சந்தனக் கிளி ஆனாள்!

காதல் வந்தா ஒங்க குரல் மாறீடுமா என்ன?
டேய் முருகவா, எனக்கொன்னும் மாறலையே:)

ஆனா, இந்தப் பொண்ணுக்கு மாறிடிச்சாம்;
அம்மாக்காரி, விசயத்தைப் புரிஞ்சிக்கிட்டு, அவளை வீட்டுக்குள்ளாற அடைச்சிட்டாளாம்!
எந்தூருல இது? = செந்தூருல தான்!
கந்தன் ஊரிலே, கன்னிக்கு நேர்ந்த கொடுமையைக் கேப்பாரு இல்லையா?:)


திணைமாலை 150 = பதினெண் கீழ்க் கணக்கு நூல் = 150 காதல் வெண்பாக்கள்!

* பொதுவா, சங்க இலக்கியக் காதல் = ஆசிரியப்பா/கலிப்பாவில் (இசை) தான் இருக்கும்!
* சங்கம் மருவிய காலம்: நீதிநூல் = வெண்பா (இயல்) தான் நச் -ன்னு இருந்தது;
* பின்னாளில்: பேரிலக்கியங்கள் எழ எழ = வெண்பாவை விட எளிமையான விருத்தப்பா பரவல் ஆனது!

மிகுந்த இலக்கணத்தில் கவனம் செல்லாமல், கருத்தில் கவனம் செலுத்த ஏதுவாய், பரிணாம வளர்ச்சி!
புதுக் கவிதைகளே, இந்த அடிப்படையில் எழுந்தவை தானே?

கீழ்க் கணக்கு-ன்னாலே = நீதி தானாய்யா? Too much Moral Science:)
அதை ஓரளவு ஈடு கட்ட வந்தவை, சில அகத்திணை நூல்கள்
ஆனா, அந்தச் சமயத்து Fashion = வெண்பாவிலேயே, காதலையும் சொல்லின!

இசையோடு-உணர்வுகள் சிலிர்க்காது, இவை வெறும் இயற் பாவாய்ப் போனதால், குறுந்தொகை/அகநானூறு போல், அவ்வளவாகப் பரவலாகவில்லை:(
ஆனாலும், சில அற்புதமான தேக்கங்கள், இந்த வெண்பாக்களில் உண்டு!


முல்லை, குறிஞ்சி… = ஐந்திணைகள் x 30 பாடல்
மாலை போல் தொடுத்து = திணைமாலை 150!

ஆனா 153 பாடல்கள் வருவதால், extra 3 இடைச்செருகலோ -ன்னு ஐயம்!
இந்த நூலை எழுதிய கவிஞரு = கணி மேதாவியார்! Maths Pista:)
ஏலாதி என்ற மற்றொரு 18 கீழ்க் கணக்கு நூலும் பாடி இருக்காரு;
ஆனா அது நீதி-நூல்; இது காதல் நூல் = நல்லாக் “கணக்கு” பண்ணுவாரு போல:)

சூழல்: பகற்குறிக்கண் வந்த தலைவனைக் கண்டு, தோழி செறிப்பு அறிவுறீஇயது
ஏதாச்சும் விளங்குச்சா?:))
* செறிப்பு = சிறைப்பு; சிறை வைத்தல்
* இற் செறிப்பு = வீட்டுக் காவல்!

பகலில், அவள் கழனி/தினைப் புனத்தில் வேலை பாக்கும் போது, அவனும் வந்து “வேலை” பார்ப்பான்:))
ஆனா கொஞ்ச நாளா, அவளைக் காணலை!
என்ன?-ன்னு தோழியை உசாவுறான்; தோழி, “செறிப்பு அறிவுறீஇ” = சிறைப் பட்டாள் -ன்னு அறிவுறுத்துறா!


நூல்: திணைமாலை நூற்றைம்பது
கவிஞர்: கணிமேதாவியார்
திணை: குறிஞ்சி
துறை: செறிப்பு அறிவுறூஉ

சாந்தம் எறிந்து உழுத சாரல் சிறு தினை,
சாந்தம் எறிந்த இதண் மிசை – சாந்தம்
கமழக், கிளி கடியும் கார் மயில் அன்னாள்
இமிழக், கிளி எழா ஆர்த்து


காபி உறிஞ்சல்:

சாந்தம் எறிந்து உழுத சாரல்

சாந்தம் = சந்தனம்!  சாந்துப் பொட்டு-ன்னு வரும்-ல்ல தேவர் மகன் சினிமாவுல?:)
குறிஞ்சி மலை வளம்; அதனால், சந்தன மரத்தையே வெட்டி, ஏரு பூட்டி உழறாங்களாம்!

சிறு தினை, சாந்தம் எறிந்த இதண் மிசை

இதண் = பரண்;  தினை விதைச்சி இருக்காங்க! காவல் காக்க ஒரு பரண் இருக்கு!
அந்தப் பரணின் கால்களும், சந்தன மரக் கட்டையால் முட்டுக் குடுத்து இருக்காங்க! அட வீரப்பா:)

சாந்தம் கமழக், கிளி கடியும், கார் மயில் அன்னாள்

சந்தனம் பூசிய பொண்ணு; அவ மயில் போன்ற உடம்புல அப்பிடியொரு வாசம்;
அவ பரண் மேல ஏறி…
தினை கொத்த வரும் கிளியை, ஆலோலம் பாடிக்கிட்டே விரட்டுறா! கையில் கவண் கல்லு!

கோல மயில் இனங்காள் – ஆலோ ஆலோ ஆலோ
கோதில்லாத அன்னங்களா – ஆலோ ஆலோ ஆலோ
காடை கெளதாரிகளா – ஆலோ ஆலோ ஆலோ

இமிழக், கிளி எழா, ஆர்த்து

ஆ! இது என்னாது? என் குரல் மாறிடுச்சே! = அவன் கிட்ட நான் விழுந்ததால் வந்த விளைவோ?
இமிழ்தல் = கிளி போல என் குரலும் ஆயிருச்சே!
ஏதோவொரு கிளி தான் கூப்புடுது -ன்னு, இன்னும் பல கிளிகள் வந்து தினையைக் கொத்துதுங்களே!

அடிப் பாவீ… ஒன்னைய விட்டா, தினைப் புனமே ஆலோ ஆலோ தான்!
இனி, இந்தக் கழனிப் பக்கமே வராதே!
வீட்டுக்குள்ளாற உன்னை வச்சிப் பூட்டுறேன்! அப்போ, குரல் சரியாகும் பாரு!:)

(என் உரை: கிளியை விரட்ட வந்தவள், கிளியாகவே மாறிப் போனாள்
இந்தக் கிளியைப் பாழும் தனிச்சிறையில் அடைக்காமல், உன் தோளில் தொத்திக் கொள் முருகா!)

dosa 67/365

Comments
7 Responses to “சந்தனக் கிளி ஆனாள்!”
  1. அன்பின் கேயாரெஸ் – சந்தன மரத்தினையே வெட்டி ஏராகப் பூட்டும் வ்ளம் நிறைந்த குறிஞ்சி மலையில் சந்தன மரத்தினாலேயே பரண் அமைத்து சந்தன வாசனையுடன் உள்ள பெண் பரணேறி கவண் கல்லுடன் திணை கொத்த வரும் கிளிக்ளை விரட்டுகிறார் – அப்போது அவளின் குரலும் கிளியின் குரலினைப் போலவே மாறி விடுகிறது. கிளிக்குரலை விரும்பி பல கிளிகள் வந்து திணையினை கொத்திச் செல்ல – இதனைக் கண்ட தாய் அப்பெண்ணை வீட்டினுள் வ்சத்து பூட்டி விடுகிறாள்.

    நல்லதொரு பாடல் – பதவுரை பொழிப்புரை அனைத்தும் அருமை

    நல்வாழ்த்துகள் கேயாரெஸ்
    நட்புடன் சீனா

    Like

    • ஆமாம் சீனா சார்
      சந்தன மரத்துல, ஒங்க வீட்டுல நீங்க ஒரு அலமாரி கூடப் பண்ண முடியாது, போலீஸ் வந்துரும்:)
      ஆனா, இங்க பரணே அமைக்கிறாங்க!

      Like

  2. amas32 says:

    சந்தன மணத்திலேயே கிறக்கம் வந்து காதல் பெருகிவிடும் அபாயம் உள்ளது. அவளை சுற்றி சந்தனம் மணக்கிறது, அவளும் மணக்கிறாள். நெஞ்சிலோ காதலன் நினைவு. கிளியை ஓட்ட நினைத்து எழும் அவள் குரல் ஒலியோ கிளியை வரவழைக்கும் கிளிக்குரல் ஆகிவிடுவது காதலின் விந்தை தான் :-) ஆனால் அதுவே அவளுக்குப் பகையாகி விடுகிறதே! வீட்டு சிறை வாசம். எங்கும் எப்பொழுதும் காதலுக்கு தாய் தான் முதல் எதிரி. மிக நுண்ணிய அறிவோடு சட்டென்று மகளின் நடத்தையில் நிகழும் மாற்றத்தைத் துல்லியமாகக் கணித்து விடுவாள்.

    துளி சந்தனம் போட்ட நறுமுகை தெளிப்பான் இப்போ அந்த விலை விற்கிறது, அப்போ சேற்றில் உழும் கலப்பையை சந்தன மரத்தை வெட்டி ஏரு பூட்டி உழுதிருக்கிறார்கள். பரண் அமைப்பதும் சந்தன மரத்தால், ஹூம்! அது ஒரு கனாக் காலம்! :-)

    amas32

    Like

    • rAguC says:

      //எங்கும் எப்பொழுதும் காதலுக்கு தாய் தான் முதல் எதிரி. மிக நுண்ணிய அறிவோடு சட்டென்று மகளின் நடத்தையில் நிகழும் மாற்றத்தைத் துல்லியமாகக் கணித்து விடுவாள்.//

      பாம்பறியும் பாம்பின் கால்ன்னு சொல்லுவாங்களே அம்மா :))

      //துளி சந்தனம் போட்ட நறுமுகை தெளிப்பான் இப்போ அந்த விலை விற்கிறது, அப்போ சேற்றில் உழும் கலப்பையை சந்தன மரத்தை வெட்டி ஏரு பூட்டி உழுதிருக்கிறார்கள். பரண் அமைப்பதும் சந்தன மரத்தால், ஹூம்! அது ஒரு கனாக் காலம்! :-) //

      அது அவ்வளவு வளம் கொழிக்கும் பிரதேசம் என்பதை குறிப்பால் உணர்த்த எழுதப்பட்ட உயர்வு நவிற்சி தானே ?

      Like

      • amas32 says:

        உயர்வு நவிற்சி பற்றி இந்தப் பாடல் மூலமும் இதற்கு முந்தைய பாடல் மூலமும் நன்கு புரிந்து கொண்டேன், நன்றி KRS :-)

        amas32

        Like

      • இன்னிக்கி உயர்வு நவிற்சி போல் இருக்கு!
        ஆனா, 2000 yrs back, குறிஞ்சி மக்கள், சந்தன மர வணிகம் எல்லாம் ரொம்பப் பண்ணதில்லை!
        மலைவாசிகள்; அவங்களுக்கு இயற்கையாக் கிடைக்குற மரத்தை, எல்லாத்துக்கும் பயன்படுத்திக்குறாங்க -ன்னும் கொள்ளலாம்!
        மங்களகரமா, முதல் உழவு துவங்கட்டும் -ன்னும், இருக்கலாம் இல்லீயா?

        சங்கக் கவிதைகள் வாசிக்கும் போது, காலப் பரிமாணத்துடன் கூடிய வாசிப்பு, பல புதிய திறவுகளைக் குடுக்கும்!

        Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)