காலத்திலேயும் காதல் மனங்களுக்கு அப்படியொரு எதிர்ப்பு! அதுவும் ஓடிப்போய் திருமணம் புரிந்தவர்களுக்கு திரும்ப அவர்கள் பிறந்த வீட்டில் வரவேற்பு தீவிரவாதிகளை போலிஸ் வரவேற்பது போல தான் அமையும்.

    இந்தப் பாடலில் பிள்ளை வீட்டில் ஒத்துக் கொண்டு விட்டார்கள். அது பெண்ணுக்கு மிகப் பெரிய விஷயம். வாழப் போகும் வீட்டில் அங்கீகாரம் கிடைத்துவிட்டது.

    பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடக்கும் திருமணங்களில் இரண்டு விதமான துக்கங்கள். ஒன்று பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பெற்றோர் முன் நின்று தங்கள் திருமணத்தை நடத்திக் கொடுக்கவில்லையே என்ற வருத்தம். ஆனால் பெற்றோர்களுக்கோ அதை விட மிகப் பெரிய வருத்தம் அவர்களின் திருமணத்தை கண் நிறைய பார்க்க முடியவில்லையே என்பது.தான்.

    குழந்தை பிறந்ததில் இருந்து தாய்மகளின் திருமணத்தைக் கோடித்துக் கொண்டு இருப்பாள்! That is the culmination of her own married life. அதனால் பெண், தானே திருமணம் புரிந்து விட்டால் இரு விதத்தில் அந்தத் தாய்க்குக் கோபம் வரும். ஒன்று தான் வளர்த்த பெண் தான் பேச்சைக் கேட்காமல் அல்லது தன்னை நம்பாமல்/மதிக்காமல் தானே ஓடிப்போய் மணம் புரிந்து விட்டாளே என்பது. மற்றது தான் மிகப் பெரிய வருத்தம். தான் தன் பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை செய்யாமல் விட்டுவிட்டோமே, பெண்ணுக்குச செய்து வைத்திருந்த நகைகளைப் பூட்டி அழகு பார்க்க முடியவில்லையே என்று மனது துடிக்கும்.

    பிள்ளை வீட்டில் தம்பதிகளுக்கு சடங்கு செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் அந்தத் தாய் மனம் எப்படி பரிதவிக்கும் என்று நாம் சிறிதேனும் கற்பனை செய்து பார்க்கமுடியும்.

    சங்கக காலத்தில் நடைமுறையில் இருந்த நோன்புமு சடங்கும் இந்தப் பாடலைப் படித்துத் தெரிந்து கொண்டேன், நன்றி KRS :-)

    amas32

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: