One in 1000 = கம்பன்-சடையன் நட்பு!

இராமாயணம் எப்பவோ நடந்துச்சி! அதுல எப்படிச் சடையப்ப வள்ளல் வருவாரு?

ஆனாலும் பாடிக் காட்டினான் கம்பன்;
அன்றைய  இலக்கிய உலகில், இது யாருமே செய்யாத புரட்சி! பார்க்கலாமா இன்னிக்கி?

புரட்சிக் கவி = எங்கள் கம்பன்! ஆரிய அடி வருடி அல்ல!
= நான் இது தமிழ்ப் பாவினால், உணர்த்திய பண்பு அறோ!


காவியம், வடக்கின் கதை என்றாலும், அது பிரபலமாகி விட்டதால், அதையே களமாகக் கொண்டான் கம்பன்;
ஆனா, தமிழ் நிலத்துக்கு ஒத்தவாறு, மாற்றி இசைத்தான்!
* கற்பு உடலால் அல்ல, உள்ளத்தால் என்று வால்மீகியையே மீறும் கம்பன்!
* கும்பகருணன் போரிலே, இராமனுக்கும் கை நடுங்கியது -ன்னு மறைக்காமல் சொல்லும் கம்பன்!

வில்லன் இல்லாச் சங்கத் தமிழ் போல்,  குணம் நாடிக் குற்றமும் நாடி…
இப்படி மொத்தமே தமிழ் நெறி! = அவன் ஆரிய அடிவருடி அல்லவே அல்ல!!

சோழனின் நெருக்குதலால், கம்பன் தனிமை ஆகிவிட்டான்!
ஆனா, அந்தத் தனிமையில், மனசு ஒடிந்து விடாமல்.. ஆர்ப்பாட்டமில்லா உற்ற துணை = சடையன்!
ஒரு மன்னனே ஒதுக்கியவனை… தன் வணிகம் போயிடுமோ ன்னுல்லாம் பயப்படாமல், நட்பால் ஆதரித்த குணம் = சடையன்!

கம்பன் தன் காதைக்கு இட்ட பெயர் = இராமவதாரம் என்பதே!
பின்னாளில் தான், அவன் பேரையும் சேர்த்துக், கம்ப இராமாயணம் என்று ஆனது! ஆனா, காவியத்தின் ஒரு இடத்திலும், கம்பன் தன் பேரைச் சொல்லிக் கொண்டான் இல்லை!
தன் பேரைச் சொல்லிக்காதவன், ஆனால்….. தன் நண்பனின் பேரைப் பல இடங்களில் குறிப்பிடுகிறான்!

= கம்ப ராமாயணத்தில், சடையப்ப வள்ளல் வரும் இடங்கள்:
Hearing better than Reading:))


1) பாயிரச் செய்யுள் – காவியம் பிறந்த களம்:

திருவெண்ணெய் நல்லூர் – கம்பன் கோயில்

நடையில் நின்று உயர் நாயகன், தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராம அவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே!
(கடவுள் வாழ்த்து, பாயிரம்: 11)

தான் எங்கு உட்கார்ந்து, காவியம் எழுதினேன் -ன்னு சொல்லுறான் கம்பன் = அரசவை அல்ல! சடையனின் வெண்ணெய் நல்லூர்; காடு மேடுக் கழனி;
இன்னிக்கும் அந்தக் கோயில், பாழடைஞ்சி, அப்படியே தான் இருக்கு!

2) விசுவாமித்திரன் இராமனுக்குப் படைக்கலம் தருதல்:

விண்ணவர் போய பின்றை, விரிந்த பூ மழையினாலே
தண் எனும் கானம் நீங்கித், தாங்கரும் தவத்தின் மிக்கோன்
மண்ணவர் வறுமை நோய்க்கு, மருந்து அன சடையன்,வெண்ணெய்
அண்ணல் தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே;
(பால காண்டம்: வேள்விப்படலம் 419)

* மக்களின் வறுமை நோய்
* கம்பனின் வெறுமை நோய்
எப்படிச் சடையன் மருந்து குடுப்பானோ… அப்படி, மருந்து போல, இராகவனுக்குப் படைக்கலம் கிட்டிற்று!

3) சீதை, காதல் நோயால், நிலாவில் வாடுதல்:

வண்ண மாலைக் கை பரப்பி, உலகை வளைந்த இருள் எல்லாம்
உண்ண எண்ணித் தண் மதியத்து, உதயத்து எழுந்த நிலாக் கற்றை;
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும், விழுங்கிக் கொண்ட, விரி நல் நீர்ப்
பண்ணை வெண்ணெய்ச் சடையன் தன், புகழ் போல் எங்கும் பரந்து உளதால்!
(பாலகாண்டம்: மிதிலைக் காட்சிப் படலம் 636)

இருட்டையெல்லாம், தன் கையைப் பரப்பி, நிலா உண்கிறது!  எதைப் போல்?
உலகப் புகழையெல்லாம் உண்ணும் சடையன் புகழ் போல், பரவி நிற்கிறது நிலா!

4) சேது அணை கட்டல்:

கம்ப இராமாயணம் அரங்கேறிய மண்டபம் – திருவரங்கம் (click n See)

மஞ்சினில் திகழ்தரு மலையை, மாக் குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே, நளன்
விஞ்சையில் தாங்கினன்; சடையன் வெண்ணெயில்
‘தஞ்சம்! ‘என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல்
(யுத்த காண்டம்: சேது பந்தனப் படலம் 6811)

பல குரங்குகள், கல்லைத் தொம் தொம் -ன்னு, கொண்டாந்து போட, அதை மூழ்காமல் தாங்கி, ஒழுங்கில் அமைக்கிறான் நளன் என்னும் பொறியாளன்! எதைப் போல்?
பல துன்பங்களையும் கொண்டாந்து போட்டாலும், தஞ்சம் என்பாரைத் தாங்கும் சடையன் போல்!

5) இராமனுக்கு வசிட்டன் முடி சூட்டுதல்:

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி
(யுத்த காண்டம்: திருமுடி சூட்டுப் படலம் 10492)

சடையனின் முன்னோர்கள், மகுடத்தை எடுத்துக் கையில் குடுக்க, அதை வசிட்டன் சூட்டினான்!
இது கம்பன் சொல்லும் “பெரும்பொய்யோ”? = அல்ல!

உண்மையான பாகவதோத்தமர்கள், கோத்திரம் பார்க்க மாட்டார்கள்;
= யாரோ ஒருவர் “மூலம்” = எந்தை, தந்தை, தந்தை தம் மூத்தப்பன் என்று ஏழ்ப்படிக் கால் தொடங்கி, வந்து வழிவழி ஆட் செய்கின்றோம் (பெரியாழ்வார்)

அப்படி, மூத்தப்பனாய் = சடையன் முன்னோர்கள்! இந்த வரியால், தன் ஆருயிர் நண்பன் சடையனை மட்டுமல்லாது…ஒரு பரம்பரையையே கரை சேர்த்து விட்டான் கம்பன்!

கம்பன் – சடையன்!
= முருகும் தமிழுமாய் ஆழ்ந்த நட்பு, வாழ்வாங்கு வாழி, உலகம் யாவையும்!

dosa 72/365 kamban 11/52

Advertisements
Comments
14 Responses to “One in 1000 = கம்பன்-சடையன் நட்பு!”
 1. சொ.வினைதீர்த்தான் says:

  நூறு பாடல்களுக்கு ஒரு முறை சடையப்ப வள்ளலைப் பாடிக்காப்பியம் இருந்ததாகவும் நரஸ்துதியாக உள்ளது என்று அரங்கேற்றத்தில் ஆட்சேபணை எழுந்ததால் சடையன் ஆயிரத்தில் ஒருவன் என்று ஆயிரத்தில் ஒரு பாடலில் சடையன் புகழ் பாடினான் கம்பன் என்றும் செவிவழிக் கதை படித்த்தேன்.
  ஐந்து பாடல் தானா அல்லது வேறும் உளதா?
  அன்புடன்
  சொ.வி.

  Like

  • நர-ஸ்துதி?
   நர-சிம்மனே, அரங்கேற்றத்தில் Ok சொன்னதாகக் கதைகள் உண்டு!
   பக்கத்துக் கோயிலில் சத்தம் எழுந்ததாம் = கரக் கம்பம், சிரக் கம்பம்!

   கதைகளை விட்டுருவோம்! ஆனா, தற்கால மனிதர்களை அதிகம் நுழைக்க வேண்டாம், காவியத்தில் -ன்னு சொல்லப்பட்டது உண்மை தான்!
   அதான் கம்பன் குறைத்துக் கொண்டான் போலும்!

   //ஐந்து பாடல் தானா அல்லது வேறும் உளதா?//
   Not sure boss! தேடினாக் கிடைக்கும்!
   எனக்கு இந்த ஐஞ்சு தான் தெரியும்:)

   Like

 2. “பெரிய செல்வந்தர் எல்லாம் இல்லை, ஆனா பெரிய மனசு!” அது தானே வேணும்.
  நாதமுனியின் உதவியால் அரங்கேறுகிறது கம்பராமாயணம். எவ்வளவு பெரிய விஷயம்! நம்மாழ்வார் மேல் பாடச்சொல்லி அரங்கேற்றத்தை துவக்கச் சொல்கிறார் நாதமுனி. கம்பரால் நமக்குக் கிடைத்தது சடகோபன் அந்தாதி. மாறன் நாலாம் வர்ணத்தவன், முப்பத்தியிரண்டு வயது, திருவாய் மொழி இயற்றியவர். இந்த அனைத்து செய்திகளும் மிக முக்கிய குறிப்புகள்.

  என் தந்தைக்கும் ஒரு சடையப்ப வள்ளல இருந்தார். என் தந்தைக்கு பதினெட்டு வயது, கல்கத்தா சென்று ஒரு நண்பனின் நண்பனின் வீட்டில் தங்கிக் கொண்டு வேலைத் தேடிக் கொண்டிருந்தார். நடந்தெ பல கம்பெனிகள் ஏறி இறங்கி இரவு பத்து மணிக்கு வீட்டு வந்து சேருவாராம். அந்த வீட்டு புண்ணியவான் தன் மனைவி உறங்கிய பிறகு தயிர் சாதம் பிசைந்து வந்து வாச வெராண்டாவில் தங்கியிருந்த என் அப்பாவிற்கு சாப்பிடக் கொடுப்பாராம். கூச்சப் படும் என் அப்பாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சாப்பிட வைப்பாராம். இப்படி பல நாட்கள். பின் என் தந்தைக்கு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸில் வேலை கிடைத்தது. என் அப்பாவின் ஆயுள் முடியும் வரை அவரைப் பற்றி எங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அந்த சடையப்ப வள்ளலின் கடைசி காலத்தில் என் தந்தையும் அவருக்கு சிறு உதவிகள் செய்து ஓரளவு நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்ள முடிந்தது.

  கம்பன் செய்த பெரும் புரட்சிக்கு வித்து அவன் மனதில் ஊற்றாகப் பெருக்கெடுத்த சடையப்பர் மேல் உள்ள நன்றியுணர்ச்சி.

  ஆயிரத்தில் ஒருவர் என்று சொல்லி மகிழ்ந்த கம்பர் is so positive that he looks at the glass as half full and not half empty!

  //விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில்
  ‘தஞ்சம்! ‘என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல்// ரொம்ப அருமையான உவமை.

  //அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
  பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச
  விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
  மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி//

  ரொம்ப பிரபலமான பாடல். என்னைப் போன்றோர்க்கும் தெரிந்த பாடல். சடையனின் முன்னோர்கள் சபையிலே நின்று கொண்டு தொண்டு புரிந்தனர் என்று உயர்த்தி சொல்வது supreme form of showing gratitude :-) மேலும் கம்பரின் ஆற்றலையும் காட்டுகிறது.

  நல்ல பாட்காஸ்ட் :-) நன்றி KRS!

  amas32

  Like

  • //கம்பரால் நமக்குக் கிடைத்தது சடகோபன் அந்தாதி
   மாறன் நாலாம் வர்ணத்தவன், முப்பத்தியிரண்டு வயது, திருவாய் மொழி இயற்றியவர்
   இந்த அனைத்து செய்திகளும் மிக முக்கிய குறிப்புகள்//

   :))

   ஒரு நாலாம் வருணத்தவனை = “குல பதி” -ன்னு வேறெங்கும் பாக்க முடியாது!
   மாறன் (எ) அந்தப் பையனே = >குல பதே வகுளாபி ராமம்<
   * அந்தணர்களான = பெரியாழ்வாரோ, மதுரகவியோ = குலபதி அல்ல!
   * அரசர்களான = குலசேகராழ்வாரோ, திருமங்கையோ = குலபதி அல்ல!

   தக்குனூண்டு 32 வயசுல செத்துப் போன பையன், நாயகி பாவம் மிகுந்த பையன்
   = அவனே நம்-ஆழ்வார் என்னும் குலபதி! பிரபன்ன ஜன கூடஸ்தர்!

   எய்தற்கு அரிய மறைகளை, இன்தமிழால்
   செய்தற்கு வரும் சடகோபன்
   ——————–

   இது அதிகம் வெளியில் பேசப்படாததால், உள்ளேயே அமுங்கி விடுகிறது:(
   கம்பன் காவியம் பேசுறவங்க கூட,
   ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை -ன்னு கம்பனின் சகலகலாவல்லி மாலை பேசுவாங்க;
   ஆனா இதை அமுக்கிருவாங்க = இலக்கியச் சூழல் :))

   ஆனா, வெண்பாவிற் புகழ் ஏந்தியான, புகழேந்தி மறக்காமல் குறிப்பிடுவார்:
   மாமகிழ் மாறன் புகழாம் வண்தமிழ் வேதம் விரித்த
   மாமகிழ் மாறன்தாள் மலர்
   (வெண்பாம் அல்ல, அப்பழுக்கற்ற வெண்பா)

   Like

 3. rAguC says:

  கொடுத்துச்சிவந்த கரங்கள் எந்நாளும் புகழ் வெளிச்சத்தில் இருந்து தப்பவே முடியாது.

  கம்பன் பாடிய வள்ளல் சடையன். இராம காதையின் “கர்ணன்”!

  Like

  • என்ன ரகு, கர்ணன் -ன்னு சொல்லிக் கதையே மாத்துற?:)

   சடையப்பருக்கு = கொடுத்து சிவந்த “கை” அல்ல!
   கொடுத்துச் சிவந்த “உள்ளம்” – கம்பனுக்காக!

   Like

 4. அன்பின் கேயாரெஸ் – கம்பனைக் கை தூக்கி நிறுத்தி – காலத்தினால் உதவி செய்த வெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளலை – தன் எழுதும் கம்ப இராமாயணத்தில் எத்தனை எத்தனை இடங்களில் – முக்கியமான இடங்களில் எல்லாம் கம்பன் குறிப்பிடுகிறான். இதுதான் செஞ்சோற்றுக் கடனா ? – நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

 5. சடையன் என்று கூறாமல் பிற பெயர்களை வைத்துக் கூறும் சில பாடல்கள் உள.

  சில பிரதிகளில் கீழ்க் கண்ட பாடல் இல்லை:

  அரமடந்தையர் கற்பகம் நவ நிதி அமிர்தம்
  சுரபி வாம்பரி மதமலை முதலிய தொடக்கத்து
  ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப
  வெருவி ஓடின கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின்.

  (பால காண்டம், அகலிகைப் படலம்)

  துர்வாசர் இந்திரனுக்கு இலக்குமியின் மாலையைப் பரிசளிக்கவும், இந்திரன் அதை உதாசீனமாக ஐராவதத்திடம் கொடுக்கிறான். அந்த யானை மாலையை காலின் கீழ் இட்டு மிதிக்கிறது. துர்வாசர் சாபமிடுகிறார் “உன் செல்வங்கள் அனைத்தும் கடலில் ஒளியக்கடவது” என்று. சடையனை அண்டியோர் துன்பம் எப்படி ஓடி ஒளியுமோ அப்படி ஒளிந்தன செல்வங்கள் என்ற உவமை தோன்ற வரும் பாடல் இது. இக்கதையைக் கூறும் பாடல்கள் (சுமார் 20) பழைய பிரதிகள் சிலவற்றில் காணப்படுபவை. இப்போது இவற்றைப் பொதுவாக மிகைப் பாடல்களாகக் கொள்கிறார்கள்.

  வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை? மழை என்று
  ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும்,
  தேசம் கலந்த மறைவாணர் செஞ் சொல் அறிவாளர் என்று இம் முதலோர்
  பாசம் கலந்த பசிபோல் அகன்ற பதகன் துரந்த உரகம்.

  (யுத்த காண்டம், நாகபாசப் படலம், 263)

  இந்திரசித்து ஏவிய நாகபாசத்தை அகற்ற கருடன் வருகிறான். அவன் வந்தவுடன், சடையனைச் சென்று சேர்ந்த மறையோர்களுக்கும் புலவர்களுக்கும் பசி எப்படி அகலுமோ அப்படி நாகபாசம் அகன்றது என்ற பொருளில் வரும் பாடல்.

  இவை எனக்குத் தெரிந்தவை. மேலும் தேடினால் கிடைக்கும்! :-)

  Like

  • நன்றி கருணா:)
   ஆமா, சடையன் -ன்னு குறிப்பிடாம, வெண்ணைய் -ன்னு ஊரை வச்சிக் குறிப்பிடும் பாடல்களும் தேடணும்!
   மிக்க நன்றி, தேடி இங்கே ஒருங்குத் தொகுப்பாய் இட்டமைக்கு!

   நீங்கள் சொன்னது போல், சில பாடல்கள், மிகைப் பாடல்களாகக் கம்பன் கழகத்தார் கொள்கிறார்கள்;
   ஏன்னா அதில் kamban style இல்லை என்பது அவர்கள் கருத்து; Also யாப்பு ஆங்காங்கே இடிக்கும்!

   Like

   • வணக்கம் உங்கள் இப்பொழுதுதான் பார்க்கிறேன் மிகவும் அருமை என்னுடைய பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது.மிக்க நன்றி.நான் ஒரு தமிழ் ஆர்வலன்.எனக்கு ஒரு ஐயம் கம்பனின் புலமை மெச்சும்படியாகவே இருக்கிறது.அனாலும் ஒரு வடமொழியான் தமிழனை அரக்கனாகவும் வில்லனாகவும் சித்தரித்து எழுதிய கதையை ஏன் எழுத வேண்டும்.

    Like

 6. வணக்கம் உங்கள் பதிவை இப்பொழுதுதான் பார்க்கிறேன் மிகவும் அருமை என்னுடைய பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது.மிக்க நன்றி.நான் ஒரு தமிழ் ஆர்வலன்.எனக்கு ஒரு ஐயம் கம்பனின் புலமை மெச்சும்படியாகவே இருக்கிறது.அனாலும் ஒரு வடமொழியான் தமிழனை அரக்கனாகவும் வில்லனாகவும் சித்தரித்து எழுதிய கதையை ஏன் எழுத வேண்டும்.

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: