என்ன (பல்லிச்) சத்தம், இந்த நேரம்!

பல்லி சத்தம் போட்டா = நல்லது நடக்கும் -ன்னு ஒரு (மூட) நம்பிக்கையா?
ஆமாம்! சங்கத் தமிழில் மூட நம்பிக்கை:)

ஒடனே, பல்லிக்குப் பூசை வச்சி, மரத்துக்குக் கல்யாணம் பண்ணி..,
பல்லி விழும் பலன், பல்லி தோஷப் பரிகாரம் – அமைப்பு ரீதியான மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது!
இது, ச்சும்மான்னாங் காட்டியும், காதலில் வருவது! லுல்லாலுல்லாலாயி:)

வீட்டில் யாருமே இல்ல, அவ மட்டும் தான் – தனிமையில் ஏங்கும் தனி மயில்!
அவன் எப்போ வருவானோ?-ன்னு அவனையே நினைச்சி நினைச்சி…

பல்லிச் சத்தம்
ஆகா! நாம ஒன்னு மனசில் நினைக்க, ஒத்திசைவா இதுவும் சத்தம் போடுதே, வந்துருவான் -ன்னு சின்னச் சின்ன ஆசை!:)


கலித்தொகை = அகத்திணையில் ஒரே இசை நூல்
பதிற்றுப்பத்தும், பரிபாடலும் = புறத்திணைகள்!

* கலித்தொகை = கலித்து (ஒலித்து) வருவது = Rock
* பரிபாடல் = பரிந்து வருவது = Melody

கற்று அறிந்தார் ஏத்தும் கலி -ன்னு சொல்லுறது வழக்கம்!
அதன் அழகும், நாடகமும் அப்படி;
புரட்சி நூலும் கூட = கைக்கிளையும் ஒதுக்காது, அன்பின் அகத்திணையில் கொண்டாந்து வைக்கும்!

மொத்தம் 5 பேர் பாடிய தொகுப்பு; ஒவ்வொருவரும் ஒரு திணையைப் பாடி இருக்காங்க!
தமிழ்ச் சமூக வாழ்வியலை, அழகான நாடகம் போலக் காட்டும்!

* சல்லிக் கட்டில், காளையை அடக்கிய போது, மாட்டுக் கொம்பில் இருந்த பூ, கூட்டத்தில் அவ மேல வந்து விழுந்துச்சாம் = பச்சக், காதல் பத்திக்கிச்சி:))
* முருகனின் அறுபடை வீட்டை, முருக பக்தர் நக்கீரர் மட்டுமா காட்டுறாரு? கலித்தொகையும் காட்டும்!
* தன் காதல் உண்மையே-ன்னு திருமாலின் மேல் சத்தியம் செய்யுறான் காதலன்! இதுவும் காட்டும்!

இப்படி, மக்கள் வாழ்வியல் தொன்மங்கள் – விழுமியங்கள்!


பாடல்: கலித்தொகை 11 (lines 4-22)
கவிஞர்: சோழன் நல்லுருத்திரன்
திணை: முல்லை
இசை: ஒத்தாழிசைக் கலி

பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்
வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:
‘அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,
கடியவே’ கனங் குழாஅய்! ‘காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,
துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே
….
இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே!


காபி உறிஞ்சல்:

பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்
வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:

வலிப்பல் = பல்லு வலி-ன்னு நினைச்சிக்காதீங்க:)
வலிப்பல் யான் = வலிமை (உறுதி) கொள்ளுறேன் நானு; வந்துருவான்டி!
பொருள் தேடப் போயிருக்கான்; ஆனா பிரிவை எண்ணி எண்ணியே தான் போயிருக்கான்; வந்துருவான்!
வயங்கு+இழை = விளங்கும் இழை அணிந்த பெண்ணே (Fibre போல் இழை), கேளு!

‘அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,
கடியவே’ கனங் குழாஅய்! ‘காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,

அடி தாங்கும் அளவு = கால், சூடு தாங்கும் அளவு!
சில கோயில்ல, திறந்த வெளி மண்ணு கொட்டி வச்சிருப்பாங்க! அங்கிட்டு நடந்து பாருங்க தெரியும், அடி தாங்கும் சூடு!

அழல் அன்ன வெம்மை = தீ மேல் நடப்பது போல்..
வேணாம்டி, நீ காட்டுக்குள்ள வரவேணாம்! நான் போயிட்டு வந்துடறேன் -ன்னு போனான்!

துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே

யானைக்குட்டிகள் கலக்கி இறைக்கும் தண்ணி = சிறிய நீர்நிலை (சின்னீர்);
அப்ப கூட, தன் காதலிக்கு ஊட்டிட்டு, அப்பறம் தான் குடிக்குமாம் ஆண்யானை
(பிடி=பெண் யானை; களிறு=ஆண் யானை)

* மனிதச் சாதியில், புருசன் தின்ன பின்னாடி, பொண்ணுங்க சாப்பிடணும் -ன்னு பேசிப்பேசியே, ஒரு “ஒழுக்க நெறியா” ஆக்கீட்டோம்!
* ஆனா, விலங்குச் சாதியில் பாத்தீங்களா? – ஆருக்கு ஆறறிவு? இதைச் சங்கத் தமிழ் காட்டுது!

பிடி ஊட்டி,பின் உண்ணும் களிறு
= அதைப் பாக்கும் போது, நான் சாப்பிட்டேனா? -ன்னு அவனுக்கு ஞாபகம் வருமோ? அவனும் சாப்பிடாம இருக்கானோ? பசி தாங்க மாட்டானே! அதுக்காகவாச்சும் வந்துருவான்!

இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர்;

புனை நலம் = Makeup
நான் புனை நலம் இல்லாம இருக்கேனே; அவன் தான், என்னை வாட்டுறான் -ன்னு அவனைத் தப்பா நினைச்சிறாத;

மனைவயின் – பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல் எழில் உண் கணும் ஆடுமால், இடனே!

அதோ, பல்லியும் சத்தம் போடுது; என் மனசை ஒத்து இசைக்குது!
மையை உண்ணும் என் இடக் கண்ணும் துடிக்குதுடீ!
அவன் வந்துருவான், வந்துருவான்!

= பிடி ஊட்டி, பின் உண்ணும் களிறு!
எனக்கூட்டி அவன் உண்ணும் முருகன்!வந்துருவான்; வந்துருவான்!

dosa 62/365

Advertisements
Comments
13 Responses to “என்ன (பல்லிச்) சத்தம், இந்த நேரம்!”
 1. நல்ல விளக்கம்… மிக்க நன்றிங்க…

  Like

 2. பல்லி என்றதும் நினைவுக்கு வருவது நாரை விடு தூதுதான்:

  நாராய், நாராய், செங்கால் நாராய்,
  பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
  பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
  நீயும் நின் மனையும் தென்திசை குமரியாடி
  வடதிசைகேகுவீராயின், எம்மூர்
  சத்திமுத்த வாவியுள் தங்கி
  நனை சுவர்க் கூரை கனை குரல் பல்லி
  பாடு பார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டே,
  எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
  ஆடையின்றி வாடையில் மெலிந்து,
  கையது கொண்டு மெய்யது பொத்தி,
  காலது கொண்டு மேலது தழீஇப்
  பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
  ஏழையாளனைக் கண்டனம் எனுமே!

  (சிறு வயதில் படித்த நினைவிலிருந்து எழுதியது. பிழை இருந்தால் திருத்தவும்.)

  Like

  • Perfect Reference to the context; Awesome!
   நன்றி கருணா; மிக்க அருமை!

   //நனை சுவர்க் கூரை கனை குரல் பல்லி
   பாடு பார்த்திருக்கும் எம் மனைவி//

   பல்லி பாடுமா? -ன்னு பாத்து/காத்து இருக்காளாம் மனைவி!
   Whattay emotion in just 2 lines!

   Like

 3. அன்பின் கேயாரெஸ் – அருமை அருமை – காதலனை எதிர் பார்த்து நிற்கும் காதலிக்குப் பல்லி தான் துணையோ – காதலன் விரைவினில் வர நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 4. அன்பின் கேயாரெஸ் – நாரை விடு தூது – சிறு வயதில் – 1963-66 என நினைக்கிறேன் – பள்ளியில் மனப் பாடப் பகுதி – நெட்டுரு போட்டது நினைவில் பசுமையாக நிற்கிறது – சொல்லிப் பார்த்தேன் – அப்படியே நினைவில் இருந்து அத்த்னை வரிகளும் வந்து விழுகின்றன. இப்பாடல் பற்றி எங்க்ளுக்க்குச் சொல்லிக் கொடுத்த எங்கள் அருமைத் தமிழாசிரியர் அலங்காரம் அவர்களை நினைவுறுத்திய பாடல். அவர் சொல்லிக் கொடுத்த ந.சூ அவரை எப்பொழுதும் நினைவில் நிறுத்தும். அக்கால ஆசிரியர்களை நினைக்கும் போது இக்கால ஆசிரியர்கள் …………….. கற்பிக்கும் முறை மாறி விட்டது. ம்ம்ம்ம்ம்ம்ம் – நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  Like

  • மனப்பாடப் பகுதி – பலரும் வெறுக்கும் பகுதி;
   ஆனா அதே பகுதியைத் தான், பிற்பாடு சிலாகித்துப் பேசுறாங்க:))

   மனப்பாடப் பகுதியை, நல்ல முறையில்/சந்த முறையில் தேர்ந்தெடுத்து..
   ஏன் மனப்பாடம்? பின்னாளில் அசை போட்டுப் பாக்க இன்பமா இருக்கும் -ன்னு
   Jollyஆ பாடம் நடத்துறது ஆசிரியர் கையில் தான் இருக்கு! அப்போ தான் மனப்பாடப் பகுதி மேல் வெறுப்பு வராது!:)

   சில தமிழ்ப் பாக்களை – அரசின் தமிழ் வளர்ச்சித் துறையே, சினிமாப் பாட்டு போல், இசையமைத்தும் வெளியிடலாம்!
   இசை மூலமாக் கேட்கும் போது, மனப்பாடப் பகுதி, தானே மனசுக்குள் தங்கி விடும்!
   தமிழ்ப் பாட நூலில், இசை என்பதே போய், வெறும் இயல் என்றே ஆகி விட்டது:(

   இசை மூலமா மனசில் சேர்ந்துருச்சி-ன்னு வைங்க,
   இயல் -ன்னு Lyrics தேடி, நாமே அலைவோம் இல்லீயா?
   சினிமா Lyrics புத்தகம் – Small Sizeல வித்ததை ரொம்பச் சின்ன வயசில் பாத்திருக்கேன்; சித்தப்பா வாங்கியாருவாரு:)

   Like

 5. கையது கொண்டு மெய்யது பொத்தி,
  காலது கொண்டு மேலது தழீஇப்
  பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
  ஏழையாளனைக் கண்டனம் எனுமே!

  பொருள் புரிந்து – படித்தது -மனம் அசை போட மகிழ்ந்தேன் கேயாரெஸ் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 6. //நல் எழில் உண் கணும் ஆடுமால், இடனே!// என் இடது கண்ணும் துடித்தது , உன்னை கண்டேன் இந்நாள் பொன்னாள் ன்னு ஈஸ்வரியம்மா பாடின பாடல் நினைவுக்கு வருகிறது. வலக்கண் துடித்தால் ஆணுக்கு அதிர்ஷ்டம், இடக்கண் பெண்ணுக்கு.

  இந்தப் பாடலில் வரும் பெண் சோகத்திலும் தைரியம் இழக்காமல் இருக்கிறாள். அதற்குக் காரணம் தலைவன் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கையும் அதனால் விளைந்த அன்பும்.

  அது அந்தத் தலைவனின் சிறப்பைக் காட்டுகிறது. பல சமயங்களில் காதலனோ கணவனோ சொன்ன நேரத்தில் திரும்பி வரவில்லை என்றால் பெண்கள் நொந்து நூலாகிவிடுவார்கள். ஆனால் இவள் நம்பிக்கையோடு இருக்கிறாள். பள்ளி சத்தம் போடுகிறது, என் கண துடிக்கிறது, இதெல்லாம் நல்ல சகுனம் என்கிறாள். ஆனால் தலைவன் மேல் நம்பிக்கை இல்லாவிடில் பல்லி சத்தமும் காதில் விழாது, இடது கண் துடித்தாலும் உணர்வற்று போயிருப்பாள்.

  //கையது கொண்டு மெய்யது பொத்தி,
  காலது கொண்டு மேலது தழீஇப்
  பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
  ஏழையாளனைக் கண்டனம் எனுமே!//

  அப்பா! என்ன வரிகள் இவை!

  நன்றி கருணாகரன்.

  amas32

  Like

  • Thanks-ma for reminding LR Easwari!:)
   என்னவொரு பாட்டு, எம்.ஜி.ஆர் படம்! (குமரிக் கோட்டம் ன்னு நினைக்கிறேன்)

   நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
   எனக் காதல் தேவதை சொன்னாள்…
   என் இடது கண்ணும் துடித்தது, உன்னைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்!
   LR Easwari Rocks!

   நீல‌வ‌ண்ண‌க் கூந்த‌ல், நீயிருக்கும் ஊஞ்ச‌ல்…
   பால் கொடுத்த‌ வெண்மை, என் ப‌ளிங்குப் போன்ற‌ மேனி, வா நீ -ன்னு வரும்:) ஈஸ்வரி கலக்கி இருப்பாங்க!

   Like

 7. எல்லோரும் எனக்கு ஏன் நன்றி கூறுகிறீர்கள்? சத்தி முத்தப் புலவருக்கு அல்லவா கூறவேண்டும்? :-)

  @KRS: மனப்பாடப் பகுதியைப் பற்றிச் சொன்னீர்கள். வேடிக்கை என்னவென்றால் நான் பள்ளியில் தமிழ் கற்கவில்லை. தனியாக வீட்டில் படித்ததுதான். சிறு வயதில் என்றோ ஒருநாள் படித்தது. சந்தம் மனத்தைக் கவரவே ஒன்றுக்குப் பலமுறை படித்தேன். அவ்வளவுதான். பசுமரத்தாணி என்று சும்மாவா சொன்னார்கள்?

  முதலில் முழுதாகப் பொருள் புரியவில்லை. பிறகு ஒவ்வொரு முறை மனது அசை போடும்போதும் ஒரு முடிச்சு அவிழும். முழுதும் பொருள் புரிந்தவுடன் ஒரு பிரமிப்பு.

  @amas32: ஆம். அந்த நான்கு வரிகளில்தான் எத்தனை உணர்ச்சி! “காலது கொண்டு மேலது தழீஇ” – குளிர் நடுக்க உடலைக் குறுக்கிப் படுத்ததை எவ்வளவு அழகாக வர்ணித்து இருக்கிறார்!

  Like

 8. //அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மை//
  எவ்வளவு எளிமையா இன்னிக்கும் எல்லாருக்கும் புரியும்படியான எளிமையா இருக்கு :-)

  நல்ல தேர்வு

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: