கன்னிப் பொண்ணு, பூச்சூடாதே:)

என்னாது, சங்க காலத்தில், கன்னிப் பெண்கள், பூச்சூடக் கூடாதா?
“கூடாது”-ன்னு இல்ல! ஆனா, “பொதுவா” மாட்டார்கள்! :)

இது என்னடா அநியாயமா இருக்கு? கைம்பெண்கள் பூச்சூடக் கூடாது -ன்னு மதம் தான் சட்டம் போடும்!
தமிழ் கட்டுப்பெட்டி இல்லையே!  இது என்ன புதுக் கதை?

அதாச்சும், அக்காலத்தில், கன்னிப் பெண்கள் பூச்சூடுவது, காதலின் போது:)
ஒரு கன்னிப் பொண்ணு, திடீர் -ன்னு பூச்சூடிப் பார்த்தாங்க-ன்னா, ஊருல “வம்பு” பேசுவாய்ங்க!:)

அதான்,  பொதுவில் பூச்சூடாமைக்குக் காரணம்!
நற்றிணை!  பார்க்கலாமா பாட்டை?


ஐதே காமம் யானே; ஒய்யென,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து,
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்,

கிள்ளையும், ”கிளை” எனக் கூஉம்; இளையோள்
வழு இலள் அம்ம, தானே; குழீஇ,
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்

அறியேன் போல உயிரேன்;
”நறிய நாறும் நின் கதுப்பு”  என்றேனே!

திணை: பாலை
துறை: மனை மருட்சி
கவிஞர்: கண்ணகாரன் கொற்றனார்
பாடல்: நற்றிணை 143


டபராவில் காபி:

* தலைவி, தலைவனோடு “உடன்போக்கு” = அதாங்க, ஓடிப் போயிட்டா:)
* அவ அம்மா பொலம்புறாங்க!
* எம் பொண்ணு கிட்ட ஏதேதோ மாற்றம்;  பூ கூட தலையில் ஒளிச்சி வச்சிருந்தா, வாசம் வந்துச்சி..
* அதைக் கண்டுபுடிச்ச பின்பும், நான் விழிப்பா இல்லாமப் போயிட்டேன்
* இப்படி “உடன்போக்கு” செஞ்சிட்டாளே =Polambings of Mummy:)


காபி உறிஞ்சல்:

ஐதே காமம் யானே;

இன்னிக்கும் வியப்பு தோன்றினால், “ஐ” -ன்னு சொல்லுறோம்-ல்ல?
“ஐ” = வியப்புக் குறிப்பு  (ஹை அல்ல)
ஐதே காமம் யானே = இவ காமம், எனக்கு வியப்பா இருக்கு!

ஒய்யென – தரு மணல் ஞெமிரிய, திரு நகர் முற்றத்து,
ஓரை ஆயமும், நொச்சியும் காண்தொறும்,

ஜம்-ன்னு இருக்கு = ஒய்-ன்னு இருக்கு; ஒய்யாரமா இருக்கு! = கிரந்தமில்லாச் செந்தமிழ்
முன்பு  சிலர் கோவித்துக் கொண்டார்கள்:)
ஆனா நானா அடிச்சி விடல; இதோ, பாட்டில் இருப்பதேயே சொல்கிறேன்;

“சங்கத் தமிழில் இப்படி இருக்கு” -ன்னு காட்டக் கூடவா கூடாது?
மற்றபடி அவரவர் விருப்பமே, திணிப்பில்லை!
ஆனா எடுத்துக் காட்டினாலே, “எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்” -ன்னு பட்டங்கள் தரும் சில மனங்கள்:) முருகா!

ஞெமிரிய = பரப்பிய;  மணல் பரப்பிய முற்றத்தில்… எம் பொண்ணு,
ஒரை ஆயம் = பாவை விளையாடிய வட்டத் திண்ணை
நொச்சியும் காண் தொறும் = அங்கே நொச்சிப் பூ வேலி, அதைப் பார்க்கும் போதெல்லாம்…

நீர் வார் கண்ணேன் கலுழும்; என்னினும்
கிள்ளையும், ”கிளை” எனக் கூஉம்;
இளையோள் – வழு இலள்; அம்ம, தானே!

என் கண்ணு கலங்குதே!
என்னை விட, அவள் வளர்த்த கிளி, வருத்தமாய்க் கூவுதே!
சின்னப் பொண்ணு – அவ தப்பு செய்யலை!  எல்லாம் என் தப்பு தான்…

குழீஇ – அம்பல் மூதூர், அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை, கேட்ட சில் நாள்

Rumour பத்திச் சுவையான குறிப்பு = அம்பல் / அலர்
* சிலருக்கு மட்டும் தெரிஞ்சா = அம்பல் (கிசுகிசு)
* ஊரே பேசினா = அலர் (வதந்தி)

அந்தப் பொண்ணுங்க பேசிய “இன்னா-இன் உரை” என் காதுக்கும் எட்டிச்சு!
இன்னா-இன் உரை = அது என்ன “இனிமையற்ற-இனிய” பேச்சு? யாராச்சும் சொல்லுங்க:)

அறியேன் போல உயிரேன்;
”நறிய நாறும் நின் கதுப்பு”  என்றேனே!

இதெல்லாம் நான் வெளியே காட்டிக்கிடலை; என் பொண்ணு கிட்ட மூச்சு விடாம இருந்தேன்;
ஆனா, அன்னிக்கி, அவ கூந்தலில் மணம்! அது எப்படிச் சாத்தியம்??
“என்னடீ, உன் கூந்தல்-ல்ல வாசனை வருதே? என்ன சேதி?” -ன்னு கேட்டுட்டேன்…
அவ்ளோ தான்,  எனக்குத் தெரிஞ்சிருச்சி -ன்னு விட்டுட்டு ஓடிட்டா!


குறிப்பு:

இதை “மட்டுமே” வச்சிக்கிட்டு, கன்னிப் பெண்கள், மலர் சூடும் பழக்கமில்லை -ன்னு முடிவு கட்டீற முடியாது தான்!:)
ஆனா, இது ஒரு காட்சிப் படுத்தல் = காலக் கண்ணாடி!

பெண்கள் கூந்தலில் பூ வச்சிக்கிறது, மணம் வருவது = இயல்பே!
ஆனா அதுக்குப் போயி, அம்மா சந்தேகப்படுறா -ன்னும் போது, ஏதோ ஒரு வழக்கம் இருந்திருக்கு!
மேலும்.., இது ஒன்னு மட்டுமில்ல!  இதே போல் பல பாடல்கள் இருக்கு!

அவையெல்லாம் தொகுத்து, தமிழ்ப் பெரும் அறிஞர், டாக்டர். வ.சுப. மாணிக்கனார்
– “சங்க காலக் கன்னிப் பெண்கள், கூந்தலில் மலர் சூடும் பழக்கமில்லை” என்று நிறுவுகிறார்;
————

ஆனா, சில பாட்டுல, மலர் அணிவது நானே பார்த்திருக்கேன்:)
But காதலன் தான் சூட்டுகிறான்; வீட்டுக்குப் போகும் முன் களைந்து விடுகிறாள்:)
வாசனை பரவாமல், தலைக்குக் குளித்தும் விடுகிறாள் = திருட்டுக்கொட்டு:))

கழுத்தில் மாலை அணிதல், கையில் பூ-வளை அணிதல் எல்லாம் இருக்கு!
ஆனா, கூந்தலில் பூச்சூடும் வழக்கம் மட்டும் பெரும்பாலும் இல்லை -ன்னே சொல்லலாம்!

திருமணத்தின் போது தான், ஊரறிய “பூமுடித்தல்” நிகழ்கிறது;
= பூக்கரணம் என்று பெயர்!
= பலர் முன்னிலையில், அவனே அவளுக்குப் பூ வச்சி விடுவது
= “கூந்தல்-கிழவன்” = கூந்தலுக்கு உரிமை உடையவன் ஆகின்றான்:)
= “சிலம்பு கழி நோன்பும்” நடக்கும்!

அதற்கு முன்பு வரை..
கூழைக் கூந்தலில், ஊரறிய, மலர்கள் ஏறா என்பதே வ.சுப. மாணிக்கனார் – தமிழறிஞர் முடிபு!

dosa  13/365

Advertisements
Comments
24 Responses to “கன்னிப் பொண்ணு, பூச்சூடாதே:)”
 1. சொ.வினைதீர்த்தான் says:

  முன்பு சங்க நூல்களை த.இ.பல்கலைத் தளத்தில் படிக்க முயன்றேன். ஒரு இலக்கு இல்லாமல் படிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் சோர்வும் வந்துவிடும். ஆனால் உங்கள் தளத்தில் ஒரு பாடலை எடுத்து நீங்கள் விளக்கும்போது அந்தப்பாடலின் மூலமும் உரையும் படிக்கிறேன். சுவையாக இருக்கிறது. ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்கு மிக்க நன்றி நண்பரே.

  தங்கள் இன்னாஇன் உரை பற்றிய கேள்விக்குச் சிறப்பான விடையும் வேறு பகுதியிலிருந்து வந்த தலைவன் அப்பகுதியிலிருந்து கொணர்ந்த பூவைச் சூடியிருக்கக் கூடுமாதலால் மகளின் கூந்தலில் புதுமணம் தாய் உணர்ந்திருப்பாள் என்றதும் த,இ.ப உரை கூறுவது பொருத்தமாக உள்ளது.
  என்றும்சூடும் மலர் அன்றிக் காதலன் தந்த புதுமலர் சூடியதால் புதுமணம் வந்தது என்ற உரையும் பொருந்துகிறது.

  உரை.
  “தாம்கூறும் பழியை இனிய மொழிகளிலே கரந்துவைத்துக்கூறுவர் ஆகலின் அலர்வாய்ப் பெண்டிர் இன்னா இன்னுரை என்றாள். கேட்டற்கினியவும் பயனால் இன்னாவுடையனவும் ஆகிய உரை என்றவாறு.

  தலைமகன் வேற்றுநிலத்து மலரைக் கொணர்ந்து முடித்தலின் நின்கதுப்புப் புதுமணம் நாறுமென்றேனென்றாள்.”
  நன்றி.
  அன்புடன்
  சொ.வினைதீர்த்தான்.

  Like

  • I am so happy வினைதீர்த்தான்:)
   இத்தளத்தோடு நின்று விடாதீர்கள்! பெரியோர் உரைகளைப் படியுங்கள்;
   படித்துவிட்டு, இங்கு ஏதேனும் விடுபட்டுப் போயிருந்தால், அதையும் சுட்டிக் காட்டுங்கள்!

   //த.இ.பல்கலைத் தளத்தில் படிக்க முயன்றேன். ஒரு இலக்கு இல்லாமல் படிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் சோர்வும் வந்துவிடும்//
   :))
   அது சுரங்கம்! அப்படித் தான் இருக்கும்!
   அதுக்குத் தான் இங்கு = சுரங்க வரைபடம்! #dosa365
   With a map, navigation is easy; But the actual treasure is there only!

   நேரடியாப் பாட்டை அணுகாம..ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கோணம்;
   *முதலிரவு
   *தாலி இருந்துச்சா
   *பூச் சூடினாங்களா
   *மறு பிறவி நம்பிக்கை
   *வாய்-மெய்-உள் /மை

   இப்பிடி Map வைத்துக் கொண்டு அணுகும் போது, பயணம் இனிக்கும்:)

   Like

  • இன்னா-இன்னுரை:

   //அலர்வாய்ப் பெண்டிர், தாம்கூறும் பழியை இனிய மொழிகளிலே கரந்துவைத்துக்கூறுவர் ஆகலின்//
   Perfect!:)

   ஏன்டீ, சேதி தெரியுமா? நல்ல சேதி தான்.. நம்ம வனத்தி பொண்ணு வள்ளி இருக்காளே, அவளுக்குத் திருமண காலம் கைகூடுதுடீ = இனிய உரை
   ஆனா, யாரோ முருகனாம்-ல்ல, அவன் கூடத் தானே சுத்துறா? அவன் நல்லவனா-ன்னு தான் தெரியல! = இன்னா உரை
   இவங்க சுத்தல் என்ன, சுகம் என்ன, இப்பவே இப்படி-ன்னா, திருமணத்துக்கு அப்பறம், இவங்க ஆசைக்கு அளவே இருக்காது போல இருக்கே! = இன்னா-இன்னுரை:)))

   Like

 2. @kryes – /:ஐதே காமம் யானே:/ நீங்க ஏன், “ஐதே கம்ம யானே”வை அப்படி போட்டு இருக்கீங்க? “கம்ம” எப்படி காமம்னு ஆச்சு? இடிக்குதே.

  அதாவது, தாய் தனக்குத் தான் புலம்பும்போது, “ஐயகோ, கம்ம யானே” என்று பரிதவிக்கும்போது, அங்கே “கம்ம” என்ற சொல் “”காமம்” என்று பொருள் படுவதாக எனக்கு தோன்றவே மாட்டேங்குதே.

  தெளிவுபடுத்தினால் மகிழ்வேன். நன்றி.

  Like

  • எனக்கு, “ஐயோ சொதப்பியவள் நானே” என்பது “ஐதே கம்ம யானே” என்ற சொற்றொடருக்கு பொருந்தி வருவது போல தோன்றுகிறது.

   “கம்ம” –> “காமம்”
   or
   “கம்ம” –> “கருமம்” (செயல்)??

   அதாவது, என் மகளை காப்பாற்றும் செயல் அறியாது கோட்டை விட்டுவிட்டேனே என்று புலம்புகின்றாளா?

   Like

   • இன்னொரு பாட்டில் ஐதேகம்ம ன்னு வரும்!
    அது ஐது + ஏகு + அம்ம!
    ஐது=அழகு; ஏகு அம்ம= நீயே போயிக்கோ-ம்மா, நான் வரலை ன்னு பொருள்!
    ஆனா, இங்கே பொருந்தாது! “ஐதே காமம்” என்பதே அம்மாக்காரியின் வியப்பு!

    Like

  • Good Catch Rex:)
   தவறு என் மேல் தான்- மன்னிக்கவும்!

   “ஐதே காமம்” – என்பதே சரி!

   ஆனா ஓரிரு ஓலைகளில் “ஐதே கம்ம” என்று எழுதியுள்ளார்கள் போலும்; அதைப் பிரதி பேதம் ன்னு குறிச்சி வச்சிருக்காரு உ.வே.சா! ஆனா நீக்கவில்லை! அப்படியே பதிப்பித்துள்ளார்;
   நான் நீக்கிப் போட்டிருக்கணும்; பாட்டின் விளக்கத்தில் ஒழுங்காப் போட்ட நான், மூலப் பாட்டில் அப்படியே போட்டுட்டேன் போல! இப்போ மாத்திடறேன்!

   “ஐதே காமம்” -ன்னு பல இடங்களில் வரும்!
   ஐதே காமம், கழி முதுக் குறைமையும் பழியும் என்றிசினே (குறுந்தொகை)

   * பெயர்சொல்: ஐ = தலைவன்
   * எண்ணுப் பெயர்: ஐ = ஐந்து
   * உரிச் சொல்: ஐ = வியப்பு (ஐ என்றாள் ஆயர் மகள்)

   Like

 3. Rex Arul says:

  /: இன்னா-இன் உரை = அது என்ன “இனிமையற்ற-இனிய” பேச்சு? யாராச்சும் சொல்லுங்க:) :/
  இன்னா-இன்னுரை — முரண்பட்ட சொற்கள். ஆங்கிலத்தில் Oxymoron என்று கூறுவார்கள். நயம்பட இதில் இவ்வாறு கூறியிருப்பது, புறங்கூறித் திரியும் சில பெண்டிரின் பேச்சு இன்னா! ஆனால், அவள் மகள் வேறொரு ஆடவனோடு போய் வாழ முடிவெடுத்து உடன்போக்கு கண்டிருப்பது, களவொழுக்கம். இல்லையா? ஆக, களவொழுக்கம், திருமணம், குழந்தைச் செல்வம் என்று விரிவு பெறவிருக்கும் இவளின் மகளின் வாழ்க்கை, இனியது. ஆக, பேசியவை இன்னாவாக இருந்தாலும், அந்தப் பேச்சின் ஒளிவில் இருப்பது களவொழுக்கம் என்னும் இனிமை கலந்த உறவு. அட, நானே இவளோட அப்பனோட பண்ணாததையா இவ பண்ணிட்டான்னு தெரிந்து தெளிந்த ஒரு மனதில் இதை “இன்னா-இன்னுரை”னு சொல்லியிருப்பாளோ தாய்?

  /:“உடன்போக்கு” = அதாங்க, ஓடிப் போயிட்டா:) :/

  உடன்போக்கு என்று வரும்போது, அந்த காலத்தில் இருந்தே, ஏன் “பெண்” ஆணுடன் ஓடிப்போவதாக சொல்கின்றார்கள்? ஆணும், பெண்ணுடன் ஓடித்தானே போகின்றான்? திருமணத்திற்கு பின்னர், ஆணுடைய வீட்டில், அவள் இருந்து விடுவதால், அங்ஙனம் சொல்லும் வழக்கம் இருந்ததா? அல்லது, பொருளாதார அடிப்படையில் பெண்கள், ஆண்களைச் சார்ந்து அக்காலத்தில் வாழ்ந்ததை குறிப்பதற்காக அவ்வாறு சொல்லப்பட்டதா?

  /:ஐதே காமம் யானே…. இவ காமம், எனக்கு வியப்பா இருக்கு!:/

  சங்க காலத்தில், அன்பையும், காதலையும் விட காமத்தைப் பற்றியே (உடல் ரீதியான நெருக்கம்) அதிகமாகப் பேசப்படுகிறதே? Or, காமம் was always a synonym to அன்பு & காதல்?

  /:ஆனா எடுத்துக் காட்டினாலே, “எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்” -ன்னு பட்டங்கள் தரும் சில மனங்கள்:) முருகா!:/

  உம்ம நக்கலை, புன்சிரிப்போடு ரசித்தேன். குறைகளை மட்டுமே முன்நிறுத்த பெரும் கூட்டங்கள் என்றும் உண்டு. நாமும் கூட அறிந்தோ அறியாமலோ அங்ஙனம் செய்யக் கூடியவர்களே. “முள்ளும் மலரும்” ரஜினிகாந்த் சரத்பாபுவிடம் கூறுவது போல, “கேவலம், நாம எல்லாம் வெறும் மனுஷங்க தானே சார்!” :-))))

  /:ஒரை ஆயம் = பாவை விளையாடிய வட்டத் திண்ணை:/
  அது ஓரை or ஒரை? என்ன விளையாட்டு அது? நொண்டி விளையாடுவார்களே, கட்டம் கட்டி. அது மாதிரியா?

  /:அங்கே நொச்சிப் பூ வேலி:/
  நொச்சிப் பூவைப் பற்றி படங்கள் ஏதும் இல்லையா? அதென்ன நொச்சிப் பூ?

  /:என் கண்ணு கலங்குதே!
  என்னை விட, அவள் வளர்த்த கிளி, வருத்தமாய்க் கூவுதே!
  சின்னப் பொண்ணு – அவ தப்பு செய்யலை! எல்லாம் என் தப்பு தான்…:/

  தாய்மையும் தந்தைமையும் அன்பின் உச்சத்தை வெளிக்கொணரும் போது, ஏற்படும் நிலை இது. அதாவது,தங்க குழந்தை மீது தவறு எதுவும் இல்லை. ஆண்டவா, தண்டிப்பதாக இருந்தால் என்னை தண்டிப்பாயாக, எனதருமை மகனை, மகளை விட்டுவிடு என்று இறைஞ்சும் அன்பு உள்ளத்தின் மிகுதியின் வெளிப்பாடே இது. சரித்திரத்தைப் பாருங்களேன். ஹுமாயுன் ஒரு நோஞ்சான் — hypochondriac. தடுக்கி விழுந்தால், அவனுக்கு உடல் நலக்குறைவு தான். இருந்தாலும் legend says ஹுமாயுனின் உடல் நலம் குன்றிப்போய் இறக்கும் தருவாயில், பாபர் கடவுளிடம் மன்றாடி, எனதருமை மகனை காப்பாற்றும், அதற்க்கு பதிலாக என்னுயிரை எடுத்துக்கொள்ளவும்னு வேண்டியதாகவும், அதன் பின்னரே, ஹுமாயுன் நலம்பெற்றதாகவும், பாபர் உடல் நலம்குன்றி இறந்ததாகவும் சொல்வார்கள். அல்லவா? அது மாதிரியான ஒரு அன்பு நிலையில் இந்தத் தாயைப் பாருங்களேன். அவள் துயரப்படுகிறாள். பிரிவற்றாமையால் துவண்டு போய், அந்தக் குழந்தையின் பிரிவை, அந்தக் குழந்தையின் வாயிலாக பார்க்க முயல்கின்றாள். இவள் வளர்த்தக் கிளியின் பிரிவை, அவள் வளர்த்தக்கிளி வருத்தப்படுவதாக சொல்லும் போது, என்ன தான் வளர்ந்தாலும், உடன்போக்கில் சென்றாலும், அவள் இந்த தாய்க்கு ஒரு குழந்தை தான் என்பதை அடி கோடிட்டு காட்டிவிடுகின்றாள். In other words, this Mother is projecting her loss of her daughter from her daughter’s perspective to show that even as a grown-up, she still remains a small child to her.

  /: அலர் வாய்ப், பெண்டிர் :/
  அந்த காலத்துல இருந்து, இந்த காலத்து வரையுமே, அலர் வாய் பேசியே நம்மளை அலற விடுவது “பெண்டிர்”னு கவிஞர் காட்டிவிடுவது வேடிக்கை. அலர் வாய்ப் பெண்டிர், வாடிக்கை போலும்.

  இந்த முழு பாட்டையும் மயிருக்கு மணமுண்டான்னு எடுத்துட்டு போய் இருக்கீங்க. அழகு. ஆனால், இந்தப் பாடலை நான் பார்க்கும் விதமே வேறு. அதைப் பற்றி எழுத ஆரம்பித்தால்…..வேணாம்…நீளம் அதிகரிக்கும். Suffice to note that this same song can be viewed with contemporaneous glasses — namely, social malaise like child-abductions, family abductions, tragedies and losses in the lives of children that wreak havoc on families — especially parents and how they cope with such losses என்னும் போக்கில் நான் பார்க்கின்றேன். அக்குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு, பாலைவனத்தில்(desert), அவர்களின் நினைவுத்தடங்களை மட்டும் நீரூற்றாக (oases) தேடி அலையும் சிலப்பெற்றோர்களின், அபலைக் குரல்களின் வேதனையையும் பிரிவாற்றாமையும் மட்டுமே கருப்பொருளாய் கொண்டு இந்தப் பாடலை அணுகிப் பார்த்தால், பாலைத் திணையின் வலியின் வீரியம் சுரீர் என்று உரைக்கும். உரைக்கின்றது. அதனால் நல்லிரவு கூறி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

  Like

  • amas32 says:

   You can write a separate and a different “vilakkavurai” for Changa paatalakl :-) You think differently. Must be a good manager thinking out of the box all the time :-)

   amas32

   Like

   • Rex Arul says:

    :-)) Thank you for your kind comments nga :-) I love to see literature against the backdrop of current-day happenings and for most part, it shows the inherent human-values that transcend time, period, culture and language. For example, in this song, would that பிரிவாற்றாமை feelings not match for the situations we see, hear and read in everyday news? :-)) I will keep in mind your suggestion nga :-)) This is an awesome work by @kryes :-)

    Like

   • Out of the Box = will bring Out of the Guns, sometimes!:)
    சம்பிரதாயப் பிடிப்பு உள்ளவர்களுக்குக் கோவம் கூட வரலாம்:)

    ஆனா சங்க இலக்கியம் = உரைக்குக் கட்டுப்பட்டது அல்ல! மனசுக்குக் கட்டுப்பட்டது!
    மனம் விரிய…, இலக்கியம் விரியும், தமிழ் விரியும்!

    Like

  • amas32 says:

   சங்க காலத்தில் மணமாகாத பெண்கள் மலர் சூடாது இருந்தது புதுமையான செய்தி, ஆனால் நீங்கள் சொல்லும் விளக்கம் சரியாகத்தான் உள்ளது.

   இப்பாடலில் திருமணத்தன்று தான் கணவன் முதன் முறையாக பெண்ணுக்கு மலர் சூட்டுகிறான் என்று பொருள் பட வருகிறது. அதனால் தான் அவன் இறந்த பிறகு அவனோடு அவள் அணியும் பூவும் போய் விடுகிறது போலும் :( Not fair.

   எல்லா பொறுப்பும் தாய்க்கே! மகள் ஓடிப்போய் விட்டாள் அந்தத் தவறும் தாயையே சாரும் என்பது தான் உண்மை. அதனால் தான் இன்றும், நீ போகும் இடத்தில் நல்ல பெயர் வாங்கவில்லை என்றால் உன்னை குறை சொல்லமாட்டார்கள், இப்படி வளர்திருக்கிரார்களே என்று என்னைத் தான் குற்றம் சாட்டுவார்கள் என்று பல் தாய்மார்கள் மகள்களிடம் புலம்ப கேட்டிருக்கிறேன்.

   தாயின் மன வருத்தத்தைக் காட்டும் பாடலாக இருப்பினும் அருமையான ஒரு பாடல். கன்னிப் பெண்ணின் தாய் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது போல இருக்கு. நாசியிலும் அடைப்பில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று தெரிகிறது. (இக்காலத்தில் புதிய நறுமணம்/perfume உடையில் பதிந்திருந்தால் கண்டுபிடிக்க உதவும்)

   amas32

   Like

   • சொ.வினைதீர்த்தான் says:

    கன்னிப் பெண்ணின் தாய் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது போல இருக்கு. நாசியிலும் அடைப்பில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று தெரிகிறது. (இக்காலத்தில் புதிய நறுமணம்/perfume உடையில் பதிந்திருந்தால் கண்டுபிடிக்க உதவும்)

    இரசித்தேன்.
    பெற்றோர் கவனமாகத்தான் இருக்க வேண்டியுள்ளது. நடுத்தரக் குடும்பங்களில் பிள்ளைகளுக்குத் தனிஅறை இல்லாதது கவனிப்புக்கும் நெருக்கத்திற்கும் உதவுகிறது.
    அன்புடன்
    சொ.வி

    Like

   • //அதனால் தான் அவன் இறந்த பிறகு அவனோடு அவள் அணியும் பூவும் போய் விடுகிறது போலும் :( Not fair//
    Yes, Totally Unfair!

    ஆனா, சங்கத் தமிழில், கைம்பெண்கள் மலர் அணியக் கூடாது-ன்னு எங்குமே வரலை!
    இது “சாஸ்திர-சம்பிரதாயம்” சார்ந்த பழக்கமே!

    கன்னிப் பெண்கள் கூட, மலர் அணியக் கூடாது-ன்னு சொல்லலை!
    மாலைகள், கை வளைகள் -ன்னு மலர் அணிந்து தான் விளையாடுறாங்க! கூந்தலில் மட்டுமே இப்படி!

    // கன்னிப் பெண்ணின் தாய் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது போல இருக்கு.
    நாசியிலும் அடைப்பில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று தெரிகிறது//

    he he; என்ன தான் பார்த்தாலும், உண்மைக் காதலுக்கு அணை கட்ட முடியாது:)
    ஆனா, அம்மா அறிந்து கொண்டு, she can be a good friend & counsellor!

    Like

  • Dank u Rex – Shd I say so?
   You add value!
   தமிழன்னைக்கு அழகிய மலர் மாலைகள், பின்னூட்டமாத் தொடுக்கறீங்க!

   //ஏன் “பெண்” ஆணுடன் ஓடிப்போவதாக சொல்கின்றார்கள்? ஆணும், பெண்ணுடன் ஓடித்தானே போகின்றான்?//
   Exactly!:)
   இதே கேள்வியைத் தான், போன பதிவில் கேட்டிருந்தேன்!

   //திருமணத்திற்கு பின்னர், ஆணுடைய வீட்டில், அவள் இருந்து விடுவதால், அங்ஙனம் சொல்லும் வழக்கம் இருந்ததா?//
   அல்ல! சிலம்பு கழி நோன்பு-ன்னு ஒன்னு இருக்கு! அது முடிந்து, “புது இல்” (தனிக்குடித்தனம்) வைப்பது பழக்கம்!
   கண்ணகி-கோவலனை, அப்படித் தான் வைக்குறாங்க மாசாத்துவானும்-அவர் மனைவியும்!

   //பொருளாதார அடிப்படையில் பெண்கள், ஆண்களைச் சார்ந்து அக்காலத்தில் வாழ்ந்ததை குறிப்பதற்காக அவ்வாறு சொல்லப்பட்டதா?//
   இருக்கலாம்!
   ஆனா, அப்பவே பெண் கவிஞர்கள், பெண் பாடினிகள் -ன்னு ஆண்-பொருளியல் சார்பில்லாப் பெண்களும் இருந்திருக்காங்க!

   //காதலையும் விட காமத்தைப் பற்றியே (உடல் ரீதியான நெருக்கம்) அதிகமாகப் பேசப்படுகிறதே?//
   காமம் is Not Lust in Changa Tamizh! Itz the desire & happiness, that comes out of காதல்!
   So they talk abt the result more:) = காமம்!

   * காமம் = விருப்பம்/ இன்பம்
   * காதல் = திணை/ ஒழுக்கம்
   காமத்துப் பால் = இன்பத்துப் பால்!
   * கற்றாரைக் கற்றாரே காமுறுவர் = இதில் காமம் = உடல் ரீதியான நெருக்கம் அல்ல! கற்றாரே விருப்பு உறுவர்!
   * காம கோட்டத்து முருகவேள் = என் முருகன் மேல எனக்கு எக்கச்சக்க காமம்:))

   Like

  • //அது ஓரை or ஒரை? என்ன விளையாட்டு அது? நொண்டி விளையாடுவார்களே, கட்டம் கட்டி. அது மாதிரியா?//

   Fantastic Question!
   இதையெல்லாம் பதிவுல சொன்னா நீண்டுரும்:)
   இப்பிடி யாருன்னா தமிழ் ரசிப்பாளர்கள் பின்னூட்டத்தில் கேட்டாத் தான் உண்டு:)

   ஓரை = பெண்கள் ஆடும் விளையாட்டு!
   மணலில், சேறில், நீரில் ஆடுவாய்ங்க! கூடவே அலவன் ஆட்டல் (நண்டு பிடிச்சி)
   Itz simply a sand game – making sand dunes with dolls, flowers etc etc

   வீட்டில் ஆடினால் வெறும் மணலில் புரண்டு, வீடு செய்து, பூ இட்டு, பாவை வைத்து…
   கடலில், ஆற்றில் ஆடினால் = தண்ணியிலும் சொட்டச் சொட்ட நனைவாங்க:)
   கிட்டத்தட்ட, புரண்டு விளையாடும் ஆட்டம் = Sand Bathing/ Sun Bathing:))

   இந்த ஓரையைத் தான் = “ஹோரா” ன்னு ஆக்கிட்டாங்க, சில உரையாசிரியர்கள்!
   சொன்னாக் கோவம் வரும்; நிப்பாட்டிக்குறேன்:))
   விண்மீன்கள் வானில் ஆடும் அடுக்கு ஆட்டம் = ஓரை! Constellation!

   Like

  • //நொச்சிப் பூவைப் பற்றி படங்கள் ஏதும் இல்லையா? அதென்ன நொச்சிப் பூ?//

   யோவ் Rexuu, என்னைய ரொம்ப வேலை வாங்குறீரு!:))
   சங்க காலத்தில், ஒவ்வொரு திணையும் பூவை வச்சியே இருக்கும்! (அகம்/புறம் ரெண்டும்)
   அகம் = குறிஞ்சி-ப்பூ, முல்லை-ப்பூ…
   புறம் = வெட்சி x கரந்தை, வஞ்சி x காஞ்சி etc

   * அதான் தமிழ் வழிபாடு = பூ+செய் = பூசை
   * வடமொழி வழிபாடு = அக்னி = ஹோமம்

   நொச்சி என்பது ஒரு வகைப் பூ!
   * நொச்சிப் பூச்சூடி, மதிலைக் காப்பார்கள் வீரர்கள்
   * உழிஞைப் பூச்சூடி, மதிலைத் தாக்குவார்கள் வேற்று அணி வீரர்கள்

   இது ஒரு Uniform/ Dress Code போல – For identification!
   நொச்சி = ஒரு வகை மூலிகையும் கூட! போரில் = immediate first aid, comes handy!

   ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு பூ = Therez a Botanical Significance for this!
   தனிப் பதிவாப் போட ஆசை தான்!
   ஆனா “எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்” -ன்னு அபவாதம் வராம, முருகன் தான் காப்பாத்தணும்!

   கிரிக்கெட்-ல்ல ஒன்னுமே எனக்குத் தெரியாது, ஞான சூன்யம்!
   உங்க #365RajaQuiz ல்ல = 2/25 = Fail Mark; சிலர் பொதுவில் போட்டு அடிப்பது போல், நான் “எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்” அல்ல! தமிழும் முருகனும் மட்டுமே தெரியும்! தமிழும் முருகனும் துணை!
   ————————

   //especially parents and how they cope with such losses//
   திருமுருகன் துணை இருக்கக் கடவது!
   தந்தைக்கு உபதேசம் செய்தவன், தந்தையின் நெஞ்சை அறியக் கடவது!

   Like

   • Rex Arul says:

    @kryes – தங்களின் தமிழ் புலமைக்கு முதலின் என் வணக்கம். என்னே செறிவு, அறிவு முதிர்ச்சி, உங்களிடம். அப்பப்பா. நீங்கள் விளக்கியுள்ளவையை நான் நினைவில் பதித்துக்கொள்ள பலமுறை மீண்டும் மீண்டும் இந்தப் பதிவிற்கு வரவேண்டும்.

    தயவு செய்து நீங்களாக, உங்களை self-limitation பண்ணிடாதீங்க (“எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்”) நான் சொன்னால் நீங்கள் convince ஆகலைனாலும் இதைக் கேளுங்க: “யாராவது விளக்கை ஏற்றி அதை ஒளித்து வைப்பார்களா? ஒளி தரும் விளக்கை ஏற்றி மேலே தானே வைப்பார்கள்? அது போல நீங்கள் உலகின் ஒளியாக இருங்கள்”. — சொன்னது நான் அல்ல, புதிய ஏற்பாட்டில் இயேசு கூறுவார். Point is, light cannot be and must not be hidden. Let the radiance continue :-)

    /:யோவ் Rexuu, என்னைய ரொம்ப வேலை வாங்குறீரு!:)):/

    ஒன்னு நீரு #365Project ஆரம்பித்தப்ப யோசிச்சு இருக்கணும்; அல்லது, நான் தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கத் தொடங்கியபோது, வாங்க வாங்கன்னு சொல்லியிருக்கக் கூடாது. Now, it is too late. LOL :-)))

    ஒவ்வொரு நாளும் கலக்குறீங்க. வாழ்க, வளர்க.

    /:திருமுருகன் துணை இருக்கக் கடவது!
    தந்தைக்கு உபதேசம் செய்தவன், தந்தையின் நெஞ்சை அறியக் கடவது!:/

    ஆமென். :-))

    Like

    • rAguC says:

     //தயவு செய்து நீங்களாக, உங்களை self-limitation பண்ணிடாதீங்க (“எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்”) நான் சொன்னால் நீங்கள் convince ஆகலைனாலும் இதைக் கேளுங்க: “யாராவது விளக்கை ஏற்றி அதை ஒளித்து வைப்பார்களா? ஒளி தரும் விளக்கை ஏற்றி மேலே தானே வைப்பார்கள்? அது போல நீங்கள் உலகின் ஒளியாக இருங்கள்”. — சொன்னது நான் அல்ல, புதிய ஏற்பாட்டில் இயேசு கூறுவார். Point is, light cannot be and must not be hidden. Let the radiance continue :-)///

     நல்லாச்சொன்னீங்க ரெக்ஸ்! அடிக்கடி சோர்ந்து போய்டுறார். இவருக்கு இங்க போடுற கமெண்ட்ஸ் தான் “பூஸ்ட்” “போர்ன்விட்டா” எல்லாம்.

     //ஒன்னு நீரு #365Project ஆரம்பித்தப்ப யோசிச்சு இருக்கணும்; அல்லது, நான் தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கத் தொடங்கியபோது, வாங்க வாங்கன்னு சொல்லியிருக்கக் கூடாது. Now, it is too late. LOL :-)))////

     கடை திறக்கும் போது யோசிக்கணும், இப்போ கஷ்ட்டமா இருக்குன்னா எப்புடி? நாங்க வருவோம் எல்லா துணியையும் பிரிச்சு போட்டுட்டு, ஒன்னே ஒன்னு மட்டும் எடுத்துட்டு போவோம்.. நீங்க தான் எல்லாத்தையும் மடிச்சு வைக்கணும் முருகா.

     Like

 4. அன்பின் கேயாரெஸ் – அக்காலப் பழக்கம் நன்று தான் – பூச்சூட ஒருவன் வந்த பிறகுதான் பூச்சூட வேண்டுமெனவும் – வருபவன் காதலனாக இருப்பினும் சரி – கணவனாக இருப்பினும் சரி – கன்னிப் பெண்கள் பூச்சூடினால் ஏதோ தவறென பெற்றவர்கள் தவறினைச் சரிச் எய்ய ஒரு வாய்ப்பு,

  பதிவு அருமை – அதனை விட மறுமொழிகள் அருமை – விள்ககங்கள் தொடர்வது மறுமொழிகளில் – மிக மிக இரசித்துப் படித்தேன்

  நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

 5. devarajan97 says:

  மையிட்டெழுதோம்;
  மலரிட்டு “நாம்” முடியோம் –
  ‘நாம்’ அழுத்தம் கொடுத்துச்
  சொல்வார் நாச்சியார்.
  நாமாக மலர் சூடிக்கொள்ள மாட்டோம்;
  அவனாக வந்து சூட்டிவிட வேண்டும்
  என்பது ஆழ்வார்கள் தஞ்செயலை
  விஞ்சிய ஆண்டாளின் பாரிப்பாம்

  [பெரியோர் சொல்லக் கேட்டது]

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: