அவனுக்கு – காதலி எடுக்கும் பாடு!

பொதுவா, சங்கத் தமிழ் = பெண்களைப் பீடத்தில் ஏற்றாது!
கணவன், பரத்தை வீட்டுக்குப் போவ ஆசைப்பட்டாலும், கொண்டு போய் விடணும் -ங்கிற நளாயினி கதைகள் எல்லாம் சங்கத் தமிழில் இல்லை!
தமிழ் = அன்பை “வியக்கும்”! ஆனா அன்பை “விதிக்காது”!

மனைவி, கணவன் மேல் கொள்ளும் அன்பு = எப்படிப்பட்டது?

* உடல் அன்பா?
* உள்ள அன்பா?
* செல்வ அன்பா?
* குடும்ப அன்பா?
* சமூக நிலை அன்பா?

இன்னிக்கி, இந்தக் கேள்வியைக் கணவர்கள் கிட்டக் கேட்டா… கொட்டித் தீத்துருவாய்ங்க:) நீயாநானா நிகழ்ச்சி தான் நடத்தோணும்:)
மனைவிகளிடம் கேட்டா, அவங்களும் கொட்டித் தீத்துருவாய்ங்க! நீயாநானா கோபி அடி வாங்கினாலும் வியப்பில்லை!:)

“எதிர்பார்ப்பு” என்னும் மந்திரச் சொல்லே இத்தனைக்கும் காரணம்!
* காதலின் போது இருந்த ஒட்டுறவு, மணமான பின் மறைந்து விடுகிறதா என்ன?
* அப்படீன்னா, நான் காதலோடவே இருந்து விடுகிறேன், முருகா;
வேண்டாம் இந்த மணம்:)


இன்னிக்கி, கொஞ்சம் சோகமான பாட்டு! ஆனா, அதன் காட்சிக்களம் மட்டும் ஆழமாப் பாருங்க!

கணவன் இறந்து விட்டால், ஒரு மனைவி என்ன செய்வாள்?
= அவள் பதைப்பும் துன்பமும் தெரிந்ததே!
= சிறிது சிறிதாக, இயல்புக்குத் திரும்ப வேண்டியது தான்!
= வீதி வரை மனைவி! கடைசி வரை யாரோ?

ஆனா காதலன் இறந்து விட்டால், ஒரு காதலி என்ன செய்வாள்?
= இன்றைய “கண்டவுடன் காதலைக்” கொண்டு எடைபோட வேணாம்!
= வீட்டுக்குக் காதல் தெரியாத நிலையில், அவ Reaction என்னவா இருக்கும்?
= அவள்-அவன் பிணைப்பு? எது வரை??


பாடல்: புறநானூறு 255
கவிஞர்: வன்பரணர்
திணை: பொதுவியல்
துறை: முதுபாலை

“ஐயோ!” எனின், யான் புலி அஞ்சுவலே;
அணைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்கவல்லேன்;
என் போல் பெரு விதிர்ப்புறுக, நின்னை
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே!
நிரை வளை முன் கை பற்றி
வரை நிழல் சேர்கம் நடத்திசின் சிறிதே!


சூழல்: போருக்குச் சென்ற காதலன், இறந்து விடுகிறான்!

* மனைவியாக இருந்தால், உற்றார்-உறவினர் ஆண்கள் போய்க் கொண்டு வருவர்! இங்கோ காதல் மட்டுமே!
* சரி, காதலன் வீட்டில், யாரேனும் சென்று எடுத்து வருவார்கள் -ன்னா அதுவுமில்லை! அவன் “அனாதை”:(
என்ன செய்வாள்? = மனசால் அவனே -ன்னு மூலையில் இருப்பவள்…

காபி உறிஞ்சல்:
“ஐயோ!” எனின், யான் புலி அஞ்சுவலே;
அணைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்கவல்லேன்;

என்னால், தனி ஒருத்தியா முடியலீங்க… அத்தான்!
ஐயோ-ன்னு சத்தம் போட்டா, காட்டில் புலி வந்துருமோ? -ன்னு பயமா இருக்கு!
உன்னை, அணைத்துத் தூக்கலாம் -ன்னு பார்த்தா…
உன் அழகான-அகலமான மார்பு,  என்னால் முழுசாத் தூக்க முடியல! அகல் மார்பு எடுக்க வல்லேன்!

என் போல் பெரு விதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே!

ஏய், அறம் இல்லாத கூற்றுவனே!
என்னவனுக்கு நான் இனியது குடுத்தேன்; நீ இன்னாது கொடுத்து விட்டாயே!
இன்று நான் படும் அல்லல் போல், நீயும் படுவாய், காலமென்னும் கூற்றுவா!

நிரை வளை முன் கை பற்றி
வரை நிழல் சேர்கம் நடத்திசின் சிறிதே!

என்னவா, என் வளையல் நிரம்பிய, கையைப் பிடிச்சிக்கோடா…
முடியலடா, நீயும் கொஞ்சமா நடக்கறீயா?
நடந்தீன்னா… நாம அப்படியே, அதோ அந்த மலை தெரியுதே, அந்த நிழலில் ஒதுங்கி விடலாம்!
என்னவா, கொஞ்சம் ஒத்துழைச்சிக், கூடவே வாடா!

இந்தப் பெண்ணின் தலையெழுத்து என்னமோ? ஆனா…
இறுதியிலும், அவனை-அவள் விடவில்லை! பாடு எடுக்குறா!
என்னவா, என் முருகவா, இவ மனசையே எனக்கும் தாடா… இவள் ஆர்வம் ஈ!

dosa 54/365

Comments
4 Responses to “அவனுக்கு – காதலி எடுக்கும் பாடு!”
  1. காதலன் காதலி இருவரில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டாலும் இருப்பவருக்கு வரும் துன்பம் பகிர்ந்துகொள்ளமுடியாத சோகத்தால் பன்மடங்காகிறது.

    இந்தப் பாடலில் காதலன் வீரன். போர்களத்தில் மடிந்து விடுகிறான். உயர்ந்த சாவு. ஆனால் உயிர் போய் விட்டதே. காதலிக்கு உயர்ந்த சாவினால் என்ன பெருமை?

    திருமணம் ஆகும் வரை காதலன் பெரும் ஹீரோ காதலிக்கு. மணமான பின் தான் அவனது பலவீனங்கள் அவள் கண்ணுக்கு ஒன்றொன்றாய் தெரிய வரும். Marriage demystifies the glories of love! Hence death of a lover before marriage is even more sorrowful.

    ஆனால் அவள் காதல் எவ்வளவு சக்தி வாய்ந்தது பாருங்கள்! தனியாக போர்களத்திற்கு செல்கிறாள். அகண்ட மார்புடைய பெரு வீரனை அவள் ஒருத்தியால் தூக்க்கவும் முடியவில்லை. காலனை சாடுகிறாள். அவனுக்கு சாபமும் இடுகிறாள். இறந்து கிடக்கும் காதலனைப் பார்த்து கெஞ்சுகிறாள் அரற்றுகிறாள். அவனை போர்க்களத்தில் இருந்து அப்புறப் படுத்த பெரு முயற்சி எடுக்கிறாள். அவள் வைராக்கியம் தான் அவள் நினைத்த காரியத்தை முடித்து வைக்க உதவுகிறதோ?

    உலகில் தான் எத்தனை வகை துன்பங்கள்!

    amas32

    Like

    • //Marriage demystifies the glories of love//
      உண்மையே!
      ஆனா தவறல்ல! ஹீரோவும் சாதாரண மனிதன் என்று அறிந்த பின்னும் இருக்கும் காதல் = அதன் சுகமே சுகம்! பிறவிக்கு ஒரு நறுமணம்!

      //காலனை சாடுகிறாள். அவனுக்கு சாபமும் இடுகிறாள்//
      நளாயினி கதை போல் இருக்கு-ல்ல?
      ஆனா வித்தியாசம் என்ன?
      * அங்கே பரத்தை வீட்டுக்கும் கூட்டிச் செல்லணும் பத்தினி -ன்னு பெண்ணினம் மேல் “திணிக்கப்பட்ட நெறி”
      * சங்கத் தமிழோ, நெறியாய் எதையும் திணிக்காது, உள்ளத்தில் காட்சிப் படுத்தி நின்றுவிடும்!

      //அவள் காதல் எவ்வளவு சக்தி வாய்ந்தது பாருங்கள்! தனியாக போர்களத்திற்கு செல்கிறாள்//
      I have a special place in my heart for this song ma!

      Like

  2. rAguC says:

    அகல் மார்பு எடுக்கவல்லேன் – இறந்த போதும் அவன் அவளுக்கு காதலன் தான், வெறும் பிணமல்ல…

    என்னை போலவே நீயும் அழுவடா காலனே — உனக்கும் அழும் காலம் வரும்

    நிறைய வளையல் போட்டிருக்கும் முன்கையை பற்றிகொண்டு நடடா… டேய்… நீய் இன்னும் சாகலடா…சீக்கிரம் நடந்தா நிழலுக்கு போய்டலாம்… வா

    அவளால் இந்த இறப்பை தாங்கி கொள்ள முடியவில்லை என்பதை விட ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்பதே மிகச்சரி

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)