சங்கத் தமிழில் “மலையாள” ஓணம்!

அனைவருக்கும், ஹ்ருதயம் நெறஞ்ச ஓணம் ஆஷம்சகள்!
ஒரு தும்பப் பூவின்டே சிரியாயி, பொன்-ஓணம் வரவாயி:)

ஓணம் = வெறுமனே சேட்டன்/சேச்சி -ன்னு எண்ணமா?:)
அல்ல!
ஓணம் = மலையாள விழா! சங்கத் தமிழ்ப் பெருவிழா!

தமிழ்த் தலைநகராம் = மதுரையில், “ஓணம்” கொண்டாடிய காட்சிகளைப் பார்க்கலாமா இன்னிக்கி?:)


“ஓணம்” = திருவோணம் என்பது விண்மீன் மண்டலம்!

பண்டைத் தமிழில், வானியல் கணிதம் ஒரு நுட்பமான அறிவியல்;
Astronomy வேறு! Astrology வேறு!
Astronomy = வானியல்! Astrology = நிமித்தகம் (சோதிடம்)!

வானியல் நிலுவைகளைக் கொண்டு, மக்களுக்கு மழைக்காலம் – பயிர் வைக்கும் காலங்களைக் கணித்துக் கூறும் கணியன்கள் உண்டு! (கணியன் பூங்குன்றனார்)

* மேழம், விடை, ஆடவை… முதலான 12 ஓரைகள் (ராசி)
* முடங்கல் (Solstice), மறைப்பு (கிரகணம்)
* நாள்மீன் = தானே ஒளி “தருபவை”; கோள்மீன் = ஒளி “பெறுபவை”
இப்படிப் பல சேதிகள் சங்கப் பாடல்களில் வரும்!

தமிழ்-வானியல் குறித்த, இராம.கி. ஐயாவின் காலங்கள் & பொங்கல் பதிவிலே காணலாம்; Dr Asko Parpola is another reference!


“ஓணம்” = திருவோணம் என்பது விண்மீன் மண்டலம்!

மிகவும் ஒளி மிக்கது!
Aquilae என்று ஆங்கில – லத்தீனிலும், Shravanam என்று வடமொழியிலும் குறிக்கப்படும்!
பார்ப்பதற்கு… சிறகு விரித்துப் பறக்கும் பருந்து/கருடன் போல் இருக்கும்!

பண்டை முல்லைத் தமிழர்கள்…
* மாயோன் விழாவை = “ஓணத்தில்” தான் கொண்டாடினர்!
* மலையாளத்திலும், ஓணம் தான் = Biggest Festival! Not DeepavaLi:)

(திராவிடத் தோன்றலான மலையாளத்தில், இன்னிக்கும், பழந்தமிழ்ச் சொற்கள் – பறைதல், ஓர்தல் -ன்னு பலவும் காணலாம்)

கேரளத்தில் வீடுகள் தோறும் சிறப்பாகக் கொண்டாடும் ஓணம், தமிழகத்தில் இன்று ஆலய அளவில் மட்டும் நின்று விட்டது!
* திரு ஓணத் திருவிழவில் = பெரியாழ்வார் திருமொழி!
* ஓண விழாவும் காணாதே போதியோ பூம்பாவாய் = சம்பந்தர் பதிகம்!

நாள்பட நாள்பட, சங்கத் தமிழ் விழாக்கள் எல்லாம் மறைஞ்சி போய்…
ஓணம் தமிழ்நாட்டை விட்டே போய்விட்டது போலும்!
தீபாவளி போன்ற வடநாட்டுப் பண்டிகைகள், அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன!
பொங்கல் மட்டும் இன்னும் இருக்கு! அது வரைக்கும் மகிழ்ச்சி!


ஓணத்துக்கு வழங்கும் “கதை” ஒன்று உள்ளது!

மூன்றடி மண் கேட்டு, மூவுலகங்களும் அளந்து…
மாவலியைக் கீழ் உலகங்களுக்குத் தள்ளி, அங்கே அரசனாக்கி…
அடுத்த சுழற்சியில், இந்திர பதவி குடுப்பதாக வாக்களித்து…
பெருகலாதன் (பிரகலாதன்) பேரனான மாவலி, தவறே செயினும், அவனை அழிக்காமல் “ஆட்கொண்டு”…

இன்னிக்கும்,  மாவலி…
தன் பழைய நாட்டையும் மக்களையும், பார்க்க வருவதாக “ஐதீகம்”
ஓணத்துக்கு = “வைஷ்ணவக் கதை” கட்டிப்புட்டாங்க:))

இந்தப் “புராண – புருடாணங்கள்”, தமிழ்த் தொன்மத்தை, “ஊடாடிச் சிதைச்சாப்” போல வேறெங்கும் பார்க்க முடியாது:(

வேத நெறி போலவே, சமணம் – பெளத்தம் கூட வடக்கில் இருந்து வந்தவை தாம்! ஆனா ஊடாடிச் சிதைக்கலை!
“புது நெறி” என்று புதிய அளவிலேயே வழங்கினார்கள்!
Will u ever re-assign a variable, in variable declaration itself? Not a good practice – right??

முருகன் converted to ஸ்கந்தன்; திருமால் converted to விஷ்ணு,
இயற்கை வழிபாடு converted to 12 hands, 10 heads etc etc:))
இருக்கும் தொன்மத்தின் மேலேயே “புராணத்தையும்” ஏத்திட்டா…
ஆதி எது? வந்தது எது? -ன்னே கண்டுபுடிக்க முடியாது பாருங்க:((

அப்படியான தொன்மம் = “ஓணம்”!
முல்லை நில மக்கள், மாயோனுக்கு எடுப்பித்த விழா!
பூக்கோலம், ஒளி விளக்கு, சுவை உணவு, யானைத் துள்ளல் – எல்லாம் உண்டு!  வாங்க, பாட்டுக்குப் போவோம்!


பாடல்: மதுரைக் காஞ்சி
கவிஞர்: மாங்குடி மருதனார்
திணை: பாடாண்
வரிகள்: 590-605
(தலையாலங்கானத்துச் செரு வென்ற) பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது…

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நன்னாள்

சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம்பரல் உறுப்பக்
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர

கணவர் உவப்பப் புதல்வர் பயந்து
பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊற
திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி,
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி..


காபி உறிஞ்சல்:

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நன்னாள்

கணம் = கூட்டம்; எதிரிகளின் கூட்டத்தைக் கடந்து அழிக்க வல்லவன்…
தார் = தொங்கு மாலை! அதை அணிந்த முல்லை நிலத் தலைவன் = திருமால்
அவனைக் கொண்டாடும் சிறப்பு நாளான = ஓண நன்னாள்!

சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலிற் காணுநர் இட்ட

சுரும்பு = வண்டு; மறவர்கள் தலைமாலை (கண்ணி) சூடி உள்ளார்கள்;
களிறு-ஓட்டல் நிகழ்த்துகிறார்கள்! (ஓட்டல் = Dont read it as Hotel kaLiRu:)
யானைத் துள்ளல் = மறவர் சேரியில், குன்றின் மேலேறி, அதைப் பலரும் கண்டுகளிக்க…
இன்றும் கேரளத்தில் திருச்சூர் முதலான இடங்களில், பலர் கூடிக் காணும், யானைத் துள்ளலைக் காணலாம்!

நெடுங்கரைக் காழக நிலம்பரல் உறுப்பக்
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர

ஓடும் யானை, வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் ஏறி விடாமல் இருக்க..
ஓரங்களில், நெருஞ்சிமுள் போல் கப்பணம் (காழகப் பரல்) என்னும் கருவி பொதுக்கி வைத்துள்ளனர்;
கடுங் கள் தேறல் = High Alcohol Content:)
மகிழ்வாகக் குடித்து,  திரிந்து,  யானைத் துள்ளலில் தானும் துள்ள..

கணவர் உவப்பப் புதல்வர் பயந்து
பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊறப்

பெண்களும், தங்கள் கணவன்மார் மகிழ, பிள்ளைகள் மகிழ
கிண்ணென்று பணைத்த முலைகளில், பால் அமுதம் சுரக்க…நன்னாளிலே, குளத்தில் நீராடுகின்றனர்!

திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி,
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி

திவவு = யாழில் நிறுத்தப்படும் தண்டு (like violin bowstring); அதை நிறுத்திச், “செவ்வழி” என்னும் பண்ணை (ராகத்தை) அதிலே வாசித்து.. முழவு= மத்தளம்
குரலிசை, யாழிசை, முழவிசை  = மூன்றும் ஒன்றி இசை முழங்க…
பொன்-ஓணம், பொன்-ஓணம் என்னும் மகிழ்ச்சி! மாயோன் மேய “ஓண” நன்னாள்!

dosa 21/365

Advertisements
Comments
14 Responses to “சங்கத் தமிழில் “மலையாள” ஓணம்!”
 1. Santa says:

  பழந்தமிழர்கள் மூன்றுவாகையான அருவடை திரு நாட்களை கொண்டாடியதற்கான சான்றுகள் உள்ளன அவை – தைப்பூசம், திருவோணம் மற்றும் பொங்கல்.

  பண்டைத் தமிழர்கள் ஒருவேளை ஐந்துவகை நிலத்தில் வேறுவேறு நாட்களில் அருவடை திருநாட்களை கொண்டாடி இருக்கலாம்.

  ஓணம் திருவிழா பண்டைத் தமிழர்கள் கொண்டாடியதற்க்கு நிறைய பாடல்கள் சான்றாக உள்ளது. பின்னாளில் வந்த சைவ வைணவ போரினாலும், திராவிட கட்சிகளினாலும், பின்னாலில் வழங்கபட்ட கதைகளின் குழப்பத்தாலும்

  பண்டைத் தமிழர்கள் கொண்டாடியதற்காண கரணத்தை விட்டுவிட்டு கதையில் கவனம் செலுத்தி நாம் கொண்டாடுவதை விட்டுவிட்டோம்.

  ஒரு நல்ல விசயம் ஒணம் கேரளத்தில் மதம் சார்ந்த பண்டிகையாக இருந்தாலும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக கொண்டடுகின்றார்கள்…ஆனால் தமிழகத்தில் பொங்கலை மதசார்பற்ற விழாவாக காட்டினாலும்கூட இங்கு பலர் கொண்டாட மறுக்கின்றார்கள். ம்ம்ம் மதம் ஒரு தடை அல்ல மனம்தான் தடை….

  இன்னாள் மற்றும் முன்னாள் தமிழர்கள் (மலையாளர்கள்) அனைவருக்கும் திருவோண திருநாள் வாழ்த்துக்கள்.

  Liked by 1 person

  • நன்றி சந்தோஷ்
   //ஒரு நல்ல விசயம் ஒணம் கேரளத்தில் மதம் சார்ந்த பண்டிகையாக இருந்தாலும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக கொண்டடுகின்றார்கள்//

   ஆமாம்! மிக முக்கியமான விடயத்தைச் சொன்னீர்கள்!
   ஓணம் – ஒரு இன/மொழி விழாவாகவே பார்க்கப்படுகிறது; மிகுந்த மதச் சடங்குகளும் கிடையாது;
   காலையில் விஷூக் கனி காண்பது கூட, மதம் அற்ற, மங்கல நிகழ்வே!

   //பொங்கலை மதசார்பற்ற விழாவாக காட்டினாலும்கூட இங்கு பலர் கொண்டாட மறுக்கின்றார்கள்//
   :)
   நகர்ப் புறங்களில், பொங்கல் என்பது கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்யும் விழாவாக மாறிடுச்சி:(
   பொங்கலும், கரும்பும் சடங்காப் போயிருச்சி;
   பால் பொங்கலும், மொச்சைக் குழம்பும், கூட்டாக உண்ணலும், சூரியன் பட நடந்து மகிழ்தலும் இல்லாதது ஒரு பொங்கலா?:)
   —————

   //தைப்பூசம், திருவோணம் மற்றும் பொங்கல்//

   தைப்பூசம் சங்க இலக்கியங்களில் இல்லீங்க!
   ஆனா கார்த்திகை விளக்கீடு உண்டு! முருகன் திருநாள் – குறிஞ்சித் திருநாள்!

   Like

 2. //திருவோணம் என்பது விண்மீன் மண்டலம்!//பார்ப்பதற்கு கருடன் போல உள்ளது என்று வரைபடத்துடன் காட்டியுள்ளீர்கள். திருமாலின் வாகனமும் கருடன், அவர் நட்சத்திரமும் திருவோணம்.

  ஓணம் தமிழ் நாட்டில் கொண்டாடப்பட்ட பண்டிகை என்று இன்று தான் அறிந்து கொண்டேன். மகாபலி சக்கரவர்த்தியின் கதையும், வாமன, திருவிக்கிரம அவதாராமும் இதனை கேரள பண்டிகையாகவே இது நாள் வரை என்னை நினைக்க வைத்துள்ளது.

  //மாயோன் மேய ஓண நன்னாள்// திருமாலைப் போற்றி வணங்கி கொண்டாடுமொரு சிறந்த நாளை மலையாளிகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டோமே!

  இந்தப் பாடலில் குறிப்பிட்டிருக்கும் அனைத்தும் இன்றும் கேரளத்தில் கடைப்பிடிக்கப் படுகின்றன. இதில் வழுவாமல் இருக்கிறார்கள். அது தான் அவர்களின் சிறப்பு! திருவனந்தபுரத்தில் பெரிய மைதானத்தைப் பார்த்திருக்கிறேன். அங்கே தான் யானைகள் அணிவகுப்பும், துள்ளல் விளையாட்டும் நடைபெறும் என்று சொன்னார்கள்.

  //நெடுங்கரைக் காழக நிலம்பரல் உறுப்பக்// இதை இப்பொழுது கடைப் பிடிக்கிரார்களா என்று தெரியவில்லை. சில சமயம் யானைகள், பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் மேல் ஒடி வந்து விடுகின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த காலத்தில் மக்களின் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள், பாருங்கள்.

  இந்த சங்கப் பாடலில் ரசனை தூக்கலாக உள்ளது :-)

  amas32

  Like

  • //திருமாலின் வாகனமும் கருடன், அவர் நட்சத்திரமும் திருவோணம்//

   ஆமாம்-ம்மா:)

   //ஓணம் தமிழ் நாட்டில் கொண்டாடப்பட்ட பண்டிகை என்று இன்று தான் அறிந்து கொண்டேன்//
   Sooper! :)

   //திருமாலைப் போற்றி வணங்கி கொண்டாடுமொரு சிறந்த நாளை மலையாளிகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டோமே!
   இந்தப் பாடலில் குறிப்பிட்டிருக்கும் அனைத்தும் இன்றும் கேரளத்தில் கடைப்பிடிக்கப் படுகின்றன.
   இதில் வழுவாமல் இருக்கிறார்கள். அது தான் அவர்களின் சிறப்பு//

   Yessu:)

   Like

  • //திருமாலின் வாகனமும் கருடன், அவர் நட்சத்திரமும் திருவோணம்//

   இது குறித்து, மேலும் சில பார்வை-ம்மா:)
   “கலுழ்நன்” ன்னு சங்க இலக்கியத்தில் வரும் = கருடன்!
   இது ஒரு காட்டுப் பறவை! முல்லை = காடும் காடு சார்ந்த இடமும் அல்லவா?

   அடர்ந்த காட்டில், மேற்சென்று வழிகாட்டும் பறவையாக, முல்லை நில மக்கள் பயன்படுத்தினர்
   அதுவே, முல்லையின் மாயோன் (எ) திருமாலுக்கும் ஆகி வந்தது!
   அதே போல் தான் மயிலும் = குறிஞ்சிப் பறவை, முருகனுக்கு ஆகி வந்தது!
   இவை நிலத்தின் கருப்பொருட்கள் = இயற்கை!

   “வாகனம்” என்பதெல்லாம் பிற்பாடு புராணக் கதைகளே!:)
   ஒரு மயில்/கருடன் மேறி உட்கார்ந்தா, அது தாங்குமா?:)) #Myths

   ஓணம் = வானியல் அடிப்படையில், முல்லையின் திருமாலுக்கு ஆகி வந்தது
   கருடன் = நிலத்தின் கருப்பொருள் அடிப்படையில், திருமாலுக்கு ஆகி வந்தது
   அதான் சங்கத் தமிழ்க் காரணம்; விளக்கம் சரியா?-ன்னு சரி பார்க்கவும்:)

   Like

   • நம்மளுடய வேத, இதிகாச, புராணங்களில் சொல்லப்பட்டவை அனைத்துமே இயற்கையோடு இயந்தவை. விஞ்ஞான ரீதியிலும் விளங்க வைக்க முடியும். பகுத்தறிவை பயன் படுத்தி உண்மையை உணர முடியும். ஆனால் அந்த முயற்சியை எடுக்க வேண்டியது மட்டும் நம் கையில் தான் உள்ளது.

    amas32

    Like

 3. அன்பின் கேயாரெஸ் – ஓணம் நம் பண்டிகையா – விட்டுக் கொடுத்து விட்டோமா ….. ம்ம்ம்ம் நாம் பலருக்கும் விட்டுக் கொடுத்தவற்ரில் இதுவும் ஒன்றா …… நலல்தொரு பதிவு – தரவுகளுடன் பதிவீட்டமை நன்று – நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

 4. Banukumar says:

  //ஆதி எது? வந்தது எது? -ன்னே கண்டுபுடிக்க முடியாது பாருங்க:((//

  கேஆர்எஸ், நிச்சயம் உங்களுக்கு தைரியம்தான். நடுநிலைமையான பார்வை. எவ்வளவு பேர் இதை எடுத்துக்கொள்வார்கள்?? தெரியவில்லை.

  தங்கள் இவ்வலைப்பூ அருமை! தொடருங்கள்!!

  வாழ்த்துக்களுடன்,
  இரா.பா,
  சென்னை

  Like

  • //கேஆர்எஸ், நிச்சயம் உங்களுக்கு தைரியம்தான்//

   அட முருகா!:)
   நான் தனிமையில் காய்வது போதாதா?:))

   //நடுநிலைமையான பார்வை. எவ்வளவு பேர் இதை எடுத்துக்கொள்வார்கள்?? தெரியவில்லை//

   :))))

   தமிழ்த் தரவுகள் என்றும் உள;
   நாம சொல்லலீன்னாலும், பிறிதொருவர் மூலமாக, தமிழ் சமயங் கடந்து பாய்ந்தோடும்!
   திரு.வி.க சொல்லாததையா நான் சொல்லிட்டேன்?:)

   பழுத்த சிவச் செம்மல் அவர்; ஆனா, தமிழைத் தமிழாக மட்டுமே அணுகுவார்; தமிழுக்குச் சமணக் கொடைகளை வெளிக்கொணர்ந்தார்;
   அதனால் அவரை எப்படி நடத்தினார்கள் என்பதும் அவர் எழுத்திலேயே படித்துள்ளேன்:)
   பயந்த தனி வழிக்கு, முருகன் துணை!

   Like

 5. psankar says:

  > kanavar uvappa pudhalvar payandhu

  kanavar uvappadhu okay. Why pudhalvar payappaduginranar ?

  Like

 6. devarajan97 says:

  திருவோணத் திருவிழவு –

  Like

 7. ஓணம் தமிழ்நாட்டு விழாவே!
  ஓணம் தமிழ்நாட்டு விழாவே!
  இலக்குவனார் திருவள்ளுவன்
  நட்பு : பதிவு செய்த நாள் : 28/08/2012

  மக்கள் விரும்பி – விழைந்து – கொண்டாடப்படும் நாளே விழாவாகும். பழம்காலம் முதல் – பண்டு தொட்டு -கொண்டாடப்படும் விழா பண்டிகையாகின்றது. இவ்வகையில், ஆவணித்திங்கள் திருவோண நாளில் கேரள மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா ஓணம். உண்மையில் ஓண நன்னாள் எனப் பழந்தமிழரால் கொண்டாடப்பட்டதே இவ்விழா.

  கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஓணம் கொண்டாடப்படுவதாகக் கேரள மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று பத்துநாள் கொண்டாடப்படும் இவ்விழாவின் பத்தாம் நாளாகிய ஓணத்தன்று யானைகளைச் சிறப்பாக அழகூட்டி நல்லுணவு படைத்து ஊர்வலமாக அழைத்து வருவது.

  இன்றைய கேரளம் என்பதே முந்தைய செந்தமிழ் வழங்கிய சேரநாடுதானே. தாங்கள் தமிழர் வழி வந்தவர் என்பதையும் தங்கள் மொழித் தமிழ்ச்சேய் மொழி என்பதையும் மறைத்து விடுவதால் உண்மையான வரலாறு அந்நாட்டு மக்களுக்கே தெரிவதில்லை. சேரநாட்டுச் சிறப்பையும் சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியச் சிறப்பையும் கேரளச்சிறப்பாகவும் மலையாளச் சிறப்பாகவும் சொல்வதுமே அவர்கள் வழக்கம். கேரளத்தினர், பிற தமிழ்ச் சேய் இனத்தவரைப் போல் தமிழ்ப் பகை உணர்வுடன் நடந்து கொள்வதால் தமிழ்வழிச் சிறப்பை மறைப்பதில் பெருமை கொள்கின்றனர். கானமயிலாடக் கண்ட வான்கோழி தானும் சிறகு விரித்து ஆட முற்படுவதுபோல் மலையாளத்திற்குச் செம்மொழித்தகுதி கேட்கையிலும் சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்களையே தங்கள் தொல் இலக்கியங்கள் போல் காட்டி உள்ளனர். எனவே, தமிழர்க்குரிய விழாக்களில் ஒன்றே ஓண நன்னாள் என்பதை ஏற்க மாட்டார்கள். எனினும் அருகிக் காணப்படும் நடுநிலையாளர் களுக்காகவும் நமக்காகவும் இவ்வுண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

  புலவர் மாங்குடி மருதனார் அவர்களால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பெற்ற இலக்கியம்தான் மதுரைக் காஞ்சி. மதுரையை நன்கு படம் பிடித்துக் காட்டியிருப்பார் சங்கப்புலவர். மதுரை மாநகரின் அன்றாடநிகழ்வுகளைக் குறிப்பிடுகையில் ஓண நன்னாள் கொண்டாடப்படுவது குறித்தும் பின்வருமாறு கூறியுள்ளார் :

  கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
  மாயோன் மேய ஓண நல் நாள்
  (மதுரைக்காஞ்சி: 590-591)
  கூட்டமாகத் திரண்டு வந்த அவுணர்களை வெற்றி கண்ட மாயோன்(திருமால்) தோன்றிய ஓண நன்னாளில் விழா எடுத்தமையைக் குறிப்பிடுகின்றார் புலவர். இதைத் தொடர்ந்து,

  சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
  கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
  (மதுரை க்காஞ்சி 596-597)
  என்னும் அடிகள் மூலம், வண்டு மொய்க்கும் பூமாலைகள் அணிந்த யானைகளிடையே நடக்கும் போரினைக் குறிப்பிடுகிறார். எனவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓணநாளன்று யானையை அழகு படுத்துவது வழக்கமாக இருந்துள்ளது.

  ஓணம் ஏன் கொண்டாடப்படுகிறது எனக் கேரளர்கள் கூறுவதைப் பார்ப்போம். மாவலி (மாபலி)என்னும் மன்னன் சிறப்பான முறையில் கேரளத்தைஆட்சி செய்து வந்தானாம். திருமாலே அவரிடம் வாமனனாகக் குள்ள வடிவம்பெற்று வந்து மூன்றடி மண் தருமமாகக் கேட்டாராம். (கொடுப்பது கொடை என்பது போல் தருவது தருமம் எனப்படும்.) மன்னன் கொடுக்க இசைந்ததும் பேருருவம் கொண்டு ஓரடியைப் பூமியிலும் மற்றோர் அடியை வானத்திலும் வைக்க மூன்றாம் அடி வைக்க இடமில்லையாதலால் மன்னன் தன் தலையில் வைக்கச் சொன்னானாம். அவ்வாறே மன்னனின் தலையில் மூன்றாம்அடியை வைத்து அவனைப் பாதாளத்தில் தள்ளிவிட்டாராம். கொல்லப்பட்ட மன்னன் மாவலி தான் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளதால் ஆண்டிற்கு ஒருமுறை அவர்களைச் சந்திக்க வரம் கேட்டானாம். திருமால் வரம் தந்தாராம். அவ்வாறு பாதாள உலகில் இருந்து ஆண்டு தோறும் வரும் மன்னன் மாவலி தங்கள் இல்லங்களுக்கும் வருவார் என நம்பி மக்கள் அழகுக் கோலங்கள் இட்டு அவரை வரவேற்கின்றனராம்.

  இறைவன் அருள் நிறைந்தவன். பொல்லாதவரிடமே அருள்காட்ட வேண்டிய அவர் மக்களுக்காக நல்லாட்சி செய்யும் மன்னனை வஞ்சகமாக ஏமாற்றிக் கொன்றார் என்பது ஏற்கும்படி இல்லை. கேட்ட நிலத்தைக்கொடுத்த பின்பு அதைப் பெற்றுக் கொண்டு செல்லாமல் அருள் நிறைந்து வழங்கிய மன்னனைக் கொல்ல வேண்டிய தேவை என்ன வந்தது? உண்மையில் அவ்வாறு யாரேனும் கொன்றிருந்து கடவுள் மீது பொய்யாகப் புனைந்துரைக்கவும் வழியில்லை. ஏனெனில் கொடை பெற்றவன் கொல்ல வருகின்றான் என்றால் மா(பெரும்) வலிமையுடையவன் என்பதால் மாவலி எனப் பெயர் பெற்ற மாவீரன் அமைதி காத்திருக்க மாட்டான். சுற்றிலும் உள்ள வீரர்களும் ஆன்றோர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆரியக்கதைகளில் நல்லவன் கொல்லப்படுவதும் உயிர் பிரியும் தறுவாயில் கொன்றவனிடமே வரம் கேட்டுத் தான் மறையும் நாளைக் கொண்டாடும்படிக் கூறுவதும் வழக்கமான ஒன்றுதான். அதுபோல் புத்தாண்டாகக்கொண்டாடப்பட்ட நாள் புத்தாண்டுத் தொடக்கம் மாறிய பின்பும் கைவிடப்படாச் சூழலில் கட்டப்பட்ட கதையே மாவலி பற்றிய கதை. இக்கதை முன்னரே தோன்றியிருப்பின் மதுரைக் காஞ்சியில் புலவர் மாங்குடி மருதனார் அதைக் குறிப்பிட்டிருப்பார். எனவே, கேரளம் உருவான காலத்தில்தான் இக்கதை பிறந்திருக்க வேண்டும்.

  ஓணம் விழாவிற்குரிய கதை பகுத்தறிவிற்கு ஏற்றதல்ல என்பதால் அதனைக் கொண்டாட வேண்டா என எண்ண வேண்டா. அறிவுக்குப் பொருந்தாக் கதைகளைக் கற்பிக்காமல் இருந்தால் போதும். தொடக்கத்தில் ஆவணித் திங்களே ஆண்டுப்பிறப்பாக இருந்தது. அப்பொழுது ஆண்டுப்பிறப்பை வரவேற்கும் வகையில் ஓண நன்னாள் கொண்டாடப்பட்டது. பின்னர் தைத் திங்கள் ஆண்டுத் தொடக்கமாக மாறிய பின்பு ஓணம் பிற தமிழ்ப்பகுதிகளில் மறைந்து விட்டது. ஆனால், மாயோன் மேய காடுறை உலகம் என்கின்றார் அல்லவா தொல்காப்பியர்? மாயோன் மேய ஓண நல் நாள் என்றல்லவா சொல்லப்படுகின்றது. எனவே மாயோனுக்குரிய காட்டுலகம் சார்ந்த மலை நாடான சேரளத்தில் – கேரளத்தில் அவ்விழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

  தன்மதிப்பு இயக்கக் கோட்பாட்டாளரான பேராசிரியர் சி.இலக்குவனார் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. எனினும் அதனைக் கொண்டாடுவது குறித்து அவர், காலங்காலமாகக் கொண்டாடிய விழாவைக் கைவிடும் போக்கில் மக்கள் இல்லை. எனவே, தீபாவளி கொண்டாடுவதற்குக் கூறப்படும் பொய்யான கதைகளைக் கற்பிக்காமலும் சிக்கனமாகக் கொண்டாடும்படி அறிவுறுத்தியும் கொண்டாடச் செய்ய வேண்டும். திருவிழா என்பது மக்களுக்கு உற்சாகமும் உற்பத்தியாளர்களுக்கும் வணிகர்களுக்கும் பொருள்வரவும் தரக்கூடியதாக உள்ளது. எனவே, எளியமுறையிலும் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு அளிக்கும் வகையிலும் கொண்டாட வேண்டும் என்பதை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்றார்.
  தீபாவளிக்குப்பேராசிரியர் கூறியதே ஓணத்திற்கும் பொருந்தும். களைப்பை நீக்கும் களிப்புடனும் உவகை தரும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படட்டும் ஓணம்! ஓணம் கொண்டாடும் மக்களுக்கு நம் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்! அதே நேரம் அவ்விழாவைக் கொண்டாடுபவர்கள் உலகின் மூத்த மொழி வழியும் இனவழியும் பிறந்தவர்கள் தாங்கள் என்ற உணர்வு பெற்றுத் தோழமை உணர்வுடன் தமிழ் மக்களை எண்ணட்டும்!

  Like

 8. nameless says:

  Reblogged this on My scribbles.

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: