சங்கத் தமிழில் தாலி உண்டா? முதலிரவு??

அகநானூறு  என்பது  இன்றைய Twitlonger போல!:)  “நெடுந்தொகை” -ங்கிற பேரும் உண்டு!
* குறுந்தொகை   =  உணர்ச்சி (குறும்)
* நெடுந்தொகை  =  கலவி      (நெடும்)
நமக்கு ரெண்டுமே வேணும்:)

இன்றைய பாட்டு = சங்கத் தமிழில் திருமணம் & முதலிரவு!

* தமிழ்ச் சமூகத்தில் “தாலி” கட்டினாங்களா?
* திருமணம் எப்படி நடந்துச்சி? = புரோகிதர் வச்சி, அக்னியை வலம் வந்தா?
* முதலிரவு எப்படி நடந்துச்சி?  = இதைப் பத்தி மட்டும், விரிவாச் சொல்லுங்க:)

வாங்க, DOSA-வை மங்களகரமாத் துவங்குவோம்! திருமண வீட்டுக்குள் நுழைவோம்!
அப்படியே, படுக்கை அறைக்குள்… சீச்சி:) முதலிரவு மாந்தராக… ஒங்களையே கற்பனை பண்ணிக்கோங்க; பாட்டுக்குள் நுழைவோம்!:)

திணை: மருதம்
துறை: ஊடலின் போது, பழசை நினைச்சிப் பார்த்து, தலைவன் ஏங்குறான்
கவிஞர்: விற்றூற்று மூது எயினனார்;
பாடல்: அகநானூறு 136

மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு…
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்

இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்

மறை திறன் அறியாள் ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே
தொடை நீவி,
பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே!

(Note: முழுப் பாட்டும் பதிவின் கடைசீல குடுத்துருக்கேன்; “எடுத்த எடுப்புலயே பாட்டா?” -ன்னு Allergy வேணாம் பாருங்க:)
ஆனா சங்கத் தமிழ் & காமம் = ரெண்டுமே நேரடியா வாசிச்சாத் தான் இன்பம் (உரை-உறை இல்லாம)! So, கீழ்க்கொண்டு போங்க:))


காபி உறிஞ்சல்:

மைப்பு அறப் புழுக்கின், நெய்க் கனி ,வெண் சோறு
வரையா வண்மையொடு, புரையோர்ப் பேணி

புழுக்கல் அரிசி தான் இறைச்சிக்கு ஏற்றது;
“சாதம்” தான் decent ன்னு ஒரு சிலருக்கு நினைப்பு:) ஆனா, “சோறு” என்பதே நல்ல தமிழ்!

மைப்பு = கசடு (Waste);  கசடு நீக்கப்பட்ட இறைச்சி, வெண் சோற்றில், எள்-நெய்  ஊற்றி…
வரையா வண்மை = வரம்பு இல்லாம; புரையோர் = உறவினர்களுக்குச் சோறு போட்டு..

புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க –

விசும்பு = வானம்; திறந்த வெளியில் பந்தல் போட்டிருக்காங்க!
விடிகாலையில் ஒளியும் ஒலியும்; பறவைகளின் ஒலி; விடியலின் ஒளி..

திங்கள் – சகடம் மண்டிய, துகள் தீர் கூட்டத்து,
கடி நகர் புனைந்து, கடவுள் பேணி

திங்கள்-சகடம் = நிலவு-உரோகிணி என்னும் விண்மீனுடன் கூடிய ஓரையில்.. (Constellation)
திருமணத்துக்கு நல்ல நாள்;
“நல்ல நாள்”-ன்னா என்ன? = எரி நட்சத்திரம் & அனல் இல்லா நாட்கள்; கடவுள் பேணி = கடவுளை வணங்கி…

படு மண முழவொடு, பரூஉப் பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர், விதுப்புற்று
பூக்கணும் இமையார் ,நோக்குபு மறைய

மண முழவு = கல்யாண மேளம்; பரூஉப் பணை = பெரிய முரசு
எல்லாரும் வைச்ச கண் வாங்காமல் “அவளையே” பார்க்க..

vaazhai panthal = enga veettu panthakkaal:)

மென் பூ வாகைப், புன் புறக் கவட்டிலை
பழங் கன்று கறித்த, பயம்பு அமல் அறுகைத்

கவட்டிலை = கவர்த்த இலை (இரட்டைக் கொத்தாய், இலை)
அறுகை = கன்றுகள் மேய விட்டுக் கடித்த அறுகம் புல்!  

தழங்கு குரல் வானின், தலைப் பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன, மா இதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு , வெண் நூல் சூட்டி

பருவ காலத்தின் முதல் மழை; அப்போ முளைச்ச மஞ்சள் கிழங்கு!
வாகை இலை + அறுகம் புல் + மஞ்சள் கிழங்கு
= மூனும், வெள்ளை நூலிலே, பூவோடு ஒன்னாக் கட்டி..  (பந்தக்கால்)

தூஉடைப் பொலிந்து, மேவரத் துவன்றி
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்

இழை அணி சிறப்பின்…

தூய ஆடை உடுத்தி, மணல் பரப்பிய பந்தலிலே… மழை படபட -ன்னு கொட்டுவது போல் கெட்டி மேள ஒலி…
* இழை = Fibre; நூல் போன்ற அணிகலன்
* இழை அணி சிறப்பின் = சிறப்பான “அணிவிப்பு”
அவ்ளோ தான் திருமணம்; அக்னி  எல்லாம் ஒன்னுமில்ல; மனம்-மணம் = ரெண்டுமே நிறைவு!

தாலி = தாலம் (தாலம் -ன்னா பனை; பனை ஓலையால் செய்த அணி)

* பனை மரம் = பண்டைத் தமிழ் நிலத்தின் வாழ்வாதாரம்;
* திருமணம் = வாழ்வாதாரமான ஒரு நிகழ்வு; அதுக்கும், “பனை” அணியே அணிவித்தார்கள் எனலாம்!
தாலி = மதத்தின் முறை அல்ல!  இனக்குழுவின் முறையே! ஆனால்….

பனை ஓலை = நாள்படக் கிழியும்;
எனவே, தாலி = திருமண நாள் அன்றைக்கு மட்டும் அணிவிக்கப்பட்ட ஒரு மங்கல அணி;

பின்னாளில், “sentiment” ஏற்பட்டு,  கிழியாமல் இருக்க, அதையே  தங்கத்தில், “நிரந்தரம்” ஆக்கிட்டாங்க போல:)
மதமும், இந்த sentiment -க்குத் தூபம் போட்டு, பெண்ணின் மேல் பல சடங்குகளை ஏற்றி விட்டது!

கல்யாணத்தில், இன்னிக்கும் ஆண்களுக்குத் தலையில் பட்டம் கட்டுறாங்களே; தாலி போலவே அதையும் “நிரந்தரம்” ஆக்கியிருந்தா?? ஆண்களே, கற்பனை பண்ணிப் பாருங்க ஒங்க தினப்படி நெலமையை:)


பெண்ணுக்கு மட்டும் தானா தாலி? ஆணுக்கும் உண்டு!

“ஆழி-சங்கு” பொறித்த ஐம்படைத் தாலி = ஆண்-பெண் இருவருக்குமே அணிவித்தல் வழக்கம்;
தாலி= வாலிழை, புதுநாண்… என்ற பெயர்களும் உண்டு!

தாலியின்  இன்றைய நிலைமை வேறு! அதுக்காக…
தொன்மத்தை எவனுமே பேசக் கூடாது-ன்னு சொல்ல முடியுமா?
இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும், என்ற புரிதலே போதும்!

எது எப்படியோ…
* சங்க காலத்தில் = தீவலம் இல்லை! புரோகிதர் இல்லை!
* தாலி = மணநாளில் மட்டுமே; “மம ஜீவன” -ன்னு ஆயுசுக்கும் கிடையாது!:)

வடமொழி -ங்கிற ஒன்னு, “மதம்” -ங்கிற சக்தி வாய்ந்த போர்வை போத்திக்கிட்டு…
தமிழின் ஓரமா வந்து, குந்திக்கிட்டு இருக்கு;
இது தொல்காப்பியருக்கும் தெரியும் = அதான் “வட எழுத்து ஒரீஇ” (தவிர்) ன்னாரு:)

முதற் சங்க காலத்தில் அதீதக் கலப்பு இல்லை;
கடைச் சங்கம்/சிலப்பதிகார காலத்துக்குப் பின்னரே…
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத், தீவலம்…”  போன்ற வரிகள்!


சரி சரி… நீங்கல்லாம் எதுக்குக் காத்துக்கிட்டு இருக்கீங்க-ன்னு தெரியுது:)
வாங்க, முதலிரவு அறைக்குள் போய்ப் பார்க்கலாம்! டாய் முருகா, எனக்கு வெட்கம் வெட்கமா வருதுடா :))

இழை அணி சிறப்பின் – பெயர் வியர்ப்பு ஆற்றி
தமர், நமக்கு ஈத்த,
தலைநாள் இரவின்

மணப் பந்தலில், “இழை அணிவித்த சிறப்பு”க்கு அப்பாலிக்கா… உறவினர்,  நமக்கு ஏற்படுத்திக் குடுத்த
தலை நாள் இரவு” (முதலிரவு) | பெயர் வியர்ப்பு = ரொம்ப வேர்க்குதே…


உவர் நீங்கு கற்பின், எம் உயிர் உடம்படுவி
அன்பே, என் உயிருக்கு = நீயே உடம்பு!
உடம்பு இல்லாம உயிர் இயங்குமா?

முருங்காக் கலிங்கம், முழுவதும் வளைஇ;
பெரும் புழுக்குற்ற  நின் பிறைநுதல்;பொறி வியர்
உறு வளி ஆற்றச், சிறு வரை திற’ என

கலிங்கம்=உடை!  (கலிங்க நாட்டில் தான் சிறப்பான ஆடை நெய்தல்)
முழுதும் போர்த்தி இருப்பதால்..
பெரும் புழுக்கு உற்ற = ஒரே புழுக்கமா இருக்கு!
நுதல் = உன் நெற்றி இப்படி வேர்க்குதே?
வளி = கொஞ்சம் காற்று வரட்டும், திற… எதை?

* சிறு வரை திற = சின்ன “மலை” திற -ன்னும் எடுத்துக்கலாம்:)
* சிறு அரை = சின்ன “இடை” திற -ன்னும் எடுத்துக்கலாம்; ஒங்க வசதி:)
ஆக மொத்தம்… அவ நெற்றியில் வியர்க்குதே-ன்னு தான், இந்த இடத்தில் எல்லாம் திறக்கச் சொல்லுறான்; அவனைத் தப்பா எடுத்துக்காதீக:))

ஆர்வ நெஞ்சமொடு ,போர்வை வவ்வலின்
உறை கழி வாளின், உருவு பெயர்ந்து இமைப்ப

ஆர்வம் ததும்பும் நெஞ்சோடு, துணியை வவ்வ (கவர).. அய்யோ..
உறையில் இருந்து உருவிய வாளைப் போல, எழுந்து நிக்குதே! (You guess:))

மறை திறன் அறியாள் ஆகி, ஒய்யென
நாணினள், இறைஞ்சியோளே பேணி..

மறை திறன் அறியாள் = மறைக்கும் திறமை அவளிடம் இருந்து போய்விட்டது;
’ஒய்’யென நாணினள் = ’ஜம்’-ன்னு வெட்கப் படுறா (ஒய்யாரம்)
இறைஞ்சியோளே = ஏய், என்னை விடுடா-ன்னு இறைஞ்சுகிறாள்;

பரூஉப் பகை ஆம்பல், குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல், இருள் மறை ஒளித்தே!

தொடை நீவி = வேற என்னமோ கற்பனை பண்ணிக்காதீக:) தொடை=மாலை!
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்! ஆம்பல் மாலையைக் கழட்டி வச்சிட்டு;
சுரும்பு இமிர் = வண்டுகள் மொய்க்கும்…
கூந்தல் இருள் ஒளித்தே =  கூந்தலையே இருட்டாக்கி, அந்த இருட்டில் தன்னை மறைச்சிக்கிட்டு வரா பொண்ணு….

* தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட, மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட…
* அன்று கூடியவள், இன்று ஊடுகிறாளே,
* என் நெஞ்சே, நான் என்ன சொல்லுவேன்? என்ன சொல்லுவேன்??

SCENE over! Screen Down!:)
dosa 1/365


இப்போ, நீங்களே ரெண்டு ரெண்டு வரியா, காபி உறிஞ்சுங்க பார்ப்போம்:)

மைப்பு அறப் புழுக்கின் – நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு – புரையோர்ப் பேணி
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக – தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கள்

சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து
கடி நகர் புனைந்து – கடவுள் பேணி
படு மண முழவொடு – பரூஉப் பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் – விதுப்புற்று

பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென் பூ வாகைப் – புன் புறக் கவட்டிலை
பழங் கன்று கறித்த பயம்பு – அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் – தலைப்பெயற்கு ஈன்ற

மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு – வெண் நூல் சூட்டி
தூஉடைப் பொலிந்து – மேவரத் துவன்றி
மழை பட்டன்ன, மணல் மலி பந்தர்

“இழை அணி சிறப்பின்” – பெயர் வியர்ப்பு ஆற்றி
தமர் நமக்கு ஈத்த “தலைநாள் இரவின்”

‘உவர் நீங்கு கற்பின் – எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் – முழுவதும் வளைஇ
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதல் – பொறி வியர்
உறு வளி ஆற்றச் – சிறு வரை திற’ என

ஆர்வ நெஞ்சமொடு – போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் – உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே – பேணி..

பரூஉப் பகை ஆம்பல் – குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் – இருள் மறை ஒளித்தே

– அகநானூறு

Comments
26 Responses to “சங்கத் தமிழில் தாலி உண்டா? முதலிரவு??”
  1. மிக நன்றாக இருக்கிறது. கொஞ்சங் கொஞ்சமாகச் சங்கத் தமிழைப் பகிர்ந்து கொடுங்க! பலருக்கும் இது தெரியாது. சங்கத் தமிழா? அது ஒன்றும் புரியாது, விளங்கிக் கொள்ள முடியாது என்று என்று ஒதுங்கிவிடுகிறார்கள். அவர்களை அழைத்துவர இந்த வலைப்பதிவு பயன்படும்.

    அன்புடன்,
    இராம.கி.

    Like

    • மிக்க மகிழ்ச்சி இராம.கி. ஐயா
      முதல் பதிவில் முதல் கருத்து, தங்களுடையதே!:)

      ஆங்காங்கே ஆங்கிலமும் ஊடாடும்; மன்னிக்க! :)
      இப்படிக் குழைத்துக் குழைத்தும் தரவேண்டியுள்ளது, முதல்படி: தின்றால் போதும் ங்கிற நிலைமை:)

      Like

  2. அட! இராம.கி ஐயா வாழ்த்து சொல்லிருக்கார்! இதுக்கு மேல இந்த பதிவுக்கு அணிந்துரை என்ன வேணும்?

    மிக எளிய நடை! உமது தமிழ் ரொம்ப அழகு முருகா! பிடிக்காத மருந்தை சக்கரையோடு கலந்து கொடுப்பாங்க! ஆனா இங்க தித்திக்கும் தமிழை, இனிப்பான ஆங்கிலத்தோடு கலந்து கொடுத்தா தான் நம்ம மக்களுக்கு பிடிக்குது. You are good in creating that mixture! welldone:))

    என்னை மாதிரி சமீபமாய் திருமணம் செய்து கொள்ளப்போறவனுக்கு இந்த பதிவு பல்வேறு எண்ணங்களை தூண்டுது! தாலி கட்டமாட்டேன், பனை இலை கட்டுறேன்னா பொண்ணு தர மாட்டாரே பொண்ணோட அப்பா ? ஞே :-/ பத்து பவுன் தாலி ஏற்கனவே பண்ணியாச்சு! :-( தங்கம் விக்கிற விலைக்கு ? தமிழன் புத்திசாலி அதான் பனை ஓலையோட நிப்பாட்டிகிட்டான்.

    சடங்கு சம்பர்தாயம்! அக்கினி குண்டம், அதுல நெய், பழம், பட்டை எல்லாம் போட்டு புகையில உக்காந்து வேர்த்து விறுவிறுத்து எல்லா சடங்கும் பண்ணி களைச்சு பொய் முதலிரவு அறைக்குள்ள போனா நானெல்லாம் தூங்கிடுவேன்.. இதுல வாறா மாதிரி கல்யாணம் சிம்பிளா இருக்கணும். ராத்திரி தெம்பா இருக்கலாம்

    அதென்னையா நெத்தில வேர்வை வந்தா மாரப்பை கழட்டு, தொடயை அகட்டுன்னு சொல்றான் என் பாட்டான்! இது தான் – Hitting the Bulls Eye- ஓ

    //ஆர்வ நெஞ்சமொடு ,போர்வை வவ்வலின்
    உறை கழி வாளின், உருவு பெயர்ந்து இமைப்ப//

    இது ஆணாய் இருந்து படிக்க ஒரு அர்த்தமும், பெண்ணை இருந்து படிக்க வேறொரு அர்த்தமும் தரும் அட்டகாசமான வரிகள்.

    உடுமலைபேட்டைக்கும் ஒட்டஞ்சத்திரத்திக்கும் இடையில இருக்குற முருகன் உமக்கு சீக்கிரமே இதே மாதிரி ஒரு கல்யாணமும்… அப்புறம் இத்யாதி இத்யாதிகளும் நடக்க அருள் புரியட்டும்

    -ரகு

    Like

    • வாங்க வெகுவிரைவு மாப்பிள்ளை:)

      //You are good in creating that mixture! welldone//
      பொதுவுல, இராம.கி ஐயா முன்னாடி என்னைய போட்டுக் குடுக்குறியா?:)

      //பனை இலை கட்டுறேன்னா பொண்ணு தர மாட்டாரே பொண்ணோட அப்பா ? ஞே//
      அதான் சொன்னேன், இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்:) புரிதல் போதும்;

      //அக்கினி குண்டம், அதுல நெய், பழம், பட்டை எல்லாம் போட்டு புகையில உக்காந்து வேர்த்து விறுவிறுத்து//
      ஒரு சிலருக்கு இது பிடிச்சிருக்கு; அவரவர் தனிப்பட்ட விருப்பங்களையும் மதிக்கணும்; அதே சமயம் தமிழ்ப் புரிதலையும் வளர்த்துக் கொள்ளணும்!

      //இதுல வாறா மாதிரி கல்யாணம் சிம்பிளா இருக்கணும். ராத்திரி தெம்பா இருக்கலாம்//
      படவா:)

      //இது ஆணாய் இருந்து படிக்க ஒரு அர்த்தமும், பெண்ணை இருந்து படிக்க வேறொரு அர்த்தமும் தரும் அட்டகாசமான வரிகள்//
      I am glad u having that habit of looking from both sides; #Good

      //உடுமலைபேட்டைக்கும் ஒட்டஞ்சத்திரத்திக்கும் இடையில இருக்குற முருகன் உமக்கு சீக்கிரமே இதே மாதிரி ஒரு கல்யாணமும்… அப்புறம் இத்யாதி இத்யாதிகளும் நடக்க அருள் புரியட்டும்//
      :)))
      முருகன் – துணை!

      Like

      • //அதான் சொன்னேன், இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்:) புரிதல் போதும்;//

        ஆனா இதை படிச்சதுக்கு அப்புறம் எனக்கு பானை இல்லை கட்டுற ஆசை வந்திருச்சு! அந்த பனையிலை தாலி எப்படி இருக்கும்னு விரிவா சொல்லும்!

        //I am glad u having that habit of looking from both sides; #Good//
        I always try to stand in both the extreme sides in all issues

        Like

        • பனை இலைத் தாலி:

          இன்னிக்கும் அம்மா, நான் ஊருக்கு வரும்போதெல்லாம், கிராமத்துல பொங்கல் வச்சிப் படையல் போடுவாங்க – “பாலு” ங்கிற பொண்ணுக்கு!

          வீட்டுல எப்பவோ பொறந்த பொண்ணு = “பாலு” (பால குசாம்பாள்);
          கன்னியாவே போய் சேந்துட்டாப் போல..
          அவளுக்காக, இந்தப் படையல்!
          தாயே பூவாடைக்காரி பாலு -ன்னு தான் அம்மா சொல்லுவாய்ங்க!

          ஒரு புதுப் புடைவையை, பொண்ணு உருவம் போல் மடிச்சி, சுத்தி…
          புடைவையின் மடியில், வெற்றிலைப் பாக்கு, மஞ்ச குங்குமம்;
          அதுக்கு, காதுல = காதோலை-கருகமணி வச்சி…
          கழுத்தில் = குருத்தோலை (பனை ஓலை) தாலி அணிவிக்குறது வழக்கம்!
          ————–

          பனை ஓலையில் சிறுசா பொட்டலம் போல மடிச்சி
          (தோரணம் மடிக்கிறோம்-ல்ல? அது போல, ஆனா ரொம்பச் சிறுசா மடிப்பு)

          அதுக்குள்ளாற, சீட்டுல “கண்ணன்” -ன்னு பேர் எழுதி…
          அந்தக் குருத்தோலையை, மஞ்சக் கயிற்றில் கோத்து, புடைவையின் கழுத்தில் பூட்டுவாங்க!

          இதான், அம்மா செய்யுற வழக்கம்;
          இலக்கியத்திலும், கிட்டத்தட்ட, இப்படித் தான் சொல்லி இருக்கு!

          Like

  3. amas32 says:

    மாதா கோவிலில் நடக்கும் கிறித்துவத் திருமணங்களிலும் மணமகளுக்குத் தாலி அணிவதை பார்த்திருக்கிறேன். அது மதம் சார்ந்ததல்ல, மொழி சார்ந்தது என்று இன்று அறிந்து கொண்டேன்.

    பொதுவாக சங்க காலத்தில், அந்தந்த நிலத்தின் வளமைக்கு ஏற்றவாறு கிடைக்கும் பொருட்களை வைத்து சடங்குகள் எளிய முறையில் நடைபெற்றன என்று இந்தப் பாடலின் மூலம் அறிந்து கொள்கிறேன்.

    ஆணும் பெண்ணும் சமம் என்றும் தெரிகிறது, இருவருக்குமே தாலி இருந்திருக்கிறதே! தற்போதைய மாலை மாற்றிக் கொள்ளும் சடங்கைப் போல என்று எண்ணுகிறேன் :-)

    மெட்டி அணிவிப்பதும் இல்லை போலும், அதுவும் வடக்கில் இருந்து வந்த பழக்கமாக இருக்கலாம்.

    தமிழர்கள் ரசனைக்கு ஈடு இணை இல்லை என்பது முதலிரவுக் காட்சி வர்ணனைகளில் இருந்து தெரியவருகிறது.

    KRS, எப்பொழுதும்போல அசத்திவிட்டீர்கள். நன்றி :-)

    amas32

    Like

    • வாங்கம்மா:)
      உண்மை; தமிழ்க் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர், ஏன் தமிழ்ச் சமணர் கூடத் தாலி அணிகிறார்கள்! – இது தமிழ்ப் பண்பாட்டை ஒட்டி வந்ததே; மத அடிப்படை பின்பு சேர்ந்து கொண்டது!

      அவ்வளவு ஏன்? பெருமாள்-தாயார் திருமாங்கல்யம், ஊருக்கு ஊர், அமைப்பில் மாறுபடும்; பார்த்து இருக்கீங்களா?:)
      வடக்கே, “Mangal Sutra” உண்டு; ஆனா அது நகையாகத் தான் இருக்கும், மஞ்சள் கயிறாக இராது!
      —————-

      உண்மை, சங்க காலம் போலவே திருமணங்கள் எளிமையா நடந்தா நல்லா இருக்கும்! வீண் ஆடம்பரங்கள் வீணே!

      மெட்டிப் பழக்கம் தெரியலைம்மா – சரிபார்த்து வேணும் ன்னாச் சொல்லுறேன்! Have to chk North Indian Akkas if they have metti:)

      அது என்ன “எப்போதும் போல் அசத்தல்”?:)
      அசத்தியது சங்கக் கவிஞரு! அசந்தது முதலிரவு:)) me one quiet appaavi boy who dont know anything abt romance:)

      Like

  4. சொ.வினைதீர்த்தான் says:

    பதிவு அருமை. தொடர்ந்து படிக்க ஆவலூட்டும் நடை.
    த.இ.பல்கலைத் தளத்தில் உரை பார்த்தேன். சிறு வரை என்பதற்கு சிறிது நேரம் என்று இருந்தது. முதலில் கேட்பவன். அவ்வளவுதான் கேட்கலாம்!
    அணி இழை என்பதற்கும் தாலி என்ற பொருள் இல்லாமல் ஆபரணங்கள் என்ற பொருள் பார்த்தேன்.
    வாழ்த்துக்கள். நன்றி.
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    Like

    • வணக்கம் வினைதீர்த்தான்
      நீங்கள் சொல்வது சரியே; வரை=நேரம்; சிறிது நேரம் திறந்து வை-ன்னும் எடுத்துக்கலாம்:)

      //முதலில் கேட்பவன். அவ்வளவுதான் கேட்கலாம்!//
      இது அநியாயம்:) பாவம் மாப்பிள்ளைகள்:))

      காதல் திருமணம் அதிகம் நிகழ்ந்த சங்க காலத்தில், முன்பே இயல்புப் புணர்ச்சியும் இருந்ததால், இது ஒரு பெரிய விடயமாக அப்போ இருந்திருக்காது போல! பெண்-ஆண் முன்னரே அறிந்திருப்பர், அவரவர் இன்பங்களை:)

      //அணி இழை என்பதற்கும் தாலி என்ற பொருள் இல்லாமல் ஆபரணங்கள்//

      மிக்க சரி!
      இழை = Fibre போன்ற அணிகலன்; அது தாலியாத் தான் இருக்கணும் ன்னு அவசியமில்லை! போதுமினோ நேரிழையீர் ன்னு கன்னிப் பெண்களைப் பார்த்துக் கோதையும் கேக்குறாளே!
      ஆனா, இந்தப் பாட்டில், அது தாலி; ஏன்னா, அதான் நிறைவு நிகழ்ச்சி; இழை-அணி-“சிறப்பு” வேற! அப்பறம் முதலிரவு துவங்கிடுது!

      சிறப்பான கருத்துக்களுக்கு நன்றி!

      Like

  5. Bhaskar says:

    மிக நன்றாக எழுதுகிறீர்கள் ஐயா. தொடரட்டும் உங்கள் பணி. தாலி சிலப்பதிகாரத்தில் வருவது குறித்து அந்த காலத்தில் கண்ணதாசனும், ம.பொ.சி யும் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் சிந்தனைக்கு நல்ல விருந்து. அதைப் பற்றியும் நீங்கள் எழுதலாம். கம்பரோடு இளங்கோவும் சேர்ந்தால் எவ்வளவு சுவையாக இருக்கும். நன்றி.

    Like

    • நன்றி பாஸ்கர்!
      கண்ணதாசன் – ம.பொ.சி என்ன பேசிக்கிட்டாங்க ன்னு சுருக்கமாச் சொல்லலாமே? அவர்கள் காலத்தில் இல்லாத இளசுகள் எங்களுக்கும் ஆர்வம் தூண்டுது:)

      //கம்பரோடு இளங்கோவும் சேர்ந்தால்//

      சேர்ந்தால்-ஆஆ? சேர்ந்தாச்சி; தேரா மன்னா பதிவும் இட்டாச்சி:)

      இந்த வலைப்பூ..
      முச்சங்கம் + சங்கம் மருவிய காலமும் சேர்த்தே தான்!
      சங்கம் மருவிய -ன்னாலே கீழ்க்கணக்கோடு, சிலம்பும், மேகலையும் வந்து விடும்:)

      Like

  6. வணக்கம் இரவி! கொஞ்சம் காலம் தாழ்த்தி வந்திருக்கேன். ஊர் சுத்துனதால் நேரம் இல்லை. ;)

    365பா பிறகு இது. இனி தினம் தினம் தீபாவளி தான். ஆர்வமாகக் காத்திருப்போம். முதல் பதிவே அமர்க்களமாக இருக்கு.

    //தமிழர் திருமணத்தன்று மட்டும் தாலி அனிந்தார்கள் // இந்த செய்தி புதிது.

    தாலி குறித்து 60 வருடங்களுக்கு முன்னமே சிலம்பின் செல்வர் மா. பொ. சியும், கண்ணதாசனும் சண்டையிட்டது நினைவுக்கு வருது. மா. பொ. சி, சிலம்பு, புறநானூறு என்று சங்கப் பாடல்களில் இருந்து சில வரிகளை மட்டும் எடுத்தாண்டு, தமிழர் தாலி கட்டிக் கொள்வதை நிறுவ முயற்சித்தார். கண்ணதாசன் அந்த கூற்றுக்கு மாற்றாக “தென்றல்” இதழில் அருமையான வாதங்களை வைத்தார். முழுக் கட்டுரையும் கண்ணதாசனின் “வனவாசம்” நூலில் படிக்கலாம்.

    நீங்க தந்திருக்கும் ஒவ்வொரு பாடலும் நன்றாக இருக்கு. நன்றி.

    Like

    • Hi Sree
      தினம் தினம் தீபாளியா? நடத்துங்க:)

      ஓ, வனவாசம் நூலில் இருக்கா? Dank u, படிச்சிடறேன்:)
      பாஸ்கரும் சொல்லியிருந்தாரு பாருங்க, மபொசி-கண்ணதாசன் விவாதத்தை:))

      Like

  7. psankar says:

    சேர்த்து வைத்து பின்னாளில் படித்துக் கொள்கிறேன். இப்போதைக்கு reader ல் தொடர்ந்து கொள்கிறேன். உங்கள் முயற்சி தொடர, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    Like

  8. இரவி – அண்மையில் தான் இந்த பதிவைப் பற்றி தெரிந்தது. அதனால் இப்போது தான் வர முடிந்தது.

    அகநானூற்று முதலிரவை நன்கு விளக்கியிருக்கிறீர்கள்.

    படித்தவரையில், ‘சிறுவரை திற’ என்பதற்கு ‘சிறிதளவு திற’ என்பதே பொருத்தமான பொருளாகக் காண்கிறேன். பிறைநுதல் பொறி வியர் ஆற்ற வரையைத் திறத்தலும் அரையைத் திறத்தலும் பொருந்தவில்லை, சுவையான பொருளாக இருந்தாலும். :)

    ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வியவன் தலைவன். உறை கழி வாளின் உருவு பெயர்ந்து வந்தவள் தலைவி. அப்படித் தான் தோன்றுகிறது.

    Like

    • நன்றி குமரன் அண்ணா;
      நான் இந்தத் தளத்தைப் பந்தலிலோ/ வேறு பதிவிலோ எங்கும் விளம்பரப்படுத்தவில்லை;
      மெளனம் பேசியதே:)

      உண்மையே! வியர்ப்பதால், காற்று வர, “சற்றே” திற என்பதே நேரடிப் பொருள்;

      ஆனா, சொற்களுக்கு, இப்படி இரு வேறு வகையில் பொருள் கொள்ளும் வாய்ப்பு உள்ள போது,
      நான் எப்படிக் கொள்வேன் என்பது ஒங்களுக்கே தெரியும்:)
      ஆனா, //அவ நெற்றியில் வியர்க்குதே-ன்னு தான், இந்த இடங்களில் எல்லாம் திறக்கச் சொல்லுறான்// -ன்னும் will highlight that inconsistent but pleasurable meaning:)

      Like

  9. அன்பின் கேயாரெஸ் – காதலில் காமத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் தான் ஒன்றும் அறியாச் சிறுவன் எந்த் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வது நகைப்புக்குரியது. படங்களூம் சொற்களும் தேடிப் பிடித்து தேர்ந்தெடுத்துப் போடப்பட்டிருக்கும் அருமையான் பதிவு இது. நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

    Like

    • //காதலில் காமத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்//

      சீனா சார், நீங்களும் என்னைய ஓட்டத் துவங்கியாச்சா?:)

      Like

  10. ramanchennai says:

    காதல்கலித்தொகை பாடல் 69

    கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய
    மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக,
    ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல்,

    Like

  11. Krishnan says:

    மைப்பு அறப் புழுக்கின், நெய்க் கனி ,வெண் சோறு
    வரையா வண்மையொடு, புரையோர்ப் பேணி—இதில் இறைச்சி எனும் பொருளில் வரும் சொல் எது؟

    Like

  12. Ganapathy says:

    அருமை அருமை இது போல் எளிமையாய் பள்ளிகளில் படிப்பித்திருந்தால் உண்மையில் செய்யுள் அனைவருக்கும் அமிழ்தாகவே இருந்திருக்கும், நன்றி .

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)