யாதும் ஊரே; யாவரும் கேளிர்

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்”

இது மிகவும் பிரபலமான பாட்டு; எல்லாருமே கேட்டிருப்பீங்க! ஆனா அடுத்த வரி??
“அன்பே எங்கள் உலக தத்துவம்” -ங்கிற வரி அல்ல! அது சினிமாவில் மட்டுமே:)
“திரையிசைச் சக்கரவர்த்தி” MSV இசையில்…, நினைத்தாலே இனிக்கும் Susheelamma குரலில்…& SPB

சிலரு நீட்டி முழக்கி, யாவரும் “கேளீர்” -ன்னு பாடுவாங்க:)  அது பிழை;
கேளிர்= உறவினர்;
கேளிர் எல்லாருமே கேளீர் ஆவறதில்லை; கேளீர், கேளீர் ன்னு எத்தினி முறை அழைத்தாலும், கேட்கக் கூட மாட்டாங்க, நம்ம பேச்சை:) யாவரும் “கேளிர்” -ன்னு திருத்திக்கிட்டு, பாட்டுக்குள்ள நுழைவோம், வாங்க!


யாதும் ஊரே யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிது என மகிழ்ந்து அன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண் துளி தலைஇ; ஆனாது

கல் பொருது இரங்கும் அல்லல் பேர் யாற்று
நீர்வழிப் படூஉம் புணை போல், ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது,  திறவோர்
காட்சியில் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

திணையும் துறையும் அவை (?)
கவிஞர்: கணியன் பூங்குன்றனார்
புறநானூறு: பாடல் 192

குறிப்பு: திணையும் துறையும் “அவை” -ன்னு போட்டிருக்கே? அப்படீன்னா?
= To skip repetition:)

“அவை” ன்னு போட்டிருந்தா, அதுக்கு முந்தின பாட்டைப் போயி பார்க்கணும்;
அதுவும் “அவை” ன்னே போட்டிருந்தா, அப்படியே நூல் பிடிச்சிக்கிட்டு போய்…
எங்கு பேரு சொல்லி இருக்கோ, அங்கு தெரியும் திணையும் துறையும்:)
திணை = பொதுவியல் திணை; துறை = பொருள் மொழிக் காஞ்சி


காபி உறிஞ்சல்:

யாதும் ஊரே யாவரும் கேளிர்
= எல்லாமே என் ஊரு தான்! எல்லாருமே என் நண்பர் தான்!
(அதுக்காக,  விசா எடுக்காம, வேற்று நாட்டுக்குப் போயி,  ஆபீசர் கிட்ட இதப் பாடப் படாது:)

தீதும் நன்றும் பிறர் தர வாரா
= ரொம்ப முக்கியமான வரி!

அதெப்படி? ஈழக் கொடுமை, பிறர் தரத் தானே வந்தது?
அத்தனை மடிதல்கள் = “பிறர் தர வாரா” -ன்னா? :(
தொடர்ந்து துன்பம் தரும் அன்பர்களும், இதைச் சொல்லியே, Escape ஆயிருவாங்களே!

பிறர் தர வாரா = பிறர் தருவதால் “மட்டுமே”  வராது;
தீமை தருவாங்க தான்!
ஆனா,  நாம அனுமதிச்சாத் தானே,  அது நமக்குள்ள வரும்?

எடுத்துக் காட்டுக்குப் பார்ப்போம்:
நண்பர்,  பொது இடத்தில் தூற்றி விட்டார்;  “தூற்றல்” அவர் தர வந்தது தான்; ஆனா “துன்பம்”?
= நாம் அத்தூற்றலை அனுமதிச்சோம்; அதனால் வந்தது!
= அவர் மனசு நமக்குத் தெரியும்!  தீது அவர் தர, (உள்ளே) வாரா!

ஈழத்திலும் இதே நிலைமை தான்,  ஆனா வேற மாதிரி!
= தீது, பிறர் தந்தார்கள்
= பிறர் தர,  நாம அதை அனுமதிச்சோம்;
= நம்மவர்களே இந்திய மண்ணிலும் அனுமதிச்சார்கள்;  வேடிக்கை பார்த்தோம்;  எதிர்கொள்ளவே இல்லை (அ) எதிர்கொள்ள முடியவில்லை;
= ஈழத்துக்குத் தீது… பிறர் தர, (நம்மால் உள்ளே) வந்தது :((


நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே;

நோதல் = துன்பம்; தணிதலும் = துன்பம் தொலைதல்;
இரண்டுமே அதையொட்டியே  வரும்!
சாதலும் = புதுசு இல்ல;  பிறந்த போதே தெரியும், சாதலும் உண்டு-ன்னு:)

வாழ்தல் – இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே;

வாழ்க்கை = எப்பமே இனிமை -ன்னு துள்ளுவதும் இல்லை!
முனிவின் = கோவம் வந்து, இன்னாதது = கசப்பு -ன்னு கசப்பதும் இல்லை!

மின்னொடு – வானம் தண் துளி தலைஇ;

வானம் = நெருப்பாய் மின்னலையும் குடுக்குது; மழையாய் குளிர்ச்சியும் குடுக்குது;
வாழ்க்கை = அதே போல்!

கல் பொருது அல்லல் புணை!


ஆனாது, கல் பொருது இரங்கும், அல்லல் பேர் யாற்று
நீர்வழிப் படூஉம் புணை போல், ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

பேர் யாற்று = பெரிய ஆற்றிலே, கல்லோடு முட்டி மோதும், அலைத்துக் கொண்டே போகும்.. புணை போல் = படகு போல்

வாழ்க்கையும் அலைத்துக் கொண்டே போகும்!  எதனால்? = ஊழால்
இப்படித் திறவோர்/ அறவோர் சொல்லி இருக்காங்க!

திறவோர் = வாழ்வுக்குத் திறவு செய்பவர்கள்; திறப்பவர்கள்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின்; மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

இதில் தெளிவு வந்துருச்சி; ஆதலால்
* பெரியோர்களே ஆனாலும், அவர்களை ஆகா-ஓகோ -ன்னு கும்புடு போடுவதும் இல்லை!
* சிறியவர்களை, சீச்சீ -ன்னு இகழ்வதும் இல்லை!

உலகத்தில் ஒன்னை விட பெரியவன் யாருமில்ல, அதனால் யாருக்கும் தலை வணங்காதே;
ஒன்னை விடச் சிறியவன் யாருமில்ல, அதனால் யாரையும் தாழ்வா நினைக்காதே!

– அய்யம் பேட்டை, அறிவுடை நம்பி, கலிய பெருமாள், சந்திரன் (தில்லு முல்லு படத்தில்:)

dosa 22/365

Comments
22 Responses to “யாதும் ஊரே; யாவரும் கேளிர்”
  1. அவ்வ்வ்! இன்னிக்கி நான் பதிவிட்டதும் இதான் :-)

    பெரியோரை வியத்தலும் இலமே!
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

    :-)

    Like

  2. //உலகத்தில் ஒன்னை விட பெரியவன் யாருமில்ல, அதனால் யாருக்கும் தலை வணங்காதே;
    ஒன்னை விடச் சிறியவன் யாருமில்ல, அதனால் யாரையும் தாழ்வா நினைக்காதே!
    – அய்யம் பேட்டை, அறிவுடை நம்பி, கலிய பெருமாள், சந்திரன் (தில்லு முல்லு படத்தில்:)//

    You rock KRS! :-)

    amas32

    Like

  3. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” வாழ்க்கையின் தத்துவம் ஒரு வரியில்!

    KRS, நீங்கள் பார்த்த பார்வையில் இருந்து நான் வேறுபடுகிறேன் என்றே நினைக்கிறேன்.

    காலையில் நான் வீட்டை விட்டுக் கிளம்பும் பொழுது படியில் கால் தடுக்கி விழுகிறேன், முன் எந்தப் பிறவியிலோ யார் காலையோ வாரி விட்டிருக்கிறேன் என்பதையே அந்த செயல் உணர்த்துகிறது.

    கூட்டமான பேரூந்தில் ஏறுகிறேன். நான் நின்று கொண்டு பயணிக்க வேண்டும் என்று நினைக்கையில் ஒருவர் தன் இருக்கையை எனக்குத் தருகிறார். அவர் தந்து தான் இந்த நன்மை என்னை வந்து அடைகிறது. ஆனால் இந்த இருக்கையை அடையக் கூட முன் எப்பொழுதோ ஒரு சிறு உதவி நான் யாருக்கேனும் செய்திருக்க வேண்டும்.

    This song does speak of a fatalistic approach or a karmic approach to life. That is my reading. May be I am mistaken.

    தீமையும் நன்மையையும் நாம் அனுமதித்தா வருகிறது? சரித்திரத்தை புரட்டிப் பார்க்கையில் எத்தனை ethnic cleansing நடந்திருக்கு. நாம் கையாலாகாமல் தானே இருந்திருக்கிறோம்.

    மாமியார், கணவன் தரும் துன்பத்தை மனைவி/மருமகள் அனுமதிப்பதால் தான் நடைபெறுகிறது என்பது எந்த வகையில் நியாயம்?

    எதிர்ப்பை பதிவு செய்தால் உயிர் போகும் அல்லது வாழ்க்கை போகும்.

    இந்தப் பாடலின் மற்ற வரிகள் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் நல்லது கேட்டதைப் பற்றி, எப்படி எதுவும் கலந்தே இருப்பது தான் வாழ்க்கை என்பதை தெளிவாகச் சொல்கிறது.

    சங்கப் பாடல்களில் இந்தப் பாடல் ஒரு மனியானப் பாடல் என்றே நினைக்கிறேன்.

    amas32

    Like

  4. Rex Arul says:

    Let me start with my customary kudos to an excellent job KRS is doing. நன்றி முருகா!

    நேரமின்மையால் Dosa365ஐ நான் பார்க்காமல் தொலைக்கும் நாள் எல்லாம் ஒரு நாளா? இந்தப் புலம்பலோடு எனக்கு மிகவும் பிடித்த புறப்பாடலைப் பற்றிய எனது பின்னூட்டத்தை இடுகிறேன்.

    கணியன் பூங்குன்றனார் – ஒரு காலத்தில், US immigration law பற்றிய ஒரு முக்கிய இணையத்தில் என்னுடைய புனைப்பெயராக “பூங்குன்றனார்” என்று வைத்திருந்தேன். சீன மற்றும் பிற நாட்டு இணைய நண்பர்கள் எல்லாம் அதென்ன பெயர் என்று கேட்க, இந்தப் பாடலை ஆங்கிலத்தில் அவர்களுக்கு தனி மெசேஜாக மொழிபெயர்த்து அனுப்புவேன், அவர்கள் எல்லாம் செல்லமாக “poons” என்று என்னை அழைபார்கள் (தமிழில் பெயர் எல்லாம் இவ்வளவு கடினமாக இருக்குமா என்ற ஒரு கேள்வி வேறு)…ஆஹா. அதெல்லாம் ஒரு காலம்.

    சரி, பாடலுக்கு வர்றேன்:

    இது KRSன் விளக்கம். அருமையான விளக்கம்.

    /:பிறர் தர வாரா = பிறர் தருவதால் “மட்டுமே” வராது; தீமை தருவாங்க தான்! ஆனா, நாம அனுமதிச்சாத் தானே, அது நமக்குள்ள வரும்? :/

    இது @amas32வின் பதில் கேள்வி. நியாயம் கலந்த ஒரு அருமையான பதில் கேள்வி:

    /:This song does speak of a fatalistic approach or a karmic approach to life. That is my reading. May be I am mistaken. தீமையும் நன்மையையும் நாம் அனுமதித்தா வருகிறது? :/

    நான் வைக்கவிருக்கும் கருத்து, இவ்விரண்டு நிலைகளுக்கும் பதில் அளிக்கும் வண்ணத்தில் இருக்கலாம். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” நண்பர் KRS இதற்கு பொறுப்பு “நாம்”, துன்பம் தரும் “அவர்கள்” அல்ல என்று நம் மீது அதை திணிக்கின்றார். amas32வோ, நடக்கும் பல அநியாயங்களையும், அடி பட்டு விழுவதையும் காட்டி, இதில் நான் எங்கே பொறுப்பாக முடியும் என்று பதில் கேள்விக்கனையை தொடுக்கிறார்.

    அம்மா, கண்டிப்பாய் நாமே நம் துன்பத்துக்கும், இன்பத்துக்கும் பொறுப்பு. ஆனால், KRS, தங்களின் நிலையில் எனக்கு முழு ஒப்புமை இல்லை. மன்னிக்க. ஏனென்றால், அதில் முழு ஒப்புமை இருந்தால், amas32வின் மிக யதார்த்தமான கேள்விக்கு நியாயமான பதில் கண்டிப்பாக அளிக்க முடியாது. ஆனால், தங்களின் crux of the point, I fully accept 100%. That is the onus is on us and is with us. That I agree, but, not for the reasoning presented. தயவு கூர்ந்து மன்னிக்கவும் :-)

    அதாவது, “இன்பப்”படுவதற்கும், “துன்பப்”படுவதற்கும் காரணிகள் வெளியில் இருந்து தோன்றலாம். In other words, things that make us happy or sad, can originate outside of us as external causative agents. ஆனால், அதன் effects, iஇன்பத்தில் தன்னையும் அறியாமல் அகங்காரம் கொண்டு நுனிக்கொம்பர் ஏறி தொபுக்கடீர் என்று விழுவதும், அல்லது, என்னைப் போல துன்பப்பட்டவன் எவனாவது உண்டா என்று சுய பச்சாதாபத்தையும், பரிதாபத்தையும் தேடி, விரக்தி, போதை, தண்ணி என்று ஆத்திரத்தில் தன் நிலை இழந்து, தனக்கும் தன்னை சார்ந்து இருக்கும் மற்றவர்களுக்கும் நாம் துன்பத்தை கொண்டு சேர்க்கின்றோமே, அது தான் கூடாது என்று இந்தப் பாடல் வலியுறுத்துகின்றது. மீண்டும் படித்துப் பாருங்கள்.

    சாலையில் பயணிக்கின்றேன். ஒரு முக்கியமான அலுவல். அதை நம்பி தான் என் முழு வாழ்க்கையுமே அடங்கி இருக்கிறது என்ற நிலை என்று வைத்துக்கொள்வோம். குடிபோதையில் ஒரு போக்கற்றவன் வந்து என் வண்டி மீது மோதி, என் வாழ்க்கையையே சூனியமாக்கிவிடுகின்றான். இதற்கு நான் எப்படி காரணம் ஆக முடியும்? How can I be responsible for a stochastic occurrence of a drunkard slamming against my car and in what way could I have somehow invited this upon myself? You see where I am going with my logic?

    ஆனால், நடந்துவிடுகிறது. இப்போது எனக்கு 2 options இருக்கிறது. “அய்யோ, அய்யோ, இந்த நாதாரிப் பய என்னோட வாழ்க்கையையே முடக்கீட்டானே. அய்யோ நான் என்ன பண்ணுவேன்”னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, என் வாழ்க்கையையும், மற்றவர்களின் வாழ்க்கையையும் நரகமாக்கலாம். அல்லது, சரி, இதான் நிலைமை. முனிவின் இன்னாது என்றலும் இலமே என்று இனி என்ன செய்யலாம் என்று யோசித்து, இதில் இருந்து மீண்டு எழுந்து எனது மனம் என்னும் குதிரையில் நான் பவனி வருவது எவ்வாறு என்று யோசித்தால், அது அந்தத் துன்பத்தை தடுக்கும் வழிவகையாம். நன்றாக யோசித்துப் பாருங்கள். More than the tragedy that befalls us, it is the reaction that we give as a “response stimuli” that aggravates more of that tragedy that worsens us.

    Take the example of Helen Keller. அந்த அம்மையார் பட்ட துன்பத்தை விடவா? இன்று காந்தி, நேரு, இவர்களையெல்லாம் சாடுவதிலேயே காலம் கழிப்பது நம்மவர்களுக்கு பொழுதுபோக்காகி விட்டது. அவர்களை சிறையில் தங்கள் நண்பர்களுக்கும், மகளுக்கும் என்று பல்வேறு மக்களுக்கு எழதிய கடிதங்களில் பாருங்கள், அவர்கள் அந்த துன்பத்தை எவ்வாறு வென்றார்கள் என்று புரியும். சிறையில் அடித்தாலும், பறக்கும் வழி அறிந்த பறவைகள் அவர்கள்: பறக்கும் பறவைகளுக்கும், சிறகடித்துப் பறக்கும் எண்ணப் பறவைகளுக்கும் எவண்டா சிறை வைக்க முடியும்? அப்போது என்ன ஆனது? பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அவர்கள் மீது அடக்குமுறையும் அராஜகமும் தான் கட்டவிழ்க்க முடிந்ததேயன்றி, அவர்களை “துன்பப்பட” வைக்க இயலவில்லையே.

    எப்போது என்னுடைய நிம்மதியையும், சந்தோஷத்தையும், துன்பத்தையும் அளிக்கும் அதிகாரத்தை நான் என்னைத் தவிர வேறொருவரிடத்தில் தந்துவிடுகின்றேனோ, அன்றே நான் இறந்துவிடுகின்றேன். எனது இன்பத்திலும் துன்பத்திலும், உறவினர், உற்றார், நண்பர்கள் என்று அனைவரும் இருக்க விரும்புகின்றேன், இருக்கின்றார்கள், இருப்பார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் இருந்தால் தான் எனக்கு இன்பமும், அவர்கள் செய்யக்கூடாததை செய்துவிட்டு பிரிந்துவிட்டால் சொல்லொணாத் துன்பம் என்று இருக்கக்கூடாது. Please do not extrapolate this to genuine grief. Grieving is natural process. Grief is NOT sorrow. Distress and Depression is one of sorrow. Grief is one state of normal, healthy, state of human-mind. So what I stated above is not for genuine feelings of bereavement or loss. There is a difference between solitude and solitary. Similarly, there is a difference between melancholy and grief.

    அரசியல் பேச விருப்பமில்லை. ஆனால், ஈழப் பிரச்சினையுமே நடுவுநிலைமை கொண்டு பார்த்தால், நடுவில் சிலபல அரசியல் தீர்வுகள் இருந்தன, அதை, “முன்னை உடையது காவாது, இகழ்ந்து இருந்து, பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல்,-இன்னியல் மைத்தடங்கண் மாதராய் அஃதாதல், வெண்ணெய்மேல் வைத்து, மயில் கொள்ளுமாறு” என்ற நிலையே அங்கும் நாம் கண்டோம்.

    amas32சொன்னது போல, நம்மை அழிக்கும், அலைக்கழிக்கும் அலங்கோல வீணர்களின் வீண் செயல்களினால் நம்மை நாமே இழக்க வேண்டும் என்றில்லையே. குடும்ப வன்முறையாகட்டும், அநியாயம் ஆகட்டும், அதில் இருந்து மீண்டு, பதிலுக்கு நாம் எடுத்துச் செல்லும் செய்தி என்ன? அவன் என்னை அடிச்சுட்டான், கடிச்சுட்டான். தப்பு தான். அடுத்து நாம் என்ன செய்திருக்க வேண்டும்? செய்தோம்? என்ற கேள்வி எழும்புகிறது அல்லவா?

    இது உங்களை சற்றே நிலை குழைய வைக்கலாம், ஆனால் கேளுங்கள். ஜார்ஜியா சிறார் நீதித்துறையில் நீதிபதிகளுக்கு கீழ் உள்ள Panelல் தன்னார்வப் பணி செய்ய volunteers தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். அதில் ஒரு 50-60 வயது மிக்க பெண்மணியும் இருந்தார். Orientation பொழுது, ஏன் ஒவ்வொருவரும் இப்பணிக்கு வந்திருக்கின்றீர்கள் என்ற கேள்வியின் போது, இந்த அம்மா சொன்னார்: “அய்யா, சிறு வயதில் நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். குழந்தையாக இருக்கும் போதே எனக்கு நடந்த அவலத்தை அடுத்து, அந்த புற்றுநோய்க்கு எதிராக, என்னைப் போன்று கஷ்டப்படும் மற்ற சிறுவர் சிறுமியருக்கு உதவி செய்ய வேண்டும் என்று என்னுடைய ஒவ்வொரு செயலிலும் நான் உறுதி பூண்டேன். வளர்ந்தேன், திருமணம் செய்து கொண்டேன், குழந்தைகள், பேரன் பேத்திகள் என்றும் ஆகிவிட்டது. இருந்தாலும், பள்ளி சிறார்களுக்கு mentoring செய்கின்றேன். இங்கு சிறார் நீதிமன்றத்துக்கு வரும் பல மோசமான, இழிவான நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு விடிவெள்ளியாய் இருக்கவும், உங்களுக்கு நடந்த அவலங்கள் எனக்கும் நடந்தது, என்றாலும் இன்று நான் நன்றாகவே இருக்கேன்றேன் என்று ஊக்கம் அளிக்கவுமே நான் இப்பணியை செய்ய வந்துள்ளேன்” என்று சொல்லி முடித்தவுடன், அங்கிருந்த எங்கள் அனைவரின் மத்தியிலும் மயான அமைதி.

    இப்போது சொல்லுங்கள், “தீதும் நன்றும், பிறர் தர வாரா” சரியா தவறா? If we are focused on the external, it is arrant nonsense and those verses make no sense. If we are focused on the internal as to how we react to those external stimuli, then that verse makes perfect sense. Right?

    இதைத் தான் பூங்குன்றனார் கூற வருகின்றார் என்று நான் நினைக்கின்றேன். ஏன் என்றால், எல்லாமும் தெரிந்த, முதிர்ந்த அவர், இம்மாதிரி முட்டி விழுவதும், மற்றவன் நம்மை கேனையனாக்கி கேள்விறகு சாப்பிடும் இழி குணமும் அறியாதவரா அவர்? அல்லது, சில இன்பம், துன்பம் ஆகியவற்றின் stimulants are always going to come from external என்று அறியாமலா இருந்திருப்பார்? இல்லை.

    ஆனால், அவ்வாறு வரும் external stimuliக்கு நீ எப்படி react செய்கின்றாய் என்பதை பொறுத்தே, நீ உயரப்போகின்றாயா, அழியப்போகின்றாயா என்று உணரச் செய்வதற்காகவே அவ்வரிகளை செதுக்கி இருக்கின்றார்.

    இன்று குழந்தைகளுக்கு Teddy-Bear, Barbie, Cars, Ice-Cream, Kishkintha, Express-Avenue Mall என்று எல்லாமே வெளியில் இருந்து கொண்டு வந்தால் தான் அவர்களுக்கு இன்பம் என்று எத்தகைய மடத்தனத்தை நாம் செய்து கொண்டிருக்கின்றோம்! அளவோடு ஒரு மாற்றத்துக்காக அங்கெல்லாம் கூட்டிச்சென்றால், அது healthy. ஆனால் சந்தோஷப்படுத்துகின்றேன் என்று, அன்பையும், பாசத்தையும் காட்டாது, இத்தகைய வெளி பாசாங்கை காட்டிவிட்டு, வேலைக்காரி, வேலைக்காரன், கார் டிரைவர் என்றெல்லாம் வெளி externalsஐ வைத்து அவர்களின் இன்பம் அவர்களுக்கு வெளியில் என்று காட்டும் Intellectual dishonestyஐயும், கையாலாகாதத்தனத்தையும் சாடுவதாக கூட இந்தப் பாடலை எடுத்துப் பாருங்கள், நன்றாக பொருந்தி வரும்! தவறினால், ஒவ்வொரு வீட்டிலும் “சின்னத் தம்பி” குஷ்பு கணக்காக “போவோமா ஊர்கோலம், பூலோகம், ஊரெங்கும்”னு கொழந்தைக ரெடியாகிடும்.

    இன்பமும், துன்பமும் உன்னிடத்திலே. That IS your power. That IS you. Once you realize that power, you feel emancipated. அந்தத் தெளிவு வந்துவிட்டால், வாலாட்டும் எவனும் ஒரு பிடரியையும் உருவ முடியாது என்பதே இந்த வரியின் அழுத்தமான உண்மை.

    என்ன OK வா? Please let me know if you disagree.

    Like

    • This is what I wanted to add along with what I already said. But since I was assisting my mother in the hospital made my reply short. I fully agree with you.

      நம் வாழ்வு நம் கையில். என் மகள் கேட்பாள் எப்படி அது என்று, if somebody is dealt with a bad set of cards what is he to do? Isn’t his life doomed? பாதி சரி. நம்மையும் மீறி நடக்கும் செயல்களுக்கு நாம் பொறுப்பாக முடியாது. ஆனால் பகுத்தறியும் திறமையை இறைவன் நமக்கு அளித்திருக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகின்றோம். சிந்தித்து செயல் படுவது நம் தலையாயக் கடமை. மனிதனுக்கும் விலங்கினத்துக்கும் உள்ள வேறுபாடே அது தான்.

      இறைவன் கொடுத்த வரம், வழிகாட்டி நம் மனசாட்சி. ஓவ்வொரு தருணத்திலும் சரியான முடிவை எடுக்கிறோமா என்று அது சொல்லும் . திருடனாக வாழ்க்கை நடத்தும் ஒருவனுக்கு திருடுவது தவறு என்பது தெரியாமலா செய்கிறான்? ஏழையாகப் பிறக்கிறான். முடமாகப் பிறக்கிறான். பின் அவன் வாழ்வை எப்படி செம்மைப் படுத்தி வாழ்கிறான் என்பது அவன் கையில் உள்ளது. ஆனால் மேலும் மேலும் துன்பங்கள் அவனையும் மீறி வரும்போது முந்தைய பிறவிகள்/கர்மாவின் பலன் என்றே கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

      Sum and substance தீதும் நன்றும் பிறர் தர வாரா. There is no need to blame others for your own plight. It is either due to our own individual actions in past births or due to action/inaction in this birth that leads to our current state of happiness or unhappiness :-)

      Loved your reply Rex :-)

      amas32

      Like

      • Rex Arul says:

        /:This is what I wanted to add along with what I already said. But since I was assisting my mother in the hospital made my reply short. I fully agree with you.:/

        i wish your Mom a speedy recovery and may God bless her. Thank you :-)

        /:நம் வாழ்வு நம் கையில். என் மகள் கேட்பாள் எப்படி அது என்று, if somebody is dealt with a bad set of cards what is he to do? Isn’t his life doomed? பாதி சரி. நம்மையும் மீறி நடக்கும் செயல்களுக்கு நாம் பொறுப்பாக முடியாது. ஆனால் பகுத்தறியும் திறமையை இறைவன் நமக்கு அளித்திருக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகின்றோம். சிந்தித்து செயல் படுவது நம் தலையாயக் கடமை. மனிதனுக்கும் விலங்கினத்துக்கும் உள்ள வேறுபாடே அது தான்.:/

        மிக்க நன்றி. அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

        /:ஆனால் மேலும் மேலும் துன்பங்கள் அவனையும் மீறி வரும்போது முந்தைய பிறவிகள்/கர்மாவின் பலன் என்றே கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.:/

        கர்மா, விதி, ஊழ் என்றும் பலவிதமான அறிவிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் இன்னல் வந்தாலும், “அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும்”னு துணிஞ்சு எழுந்து நின்று போராடணும். “முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று தொழுது இருந்த கண்ணே ஒழியுமோ அல்லல்? இழுகினான் ஆகாப்பது இல்லையே, முன்னம் எழுதினான் ஓலைப் பழுது”ன்னு எப்பவோ பள்ளியில படிச்சது ஞாபகத்துக்கு வருது. இன்னலைக் கண்டு துவண்டு போய், இந்த ஓலைல Bril Ink கொட்டிடுச்சு, அதுனால அதை பாத்துட்டே இருப்பேன், அப்படின்னு இல்லாம, அல்லலை ஒழிக்கணும்….முனையனும். ஆனால் பலன் நம்ம கையில் இல்லையே. “கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே”ன்னு கீதாசாரத்துல சொல்றது தான் நமக்கும். ஏன்னா, ஒவ்வொரு மதத்துலயும் இருந்த, அந்த “அறிவிற்கு அப்பாற்பட்ட” சங்கதிகளான ஊழ், விதி, கர்மா, heaven என்ற conceptsஐ வைத்து, பல விதமான உரிமை மீறல் பிரச்சினைகளும் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றனவே. ஆக, to control self with a calm sense of resignation, it can help as a dogma. However, care has to be taken to not justify inaction with concepts of predestination என்பது எனது தாழ்மையான கருத்து. அதைத் தான் நீங்கள் சொல்லி இருக்கின்றீர்கள்.

        /:There is no need to blame others for your own plight.:/

        Well, I will beg to differ here slightly, echoing the sentiments of many victims of crime and tragedies. Many peoples’ lives have been permanently destroyed, pilloried and pillaged by other people’s recklessness. We see that happening all the time, which is why we have law, courts, and a system to rein in those களை கட்டதொனுடு நேர் :-) So, there can certainly be a blame for your plight. The only difference is that, you don’t need to lose yourself to that plight. You can use it to rediscover yourself and confront that plight head-on! மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்ற பாரதியாரின் அனல் கொப்பளிக்கும் பாப்பா பாட்டு வரி நினைவு படுத்துவது இதனையே!!!

        /: It is either due to our own individual actions in past births or due to action/inaction in this birth that leads to our current state of happiness or unhappiness :-):/

        I respectfully will take this as a personal belief and a dogma of faith. “We walk by faith; not by light,” St. Paul would say. So for matters of faith, I will not offer alternative viewpoints, due to sheer respect I have towards all the faiths. Thanks for sharing this piece of personal faith and dogma.

        Loved your feedback @amas32. Thank you so much. This is an excellent conversation. Thanks to you and @Kryes :-)

        Like

    • //That is the onus is on us and is with us. That I agree,
      but, not for the reasoning presented. தயவு கூர்ந்து மன்னிக்கவும் :-)//

      ஆகா! இதுக்கு எதுக்கு மன்னிப்பு? அருமையாச் சொல்லி இருக்கீக!
      You supplemented my points, with navigation to unknown corners:)
      Therein, You convinced Fate Believers & Non Believers:))

      Like

    • Rex
      நீங்கள் எடுத்த குடிகாரன் எடுத்துக்காட்டு மிக்க அருமை!
      எவனோ இடித்து விட்டதால் = நம் வாழ்வே இடிந்து விட்டதா?
      * ஆமாம் = அவன் தான் தீது செய்தான்; நான் என்ன செய்தேன்? -ன்னு உட்கார்ந்து விட்டால்
      * இல்லை = அவன் தீது செய்தான்; ஆனால் அதை என்னுள் ஏறிவிட அனுமதிக்க மாட்டேன் -ன்னு “நிமிர்ந்து” விட்டால்

      அதான் அப்படிச் சொல்லியிருந்தேன்…
      * தீதும் = பிறர் தருவார்கள் தான்!
      * ஆனால் தீதும் = நமக்குள் பிறர் ஏற்றிட அனுமதிக்கக் கூடாது!
      * நன்றும் = பிறர் தருவார்கள் தான்!
      * ஆனால் நன்றும் = But we have to internalize it;

      ஈழமும் அப்படியே!
      நல்ல வாய்ப்புகள் பல தவற விட்டு இருக்கிறார்கள், சுய கெளரவப் பிரச்சனைகளால்…
      * நன்றும் = பிறர் தந்தார்கள், we failed to internalize
      * தீது = பிறர் தந்தார்கள், we failed to resist
      குடிகாரன் உடைச்சான்; நிமிராமல், வேடிக்கை மட்டுமே பார்த்து, ஒடைஞ்சு போயிட்டோம்;
      இனி மேலாச்சும், தொடர்ச்சியாக உடைந்து விடாமல், நிமிரவும் செய்வோம்!

      Like

  5. சிறப்பான இடுகை, comments. ரெக்ஸ் அருள், மிக தெளிவாக நுணுக்கத்தை விளக்கியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    வாழ்க்கை என்பது காரணமில்லாத நிகழ்வுத்தொடர். தர்க்கமோ, ஒழுங்கோ, balanceஓ, எதுவுமே இல்லாமல் தான் ஓடும். Just embrace its randomness. Do not try reason along the lines of ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது’னு சொல்றதா தான் இந்தப் பாட்டைப் படிக்கிறேன்.

    Like

    • Dagalti,

      Yes, that is one way of looking at it if you do not believe in the Hindu philosophy. There is even a book, Why bad things happen to good people, I forget the author’s name which describes the randomness of events with no particular cause attributed to happenings per se. My uncle who is a great economist believes in such randomness only :-) The dogma of karma gives an explanation to some times unexplainable happenings, and gives solace and hope to a tortured soul.

      amas32

      Like

      • பூங்குன்றனார் அஜீவகர் (என்று நினைக்கிறேன்). ‘முற்பகல் செய்யின்…முன்ஜென்ம நற்பயன்’ போன்ற சமாசாரங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லாத தத்துவத் தரப்பு.Stuff just happens

        அரைகுறைப் புரிதலுடன் முன்பொருகாலத்தில் எழுதியது : http://dagalti.blogspot.in/2009/07/red-earth-pouring-rain-and-context.html

        டிஸ்கி: தகவல்பிழைகள் உண்டு. குற்றங்களைந்து பிழைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன் :-)

        Like

        • //குற்றங்களைந்து பிழைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன் :-)//
          Kalakkals of Dagalti:)))

          பூங்குன்றனார், ஆசீவகம் என்னும் சமயநெறி சார்ந்தவர் என்பது ஒரு கருத்தியக்கம்!
          உறுதியாகச் சொல்வதற்கில்லை!
          எனினும், அவரின் பல கருத்துக்கள், ஆசீவக நெறி போலவே இருக்கும்!

          Like

      • Rex Arul says:

        @amas32,

        /:I forget the author’s name which describes the randomness of events with no particular cause attributed to happenings per se. :/

        I think you are positing to “Fooled by Randomness” and “The Black Swan” by Nasseem Nicholas Taleb? Is that right ma?

        I too believe in randomness. We are surrounded with stochastic randomness. Absolutely. At the same time, we are not just inanimate die, being cast by some heavenly bodies. We all have a purpose in life. This randomness will lead us to the deterministic objective of why we are here, so that we have a firm purpose to carry out our lives.

        Yes? No? :-)))

        Like

    • Rex Arul says:

      மிக்க நன்றி, @dagalti :-))

      /:வாழ்க்கை என்பது காரணமில்லாத நிகழ்வுத்தொடர். தர்க்கமோ, ஒழுங்கோ, balanceஓ, எதுவுமே இல்லாமல் தான் ஓடும்:/ ஆமாம். ஆனால், அந்த காரணமில்லாத நிகழ்வுத்தொடரில் காரணம் காண்பதும், ஒழுக்கமில்லா randomness and chaosல் ஒரு வகை ஒழுங்கும் orderlinessஐயும் காண்பதே, நம் வாழ்க்கையின் குறிக்கோள். அந்த randomness and chaosல் ஒரு ஒழுங்கை கண்டுபிடித்து, அவரவர் வாழ்க்கையின் பொருளை உணர்ந்தவர்களை தான், நாம் ஞாநிகளாகவும், யோகிகளாகவும் கொண்டாடுகிறோம்.

      Reasoning is not a wrong thing at all. “An unexamined life is not worth living” (Socrates). Reasoning is good; but, do not allow emotional stuff to trump the reasoning. Emotions make us ideologues. Every good idea, when appealing to the inner soul, manifests itself as a reasoned understanding. Every good idea, when appealing to the emotional mind, has manifested itself as a violent ideology. And through that, it has caused more damage to self and others :-)

      சரி தானே? :-))

      Like

    • Life is Random!
      But Every Random Variable also gets “assigned”:)) = RND () Function!

      Like

    • Itz not Randomly Random! But Randomly Assigned!
      Chaos Theory! (Order is born out of Chaos)
      ஒழுங்கு என்பது கசகில் பிறக்கிறது! ஆனால் கசகே ஒழுங்கல்ல:)

      அலகிலா விளையாட்டுடை யார் அவர்
      நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
      உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
      தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!:))
      Randomized Kamban Lines with your permission, boss:)

      Like

  6. UnmaiVilambi says:

    தீதும் நன்றும் பிறர் தர வாரா..

    your translation is fine for most of the lines. but for this particular line you unintentionally are leading into a False Dilemma (see Wikipedia)

    It says, “Good and Bad is not given by others” => that doesnt mean you are responsible.

    Then who is responsible? That is what the second part with so many images talk about. It is ஊழ் or destiny.
    Good and bad that you see is due to one’s destiny. It has nothing to do with others faults (or ones own either) it is destined for ones own learning (and then they become masters and then don’t see anyone as very great…-which is OK…and at same time doesn’t see anyone as lower…(which s a graver mistake).

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)