நண்பரைக் கைவிடேல்!

இன்று திருமுருக. வாரியார் அவர்களின் பிறந்த நாள்! (Aug 25)
அவருக்கு வணக்கஞ் சொல்லிக் கொண்டு…
முருகனை வியாழன் அன்றே பார்த்துட்டதால, இன்று சமணம் காண்போம்! சமத்துவம் காண்போம்!

சமணம், தமிழுக்குத் தந்த முதல் பெருங்கொடை = நாலடியார்!
திருக்குறளுக்கு இணையான கருத்துக்கள்;
“வேளாண் வேதம்” -ன்னே இதுக்கு ஒரு பேர் இருக்கு!

* குறளைப் போலவே = அறம், பொருள், இன்பம்!
* குறள் = 1330 ; நாலடியார் = 400
* மொத்தம் 40 அதிகாரம்;  Each, 10 வெண்பா!
* ஆலும் வேலும் = பல்லுக்கு உறுதி!
* நாலும் இரண்டும் = சொல்லுக்கு உறுதி

எத்தனையோ சமணத் தமிழ் இலக்கியங்கள்!
* சீவக சிந்தாமணி, வளையாபதி, ஐஞ்சிறுங் காப்பியங்கள்,
* நன்னூல் இலக்கணம், அறநெறிச் சாரம், சமணத் திருப்பாவை…
ஆனா அத்தனைக்கும் முதல் சுழி = நாலடியார்!

எப்படி வேத நெறி வடக்கில் இருந்து வந்ததோ, அதே போல் தான், சமணமும் – பெளத்தமும்!
ஆனால் தமிழ்த் தொன்மங்களை ஊடாடிச் சிதைக்காமல்…
“புதியது” என்ற நெறியிலேயே புதியவைகளை வழங்கினார்கள்; வாழ்க!

முன்பு, நண்பர் மகிழ்வரசு (எ) Anandraaj, நாலடியார் பாடல்களை Twitter-இல் #Naladiyar  என்று தொகுத்து அளித்தார்!
வாங்க, இன்னிக்கி, “நட்பு” -ன்னா என்னா-ன்னு பார்க்கலாமா? பாட்டுக்குள் போவோம்!


இன்னா செயினும், இனிய ஒழிக! என்று,
தன்னையே தான் நோவின் அல்லது – துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல், கானக நாட,
விலங்கிற்கும் விள்ளல் அரிது!

நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,
அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்!
நெல்லுக்கு உமி உண்டு; நீருக்கு நுரை உண்டு;
புல் இதழ் பூவிற்கும் உண்டு! 

நூல்: நாலடியார் – பாடல் 76 & 221
கவிஞர்: பல சமண முனிவர்கள் ஒன்னு சேர்ந்து எழுதிய 400 வெண்பாக்கள்!
அத்தனையும் ஒன்னாத் தொகுத்தவர் = பதுமனார்


காபி உறிஞ்சல்:

இன்னா செயினும், இனிய ஒழிக! என்று,
தன்னையே தான் நோவின் அல்லது

சில சமயம் நண்பர்களே, நமக்குத் தீங்கு செய்து விடுதல் உண்டு; அப்படிச் செய்தாலும், இனியது ஒழிக -ன்னு விசிறிக் கொள்ளாமல்…
(முன் வினையோ? ன்னு…) தன்னையே தான் நொந்து கொள்ளுதல் ஒரு வகை! அப்படியல்லாது…

துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல் – கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது!

காட்டுத் தலைவனே, முன்பு நெருங்கி மனங்கலந்து பழகினவர்களைக் கைவிட்டு விடுதல் என்பது, விலங்குகளும் செய்வதில்லை! விலங்கிற்கும் விள்ளல் அரிது!

நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,
அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்

முன்பு, நாம் நல்லவர் -ன்னு விரும்பிக் கொண்ட ஒருவரை…
பின்பு, அல்லவர் -ன்னு ஆகி விட்டாலும், அடக்கிக் கொளல் வேண்டும்!

நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு;
புல் இதழ் பூவிற்கும் உண்டு!

* நெல்லுக்கும் உமி = சோறே சாப்பிட மாட்டேன் -ன்னு உதறி விடுவோமா?
* நீருக்கும் நுரை = தண்ணியே குடிக்க மாட்டேன் -ன்னு ஒதுங்கி விடுவோமா?
* பூவின் அடியிலே, புல் இதழ் = மெல்லிய பூவை வெறுத்து விடுவோமா?

இது எடுத்துக்காட்டு உவமை அணி;
ஒரே நட்புக்கு = மூன்று எடுத்துக் காட்டுவதால் (நெல்-நீர்-பூ), பல்பொருள் உவமை அணியும் கூட!

இந்தத் தமிழ்ப் பாடலின் பொருளையே…
என் நெஞ்சுக்கு முருகன் என்றென்றும் அருளக் கடவது!

dosa 17/365

Advertisements
Comments
13 Responses to “நண்பரைக் கைவிடேல்!”
 1. சொ.வினைதீர்த்தான் says:

  என் நெஞ்சுக்கு முருகன் என்றென்றும் அருளக் கடவது!

  சிறப்பான வேண்டுதல்.
  வேண்டுதலைப் பலர் அறிய அறிவிக்கும்போது அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற உறுதிப்பாடு கூடுகிறது.
  அன்புடன்
  சொ.வினைதீர்த்தான்.

  Like

 2. மிக்க நன்றி…, ஆரம்பித்த சில நாட்களிலே என்னை நினைவுகூர்ந்தளவு பெரிய ஆளில்லை..!! நன்றி

  நீங்கள் முன்னர் சொன்னது போல் அருமையான கருத்து கொண்ட நாலடி .. அதும் உதாரணம் எக்காலத்தும் பொருந்தும்.

  நல்லார்.., தக்கார்.. என எண்ணி நட்பு கொண்டவரை…, அவர் அப்படிப்பட்டவர் அல்ல என கண்ட பிறகு அதை பிறர் அறிய வெளிக்காட்டக்கூடாது.., அது அவர் இயல்பு என ஏற்றுக்கொள்ள வேண்டும்..!!

  நெல்லில் உள்ள உமி நீக்கத்தக்கதுதான்..,
  அதற்காக நெல்லையே வெறுத்துவிடுவதில்லை..!

  உண்ணும் அரிசியோடு உமி சேர்ந்து விட்டாலும் அதை செமிக்கும் திறன் வயிற்றுக்கு இருப்பதை போல்…, பழக்கம் கொண்ட நண்பன் முன் போல் அல்ல எனத்தெரிந்தாலும் அதை செமித்துக்கொள்ளும் / ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் கை கூடாது ..!!

  //……….இந்தத் தமிழ்ப் பாடலின் பொருளையே…
  என் நெஞ்சுக்கு முருகன் என்றென்றும் அருளக் கடவது..!……//

  தங்களின் வேண்டுதலே எனதும்..!

  Like

  • //அதும் உதாரணம் எக்காலத்தும் பொருந்தும்//

   குறளில் இல்லாத ஒன்னு நாலடியாரில் இருக்கு-ன்னா இதான்!
   உவமைகள், ஒவ்வொரு வெண்பாவிலும் எடுத்துக்காட்டு;

   //என கண்ட பிறகு அதை பிறர் அறிய வெளிக்காட்டக்கூடாது//

   அடக்கிக் கொளல் வேண்டும் -க்கு இப்படியொரு பொருளை யோசிக்கலை! மிக்க நன்றி, இச்சிந்தனைக்கு!

   Like

 3. Rex Arul says:

  நாலடியார் என்றும் எனக்கு மிகவும் பிடித்த நூல்களில் ஒன்று. மகிழ்வரசு + @kryes சொல்வதில் எனக்கும் முழு ஒப்புமை உண்டு. Yet, I want to take a healthy digression to this discourse, if you will :-)

  நீதி நூல்களில், நீதி நிறைந்திருக்கும் அதே சமயம், அவை கூற வரும் கருத்துக்களை context உடன் பார்ப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். அவற்றை, மற்றவைகளின் isolationஉடன் literalஆக பார்க்கும் போது, பொருள் சிதைந்து, “சீதைக்கு ராமன் சித்தப்பன்” என்று ஆகிவிடுவதும் உண்டு.

  இந்தப் பாடல்களில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சில பல குறைகளோடு மக்கள் இருப்பது இயற்கையின் நியதி. ஆக, “நனி விரும்பிக் கொண்ட நல்லாரை, அல்லார்” என்று அறிந்த பின்பும், ஒதுக்காமல், அடக்கிக்கொளல் வேண்டும். அதாவது, எதன் மூலம் நனி விரும்பி ஏற்றுக்கொண்டாயோ – whatever criterion made them appeal to you – அதில் இருந்து அவர்களின் இயல்பு குறைவாய் தெரியும் காலத்திலும், அந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களை ஒதுக்கிவிடுவது நன்றாகாது.

  ஆனால், அன்புடை நெஞ்சத்தார் என்று அறிந்து நட்போ உறவோ வைத்துக்கொண்டவரை, பின்னர் “கொலையிற் கொடியார்” என்று அறியுங்காலத்து, “அடக்கிக் கொளல்” என்பது முடியுமா? அது அவருக்கும் அவர் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் ஏற்புடையதா, என்றால் இல்லை! அதே நாலடியார் மற்றும் திருக்குறள் போன்ற நீதிநெறி நூல்களில் வரும் ஏனைய பாடல்கள் அவற்றை கண்டிப்பாக சாடுகின்றன.

  ஆக, “குறையுடைய” அன்பிற்கு உரிதாக்கியவர்களை களைவது, விலக்குவது தவறு. ஆனால், அன்பிற்கு உரியவர்களாக இருந்தாலும், அவர்களின் குற்றத்தை கண்டிக்காமலும், “நமக்கேன் வம்பு” என்றும், “அட அவன் அப்படித்தான், நாம ஏன் வீணா அதைப்பற்றி பேசிட்டு” என்று போய் விடும்போது, அத்தகையவர்கள் பிறர்க்கு செய்யும் இன்னும் பலமான பல குற்றங்களுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ காரணம் ஆகிவிடுகின்றோம். “Even the road to hell is paved with good intentions,” என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல!

  ஆக, குறை — சிறிதாகவும், பெரிதாகவும் — இருந்தாலும், அன்புடை மாந்தராய் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களை, உடன் கசக்கித் தூக்கி எறியாமல், பொறுத்துக் கொண்டு அன்பு பாராட்ட வேண்டும். அவர்களின் குறைகளை வெளியில் கோடிட்டு காட்டக்கூடாது.

  ஆனால், குற்றங்கள் – சிறிதாகவும், பெரிதாகவும் — பசுந்தோல் போர்த்திய புலிகளாக, நம்ப வைத்து, “தொழுத கையுள்ளும் படையொடுங்கும்” என்று வரும் சில வீணர்களின் criminal proclivitiesஐ, இம்மாதிரி பாடல்கள், பொறுத்துக்கொள்ளவோ, அடக்கிக்கொள்ளவோ கூறுவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

  சட்டத்துறையில் இருப்பவர்களுக்கு நான் கூறுவது நன்கு புரியும்: ஒவ்வொரு நீதிபதியும் சந்திக்கும் dilemma இது. தன் நீதிமன்றத்தில், நல்லவன் போல நடிக்கும்/நடக்கும் இவனை நம்பி நாம் “அடக்கிக்கொண்டு” probation அல்லது paroleல் விட்டால், இவன் வேறு ஏதேனும் பெரிதாக செய்துவிடுவானோ, மாட்டானோ, என்று ஒவ்வொரு முறையும் அவர்கள் தீர யோசித்தே தீர்ப்பு வழங்கினாலும், அந்த recidivist tendencies உள்ள சில குற்றவாளிகள், நீதிபதிகளின் அந்தக் கருணை மற்றும் அடக்கிக்கொளல் தன்மையையும் பொய்யாக்கி, அவர்களின் கருணைக்கு உரியவர்கள் அல்ல என்னும் பாணியில் இன்னும் பல உயிர்களை காவுவாங்கி விடும் அவலத்தையும் பார்க்கத்தான் செய்கிறோம், அல்லவா?

  ஆக இவ்விரு பாடல்களும் அதன் contextல் நாம் புரிந்து தெளிதல் வேண்டும். நாம் Quakers அல்லது Stoics அல்லவே.

  (நான் பின்னூட்டமாக இட்டிருக்கும் எனது நிலையிலேயே எனக்கு இன்னும் சில dilemma இருக்கத் தான் செய்கிறது. ஏனென்றால், என் மானசீக குருக்களான காந்தியும் லியோ டால்ஸ்டாயும் இயேசு போதித்த, மிகவும் கடினமான, “resist no evil” என்னும் அடிப்படை philosophy கொண்டவர்கள். அவர்கள் இதைப் படித்தால், “ரெக்ஸ், நீர் வேறுபடுத்தும் குறை Vs. குற்றம் என்ற இரு நிலைகளில் ஒன்றுக்கு அடக்கிக்கொளலும் மற்றொன்றிற்கு நடவடிக்கை என்றும் நீர் பாகுபாடு பார்ப்பதில் எமக்கு கருத்து ஒவ்வாமை இருக்கிறது” என்று தலையில் தட்டலாம்.)

  என்றாலும், எனது தனிப்பட்ட கருத்து அதுவே. வாழ்க்கையின் பாதையில், நான் கற்றுக்கொண்டு வரும் பாடங்கள், என் நிலையையும் philosophyஐயும் மாற்றினால், மாற்றிக்கொள்வேன். என்னுடைய இந்த பாகுபாடு பார்க்கும் நிலை pragmatic; காந்தி, டால்ஸ்டாய், இயேசுவின் “resist no evil” ஒரு உயரிய, மகான்களின் idealistic நிலை. அந்த நிலைக்கு போய்விட்டால், நாலடியார், திருக்குறள், கீதை, பைபிள், அவை எல்லாம் படிக்கவேண்டிய அவசியமே இல்லை: அந்த நீதி நூல்கள் எல்லாம் நாமே என்ற நிலையை அடைந்துவிடுவதால். வீடுபேறு அடையும் நிலையில், குற்றமற்ற தெய்வநிலையில் மட்டுமே அது சாத்தியம்.

  கடைசியாக என்னுடைய நிலையை விளக்கும் ஒரு துணுக்கு: மரண தண்டனையை எதிர்த்து, சில சமயம் பேசுபவர்கள், கொலையுண்ட அந்த victimன் குடும்பத்தினராக இருப்பார்கள். “எங்களுக்கு நடந்த அதே குரூரம், இன்னொரு குடும்பத்துக்கு வேண்டாம். போதும் இந்த வன்முறை கலாச்சாரம். நிறுத்துங்கள்” என்று அவர்கள் “அடக்கிக்கொண்டு” அமைதி காத்தாலும், அவர்கள் யாரும், “இவரை சிறையில் இருந்து விடுவித்துவிடுங்கள்” என்று சொன்னது கிடையாது. அந்த வேற்றுமை பார்க்கும் practical நிலையே என்னுடையதும்.

  அடக்கிக்கொள வேண்டியதில் அடக்கிக்கொளல் நலம். குறைகளுக்கும், தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு அது பொருந்தும்; குற்றங்களுக்கும், பெரிய தவறுகளுக்கும் அது பொருந்தாது என்பது என் தனிப்பட்ட கருத்து :-)

  Like

  • //“கொலையிற் கொடியார்” என்று அறியுங்காலத்து, “அடக்கிக் கொளல்” என்பது முடியுமா?//

   Perfect Rex!
   நாலடியார் சொல்வது: “அல்லார்” தான்; “கொலையிற் கொடியாரை” அல்ல!

   * அல்லார் = அன்பு அல்லாதவர்கள், பண்பு அல்லாதவர்கள், குணம் அல்லாதவர்கள் etc etc
   * ஆனா கொலையிற் கொடியார் = கொலையும் செய்யத் துணிபவர்கள்; இவர்கள் வேறு..

   அன்பு/ பண்பு இல்லீன்னாக் கூட ஓக்கே!
   ஆனா அதுக்காக வஞ்சம் வச்சிக்கிட்டு கழுத்து அறுப்பவர்கள்; இவர்களை அடக்கிக் கொள முடியாது;
   அவர்களே அடங்க மாட்டார்கள்! அவுங்க “வெறியே” அவங்களை அடக்கும்!
   ————————–

   //நமக்கேன் வம்பு” என்றும், “அட அவன் அப்படித்தான்//

   பாட்டு, “அடக்கிக் கொளல் வேண்டும்” ன்னு தான் சொல்லுது!
   அதாச்சும், அதை “பிறர் அறிய வெளிக்காட்டி” இழிக்கக் கூடாது; அதுக்காக அவர்களைத் திருத்தாம இருக்கணும் -ன்னு சொல்லலை;

   இழிக்காமல், அன்பு பாராட்டிப் புரிய வைக்க வேணும்! புரிதலே = வாழ்க்கையில் மிகப் பெரிய நற்பேறு;
   ————————–

   Like

  • //என் மானசீக குருக்களான காந்தியும் லியோ டால்ஸ்டாயும் இயேசு போதித்த, மிகவும் கடினமான, “resist no evil”//

   :)
   அப்படிச் சொன்னாத் தான் நாம கொஞ்சமாச்சும் கேட்போம்!
   Resist Evil in 70% cases ன்னு சொன்னா, 30% க்குள் ஒளிஞ்சிக்கவே முயல்வோம்:))
   So, அது ஒரு பொதுமை விதி! Like how we add up & give dates to project managers:))
   ———————-

   //தலையில் தட்டலாம்//

   ha ha ha! தட்டட்டும், தட்டட்டும்!
   இயேசு நாதப் பெருமான், அவரு கையால் தொட்டுத் தட்டறது-ன்னு சும்மாவா?
   அதுக்காகவே, சும்மானாங் காட்டியும் வம்பு இழுத்து தட்டு வாங்கிக்கலாம்:))

   நான் அப்பப்ப முருகனை இப்பிடித் தான் பண்ணுவேன்:)))
   எங்கப்பா திருமால் கருப்பு!
   கருப்புல தான்டா என்னிக்கும் அழகு -ன்னு சொன்னா, அவன் தலையிலேயே தட்ட ஓடீயாருவான்:) – என்னாடீ, பொறந்த வீட்டுப் பாசமா? -ன்னு:))

   Like

 4. amas32 says:

  நட்பைக் கூட கற்பை போல எண்ணுவேன் அப்படின்னு சொல்லுகிற பிரபல திரைப்பட பாடல் என் நினைவுக்கு வருகிறது.

  நட்பு என்பது தூய்மையான அன்பின் வெளிப்பாடு. எதையும் எதிர்பார்த்து வருவதில்லை நட்பு. அது அனைத்தையும் கொடுக்கவே ஆசைப்படும். அப்படிப்பட நட்பில் ஒரு நண்பன் அன்பை விலக்கிக் கொண்டால் அங்கே நட்பு கருகி விடுமே.

  ஒரு நண்பரின் செயல் ஏற்புடையதாக இல்லாவிட்டால் நாம் பொறுத்து அருளலாம். நல் வார்த்தை சொல்லி மாற்றம் வரும் என்று காத்திருக்கலாம். பொது நண்பரின் உதவியை நாடி அந்த நண்பர் மனதில் ஈரமுண்டாக்க முயற்சி செய்யலாம். நம் அன்பை தொடர்ந்து அளிப்பதிலும் வஞ்சனை செய்ய வேண்டாம். நல்லதே நடக்கும் என்கிற நல்லெண்ணத்துடன் தொடர்ந்து செயல் பட்டால் ஒரு நாள் மீண்டும் அந்த உறவு பழைய நிலைமையை அடைய வாய்ப்பு உள்ளது.

  ஆனால் நட்பில் ஒருவர் மேல் கொண்டுள்ள அன்பே ஒருவருக்கு மறைந்து போய் விட்டால்?

  amas32

  Like

  • //நட்பைக் கூட கற்பை போல எண்ணுவேன் அப்படின்னு சொல்லுகிற பிரபல திரைப்பட பாடல்//
   :)

   //ஒரு நாள் மீண்டும் அந்த உறவு பழைய நிலைமையை அடைய வாய்ப்பு உள்ளது//
   :)

   //அன்பே ஒருவருக்கு மறைந்து போய் விட்டால்?//

   எத்தனையும் மழைமறந்த காலத்தும் பயிர்கள்தாம்
   மைத்தெழுந்த மா முகிலே பார்த்து இருக்கும்!
   நீ வேண்டாயே ஆகிலும் மற்றாரும் பற்றில்லேன்!
   இந் நற்றமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே!

   Like

 5. rAguC says:

  Random பாடல்கள் கேட்பதில் எனக்கு பெருவிருப்பம், மொத்தமா எல்லா பாட்டையும் ஒன்னா அள்ளி ஐபாடில் போட்டுட்டு random போட்டு விட்டுருவேன், அதென்னவோ தெரியாது, ஒவ்வொரு பாட்டும் சூப்பர் சூப்பர வரும், இந்த dosa கடையும் அப்படித்தான் இருக்கு. சிலநேரங்களில், நாம் செய்யும் தவறுகளை நமக்கு அப்படியே சுட்டி காட்டிவிடுது.

  என்னை நானே மீளாய்வு செய்யவும், மேருகேர்ரிகொள்ளவும், கற்றுக்கொள்ளவும், என் கருத்துக்களை வளர்த்துக்கொள்ளவும், பல Dimensions கொண்டு விளக்கம் அளிக்கும் நண்பர்களை தந்ததற்கும் என பல வகையில் உதவும் இந்த பதிவிற்கு நன்றிகள் முருகா

  Like

  • RGR = Random Guy Ragu:)

   //பல Dimensions கொண்டு விளக்கம் அளிக்கும் நண்பர்களை தந்ததற்கும்//
   Yes..
   Dank u to amas amma & rex & vinai theerthaan;
   Siva Ananthan is on Ezzham trip, will join shortly:)

   Like

 6. cheenakay says:

  கமெண்டனுமே – அதுக்குப் படிக்கணுமே – ம்ம்ம் – திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்த நாளன்று முருக்னை ஏற்கனவே பாரெத்து விட்ட படியால் – ச்மணம் பற்றிய பதிவாக்கும் – சரி சரி – படிக்கிறேன் – கமெண்டறேன் – நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: